ஒரு கிலோ கிராம் என்பது எவ்வளவு எடை? என்பதற்காக சுமார் 130 ஆண்டுகளாக இருந்து வந்த வரையறை, நவீன காலத்துக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்வோமா.
ஒரு கிலோ கிராம் என்பது எவ்வளவு எடை? என்பதற்காக சுமார் 130 ஆண்டுகளாக இருந்து வந்த வரையறை, நவீன காலத்துக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.
பிரான்ஸின் வெர்சாய் நகரில் நடைபெற்ற சர்வதேச எடை மற்றும் அலகுகள் மாநாட்டில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முடிவுக்கு சுமார் 60 நாடுகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் ஆதரவு அளித்தனர்.
கடந்த 1889-ஆம் ஆண்டிலிருந்து, பிரான்ஸில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, லே கிராண் கே என்று பெயரிடப்பட்டுள்ள பிளாட்டினம் உலோகக் கலவையிலான உருளை வடிவத் துண்டு என்ன எடையோ, அந்த எடைதான் ஒரு கிலோ கிராம் என்பது வரையறையாக இருந்து வருகிறது.
எனினும், காலப்போக்கில் வெப்ப நிலை மாற்றம், அரிப்பு போன்ற காரணங்களால் அத்தகைய பொருள்களின் எடை குறையும் என்பதால், அந்த வரையறை முழு துல்லியமற்றது என்று விஞ்ஞானிகளிடையே கருத்து நிலவி வந்தது.
இந்த நிலையில், ஒரு கிலோ என்பதற்கான வரையறையை பிளாட்டினம் துண்டுக்கு பதிலாக, மின்காந்தக் கருவியை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைப்பதற்கான தீர்மானம் வெர்சாய் நகரிலுள்ள சர்வதேச எடை மற்றும் அலகுகள் மாநாட்டில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. உலகம் முழுவதிலும் தங்களது நாட்டின் சார்பில் கலந்து கொண்ட பெரும்பாலான விஞ்ஞானிகள், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மேலும், கிலோ கிராம் மட்டுமின்றி, மின்சாரம் (ஆம்பியர்), வெப்பம் (கெல்வின்), அணுக்கள் போன்றவற்றின் அடிப்படைத் துகள்களின் அளவு (மோல்) ஆகியவற்றின் அலகுகளும் பழைய மாதிரி பொருள்களின் அடிப்படையில் இருந்து வந்ததற்கு பதில், நவீன மின்காந்த முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது, அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று விஞ்ஞானிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எடை மற்றும் பிற அலகுகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம், வரும் 2019-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.


No comments: