Breaking

இந்திய மாநிலங்களில் நமது தமிழகம் சாலை விபத்து பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது....ஒரு பார்வை..




இந்திய மாநிலங்களில் நமது தமிழகம் சாலை விபத்து பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது....ஒரு பார்வை..

2018-ல் 63,920 சாலை விபத்துகளை சந்தித்த தமிழகம், இந்திய மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது. ஆனால் இது 2017-ல் நடந்த விபத்துகளை (65,560) விட 2.5 சதவீதம் குறைவாக உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரகத்தின், போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2018-ல் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,216 ஆக இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இது 2017-ல் 16,157ஆக இருந்து 2018-ல் 24 சதவீதம் குறைந்துள்ளது.

2014 முதல் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. 

இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை வாகனங்களில் சுமார் 10 சதவீதத்தை கொண்டுள்ள தமிழகத்தில் 2018-ல் நடந்த சாலை விபத்துகளின் விகிதம் இந்திய அளவில் 13.7 சதவீதமாக உள்ளதால் வாகன விபத்துகளை குறைக்க மேலும் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பெரிய அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் ஓட்டுனர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி அளித்தல் (குறிப்பாக கனரக வணிக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு) ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் உள்ள விதிமுறைகளை கடைபிடிப்பதில் கடுமை, போக்குவரத்து காவலர்களுக்கு மிக நவீன தொழில்நுட்பங்களை அளித்தல், சாலை விதிகளை மீறுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தல், கடுமையான அபராதம் விதித்தல், வாகனங்களை கையகப்படுத்துதல், தொடர்ந்து விதிமீறல் புரிபவர்களுக்கு சிறை தண்டனை போன்ற முன்தடுப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.


கிராமப்புற பகுதிகளில் விபத்துகள் அதிகம்:-

மாநில மற்றும் மத்திய நெடுஞ்சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் குக்கிராமங்களில் அதிக அளவில் மக்கள் வசிப்பதால் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ஊரகப்பகுதிகளில் சாலை போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுவது குறைவாக உள்ளது.

இப்பகுதிகளில் இரவு நேரங்களில் அதிவேக பயணிகள் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து காவலர்களே இல்லாத நீண்ட தூர சாலைகளில் செல்கின்றன. தமிழகத்தில், 2018-ல் உயிரிழப்பை ஏற்படுத்திய 11,375 சாலை விபத்துகளில் 7,093 விபத்துகள் கிராமப்புற பகுதிகளில் நிகழ்ந்தன. இத்துடன் ஒப்பிடுகையில் 4,059 விபத்துகள் நகர்ப்புறங்களில் நடந்தன.

2018-ல் தமிழகத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 839 ஓட்டுனர்கள் உயிரிழந்தனர். 5,067 ஓட்டுனர்கள் காயம் அடைந்தனர். 775 பயணிகள் உயிரிழந்தனர். 4,988 பேர் சீட் பெல்ட் அணியாததால் காயம் அடைந்தனர்.

2018-ல் தலைக்கவசம் அணியாமல் சென்றதில் 3,956 வாகன ஓட்டிகள் உயிரிழந்தனர், 20,378 வாகன ஓட்டிகள் காயம் அடைந்தனர். 1,092 பயணிகள் இறந்தனர். 6,160 பயணிகள் காயம் அடைந்தனர்.

சாலை விபத்துகளில் சிக்கியவர்களில் 50,519 பேர்களிடம் முறையான ஓட்டுனர் உரிமம் இருந்தது. 2,247 பேர்களிடம் பயிற்சி பெறுவோர் ஓட்டுனர் உரிமம் இருந்தது. 6,454 பேர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள்.


சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கைகள்:-

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரகம் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களை குறைக்க தமிழக அரசு செய்த முயற்சிகளை பற்றி தனியாக குறிப்பிட்டு, இது உண்மையில் குறிப்பிடத்தக்க முயற்சி. தமிழக அரசு மேற்கொண்ட பல வகையான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முன்னெடுப்புகளின் விளைவு இது என்று கூறியுள்ளது.

நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஜி.பி.எஸ் வசதிகள் கொண்ட நெடுஞ்சாலை ரோந்து குழுக்களை கண்காணிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக ‘வாகன்’ மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பி.ஓ.எஸ்.கள் மூலம் மின் ரசீதுகள் (இ-செலான்கள்) வழங்கும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேகக்கட்டுப்பாடுகளை செயல்படுத்த வாகன எண்களை படிக்கும் தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

தேசிய அளவில் 2018-ல் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் விகிதம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் டிரெய்லருடன் கூடிய கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் விபத்துகள் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதில் இரண்டு சக்கர வாகனங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது.


2018-ல் நடைபெற்ற 4,67,044 சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களின் பங்கு 35.2 சதவீதமாக உள்ளது. இதற்கு அடுத்து 24.3 சதவீதத்துடன் நான்கு சக்கர வாகனங்கள் (கார்கள், ஜீப்கள், வேன்கள், டாக்சிகள்) உள்ளன. இதர கனரக வாகனங்களின் பங்கு 12.3 சதவீதமாகவும் இதர வகைப்படுத்தப்படாத வாகனங்களின் விகிதம் 7 சதவீதமாகவும் உள்ளது.

2018-ல் சாலை விபத்துகளில் ஏற்பட்ட 1,51,417 உயிரிழப்புகளில் இரு சக்கர வாகனங்களின் பங்கு 35.2 சதவீதமாக முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து கார்கள், ஜீப்கள், வேன்கள், டாக்சிகளின் பங்கு 12.3 சதவீதமாக உள்ளது. டிரக்குகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்களின் பங்கு 15.8 சதவீதமாகவும், இதர வகை வாகனங்களின் பங்கு 9.3 சதவீதமாகவும் உள்ளது.

இதர வகைகள் என்ற பிரிவில் பாதசாரிகள், மிருகங்கள், மரங்கள் மற்றும் இதர நிலையான பொருட்களும் அடங்கும்.

வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிதல், பாதுகாப்பு பெல்ட்டுகள் அணிதல், கைப்பேசிகள் பயன்படுத்தாமை, வீரசாகச செயல்கள் ஈடுபடாமை, அதீத வேகத்தில் ஓட்டுதலை தவிர்த்தல், முன்னெச்சரிக்கையாக இருத்தல், சாலையில் செல்லும் இதர வாகனங்கள் மீது கவனம் செலுத்துதல், முக்கியமாக இரவு நேரங்களில், முறையான ஓட்டுனர் உரிமம் வைத்திருத்தல், வாகனங்களுக்கு தொடர் பராமரிப்பு, வாகனங்களில் அதீத எடைகளை ஏற்றாமல் தவிர்த்தல் மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றல் போன்றவற்றின் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று சாலை விபத்துகளினால் ஏற்படும் வழக்கை கையாள்பவர்கள் கூறுகின்றனர்.

சாலை விபத்துகளை குறைக்க மோட்டார் வாகனசட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு இந்த ஆண்டு நிறைவேற்றியது. ஆனால் இதை நிறைவேற்றும் இறுதி பொறுப்பு மாநில அரசுகளிடம் தான் உள்ளது.

No comments:

Powered by Blogger.