சுற்று சூழல் மாசு இல்லாத மூங்கில் தண்ணீர் ‘பாட்டில்’ விரைவில்..
பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று பொருளை தயாரிப்பது சவாலானதாக இருக்கிறது. சிலவகை மாற்றுப்பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் அவை விலை அதிகமாக இருக்கின்றன. ‘ஸ்டைலான’ தோற்றப்பொலிவு இல்லை என்ற குறைபாடும் அதனை பயன்படுத்துவதற்கு தயக்கத்தை ஏற்படுத்துகிறது.
அந்த குறையை போக்கும் விதத்தில் மூங்கில்களை கொண்டு பாட்டில்கள் வடிவமைத்து இருக்கிறார் திரித்திமேன் போரா. 36 வயதாகும் இவரது பூர்வீகம், அசாம். ஐ.ஐ.டி.யில் படித்தவர். திரித்திமேனுக்கு சிறுவயது முதலே கைவினை தொழிலில் ஈடுபாடு அதிகம். 16 வயதிலேயே சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கி கைவினை தொழிலில் ஈடுபட்டார். தனது தம்பி கவ்ரவ் போராவுடன் சேர்ந்து கைவினை தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
பிளாஸ்டிக் பாட்டிலுக்கு மாற்று பொருளை மூங்கிலை கொண்டு தயாரிக்க திட்டமிட்டவர் அதற்காக ‘பாலுகா’ வகை மூங்கிலை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
மூங்கில்களை பாட்டில் அளவுக்கு வெட்டுவது, உலரவைப்பது, நெருப்பில் வாட்டி வடிவமைத்து, பாட்டில்களாக மாற்றுவது, மூடியை செதுக்குவது, பாலீஷ் செய்வது என ஒரு பாட்டிலை உருவாக்குவதற்கு பலகட்டங்களாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார். ஆரம்பத்தில் பாட்டில் உருவாக்கத்திற்கு சிரமப்பட்டவர் இப்போது ஐந்து மணி நேரத்தில் ஒரு பாட்டிலை உருவாக்கி விடுகிறார். ஆரம்பத்தில் இவர் தயாரித்த மூங்கில் பாட்டில்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையே இருந்திருக்கிறது.
வெளிநாட்டினர்தான் மூங்கில் பாட்டிலின் மகத்துவத்தை புரியவைத்திருக்கிறார்கள். மொத்தமாக 200 பாட்டில்களை வடிவமைத்து தருமாறு திரித்திமேனிடம் கூறி இருக்கிறார்கள். பளபளப்பை விரும்பாமல் இயற்கையை விரும்புவதால் மூங்கில் பாட்டில்களை மொத்தமாக வாங்கியிருக்கிறார்கள்.
‘‘எனக்கு முதல் ஆர்டர் இங்கிலாந்தில் இருந்து வந்தது. 200 மூங்கில் பாட்டில்கள் செய்து தருமாறு கேட்டார்கள். பாட்டில் மூங்கிலின் வெளிப்புறத்தில் பாலீஷ் செய்யவோ, வர்ணம் பூசவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். அதற்கு முன்பு வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த தன்மை கொண்ட எண்ணெய்யை பயன்படுத்தி பாலீஷ் செய்து வந்தேன்’’ என்கிறார்.
இப்போது திரித்திமேன் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே பாட்டிலுக்கு பாலீஷ் செய்து கொடுக்கிறார். ரசாயனம் கலக்காமல் கடுகு எண்ணெய்யால் பாலீஷ் செய்கிறார். முழுக்க முழுக்க கைளாலேயே பாட்டிலை தயாரிப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது மாதம் 1500 பாட்டில்களை தயாரிக்கிறார்.


No comments: