Breaking

செம்மரம் என்றால் என்ன?



'டெரோகார்பஸ் சந்தாலினஸ்' (Pterocarpus santalinus) எனும் தாவரவியல்  பெயர் கொண்ட செம்மரம் மணமில்லா சந்தன மர வகையைச் சார்ந்தது ஆகும்.

இது பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில்தான் வளரும். சுமார் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் 8 அல்லது 10 மீட்டர் வரை வளர்ந்து விடும். அதன்பிறகு வளர்ச்சி குறையும். 2,200 ஆண்டுகள் கூட செம்மரம் அழியாமல் வளரும்.

அதனுடைய தண்டுப் பகுதி பயன்படுத்தும் அளவுக்கு வளர்வதற்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை பிடிக்கும்.

இந்த வகை மரம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் வளர்வதில்லை.

இந்த மரம் குறிப்பாக எங்கே வளர்கிறது?

முட்புதர் மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ள மத்திய தக்கான பீடபூமிப் பகுதியில் 500 அடி முதல் 3 ஆயிரம் அடிக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த மரங்கள் வளர்கின்றன.

புவியியல் ரீதியாக, கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களின் பலகொண்டா மற்றும் சேஷாசலம் திருப்பதி மலைகள், அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்கள், கர்னூல் மற்றும் பிரகாசத்தில் உள்ள நல்லமல்லா காடுகள் மற்றும் நெல்லூரில் சில பகுதிகள் ஆகியவற்றிலும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் சில இடங்களிலும் என மொத்தமாக 5,200 சதுர கிமீ பரப்பளவில்தான் இந்த மரங்கள் வளர்கின்றன.

இது ஏன் கடத்தப்படுகிறது

இந்த மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. இந்த மரங்களை வெட்டுவது சட்டப்படி குற்றம் ஆகும். மேலும் ஏற்றுமதி செய்வதற்கும் தடை உள்ளது. தனியார் இடங்களில் வளரும் செம்மரங்களை வெட்டவும் தடை உள்ளது. சீனா மற்றும் ஜப்பானில் செம்மரத்தால் செய்யப்பட்ட அறைகலன்கள், செஸ் விளையாட்டு பொருட்கள், இசைக் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பது கவுரவமாகக் கருதப்படுகிறது. கள்ளச் சந்தையில், தரத்தைப் பொறுத்து ஒரு டன் செம்மரத்தின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை விலை போகிறது.

செம்மரத்துல அப்படி என்ன இருக்கு?

செம்மரத்தின் இலை, பட்டை, மரத்தண்டு, பூக்கள் மற்றும் வேர்பாகங்கள் அனைத்தும் மருத்துவ மற்றும் பொருளியல் பயன்கொண்டவை. இம்மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகை கேன்சர் குணமாகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள், மூலம் மற்றும் வயிறு சம்பந்தமான வியாதிகள் குணமடைகிறது. அத்துடன் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பையும் கரைப்பதுடன், தோல் சம்பந்தப்பட்ட நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.    இதன் இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம் போன்றவற்றுக்கு எதிராக பயன்படுகிறது.
ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் மட்டுமின்றி பழங்குடி மருத்துவத்திலும் இந்த மரக்கட்டையின் சாந்து (செஞ்சாந்து) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மருத்துவத் தமிழில் செம்மரம், பிசனம், கணி, ரத்தச் சந்தனம், செஞ்சந்தனம், உதிரச் சந்தனம் என்ற பெயர்களில் செம்மரம் அழைக்கப்பட்டுவந்துள்ளது. ஆண் மலட்டுத்தன்மை, மூட்டுவலி, மூலம், வெட்டுக்காயம், வீக்கம், ரத்தபேதி, சீதபேதி, பாம்புக்கடி, தோல் நோய்கள், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகளில் செம்மர வைரக்கட்டையின் சாந்தும் சாறும் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

மருத்துவ அறிவியல் துறை வளர்ச்சியடையத் தொடங்கியவுடன் பாரம்பரிய மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்ட செம்மரம் போன்ற தாவரங்கள், மறுதலை மருந்துமூல ஆய்வியல் (Reverse pharmacognosy) என்ற தற்கால அறிவியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் வேதியியல் அடிப்படைகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. செம்மர வைரக்கட்டைகளில் இருந்து பெறப்படும் முக்கியமான வேதிப்பொருட்கள் சாண்டலால்கள் (இவை சந்தன மரக்கட்டையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன) மற்றும் டீரோஸ்டில்பீன்கள். இந்த இரண்டுமே அழகு சாதனப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

மலட்டுத்தன்மைக்கு…

இவற்றில் டீரோஸ்டில்பீன்கள் தோலின் நிறத்தை மாற்றும் பசைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. நொதிச்செயல்களை (தைரோசினேஸ் என்ற நொதி) கட்டுப்படுத்துவதன் மூலம், தோலின் நிறம் கருப்பு, பழுப்பாக மாறுவதை இந்த வேதி பொருட்கள் தடுக்கின்றன. கருப்பு, பழுப்புத் தோல்களை வெண்மையாக்குவதையும் இந்தப் பொருட்கள் கட்டுப்படுத்துகின்றன. மேலும், தோலின் மேல் புறஊதாக் கதிர்களின் தாக்கம் ஏற்படாமல் இவை பாதுகாக்கின்றன. இம்மரத்தில் உள்ள 16 சதவீதச் சாண்டலால்களும், பலவித மருத்துவப் பயன்களைக் கொண்டவை. இவற்றை எல்லாம்விட, இம்மரம் தரும் முக்கிய மருத்துவப் பயன் ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுவதுதான்.
இதன் மருத்துவ குணத்தை அறிந்தே முன்னோர்கள் குழந்தைகள் விளையாடும் மரப்பாச்சி பொம்மைகளையும், விளையாட்டு சாதனங்களையும் இந்த மரத்திலேயே செய்து கொடுத்தனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியுடன், அதீத திறமையுடன் குழந்தைகள் விளங்கினர்.  கேரள மாநிலத்தில் 95 சதவீத வீடுகளிலும், ஓட்டல்களிலும் தினமும் குடிநீரை சுத்திகரிக்க செம்மரக்கட்டை தூளை பயன்படுத்துகின்றனர்.

2014ம் ஆண்டு வரை, இந்த வகை மரங்கள் கடத்தப்படும்போது கைப்பற்றினால், அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆந்திராவில் சுமார் 10 ஆயிரம் டன்களுக்கு மேலான மரங்கள் சேகரமாகிவிட்டதால், அந்தத் தடை நீக்கப்பட்டது.

No comments:

Powered by Blogger.