SCIENCE ARTICLES - வெளிச்சம் தந்த எடிசன் பற்றி அறிவோமா
‘நீ ஒன்றுக்கும் லாயக்கற்றவன்’ என்று நம்மைப் பார்த்து யாராவது சொன்னால், நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அவரோடு நிச்சயம் சண்டை போடுவோம். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன் அப்படியல்ல; பள்ளிக்கூடத்தில் படிக்க லாயக்கற்றவர் என்று தன்னைத் தூற்றியவர்கள்முன் ஆயிரத்துக்கும் அதிகமான கண்டுபிடிப்பு களை நிகழ்த்தி, தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர். ஆனால், அதற்காக அவர் தாண்டிவந்த தடைகள் பலப்பல.
1847-ம் ஆண்டு அமெரிக்காவின் மிலனில் தனது பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார் எடிசன். டிஸ்லெக்சியா என்னும் நோயினால் பாதிப்படைந்த எடிசன், படிக்கவும் படித்ததைப் புரிந்துகொள்ளவும் கஷ்டப் பட்டார். இதனால் பள்ளியிலிருந்தே நீக்கப்பட்டார்.
எடிசனின் தாய் ஓர் ஆசிரியை என்பதால் அவருக்கு வீட்டிலேயே பாடம் சொல்லித்தர ஆரம்பித்தார். சிறுவயது முதலே ஆராய்ச்சி செய்வதில் அலாதி ஆர்வத்தோடு இருந்தார் எடிசன்.
வீட்டிலிருந்து படித்துவந்த எடிசன் சிறுவயதில் ஏற்பட்ட காய்ச்சலாலும், ஒரு ரயிலில் ஆய்வு செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தினால், கோபம் அடைந்த ரயில்வே மாஸ்டர் பலமாக அறைந்ததினாலும் காது கேட்கும் திறனை இழந்தார். என்றாலும் மனம் தளராமல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். ஊமைப்படங்களைப் பேசவைக்கும் போனோக்ராஃப் ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரே வாரத்தில் மீண்டும் அதை உருவாக்கினார்.
அவரது முக்கிய கண்டுபிடிப்பான குண்டு பல்பை ஒளிரவைக்கப் பயன்படும் இழைக்காக மலேசியா வரை தேடிப்போனார்.
10,000 பொருட்களைச் சோதனை செய்த எடிசன் தோற்றுவிட்டார் என்றே எல்லாரும் சிரித்தார்கள். எடிசனோ, ‘நான் தோற்கவில்லை. பத்தாயிரம் பொருட்களால் பல்பினை ஒளிரவைக்க முடியாது என கற்றுக்கொண்டேன்’ என்றார். இறுதியாக, டங்ஸ்டன் இழைகளால் பல்பை ஒளிரவைக்க முடியும் என்று கண்டுபிடித்தார்.
எடிசன் இறந்தபோது, அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடம் விளக்குகள் அணைக்கப்பட்டு, ‘ஒருவேளை, எடிசன் என்கிற மனிதன் பிறக்காமல் போயிருந்தால், உலகம் இப்படித்தான் இருந்திருக்கும்’ என்றார்கள்.
1093 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எடிசனின் வாழ்க்கை, நமக்கு தடைகளைத் தாண்ட வைக்கும் மாமருந்து!
Attachments area
No comments: