இருட்டைப் பார்த்து குழந்தைகள் அதிகமாக பயப்படுகிறார்கள்
பொதுவாக இருட்டைப் பார்த்தால் எல்லோருக்கும் பயம் ஏற்படத்தான் செய்யும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். அதேபோன்று தான் குழந்தைகளும் இருட்டை பார்த்து பயப்படுகின்றனர்.
மேலும் தாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று நம்புகிற இடங்களில்கூட குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பை எதிர்பார்ப்பார்கள். இருட்டிலிருக்கும்போது இன்னும் அதிகமான அரவணைப்பை எதிர்பார்ப்பார்கள். அதை தந்துவிட்டாலே போதும். குழந்தைகளுக்கு அந்த பயம் போய்விடும்.
உலகத்தை பற்றி எதுவுமே அறியாத, சின்ன குழந்தைகள்கூட இருட்டை கண்டு பயப்படுவது ஏன்? அந்த பயத்தை எப்படி போக்கலாம்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இதற்கு காரணம், வீட்டில் இருக்கிற பெரியவர்கள், குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்காக கதை சொல்கிறேன் என்று, 'இருட்டுல பூதம் இருக்கும். அது உன்னை தூக்கிட்டு போயிடும்" என்கிற ரீதியில் பயமுறுத்துவதுதான்.
பயம் எப்படி உருவாகிறது?
பெரும்பாலும் குழந்தைகளுக்குள் பயம் எப்படி உருவாகிறது என்று பார்த்தால் பூச்சாண்டி வரான், ஊசி போட சொல்றேன், இருட்டு என வீட்டில் உள்ள பெரியவர்கள் சில விஷயங்களைக் காட்டி பயத்தை உருவாக்குகின்றனர்.
இருட்டில் எதுவும் பார்க்க முடியாததால் பாதுகாப்பு இல்லாததது போல் உணர்கிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு இருட்டு என்றால் பயமாக இருக்கிறது.
பயத்தை எப்படி போக்கலாம்?
சில குழந்தைகள் மட்டும் இருட்டுக்கு அதிகமாக பயப்படுவார்கள். அவர்களுக்கு மட்டும், இருட்டை கண்டு பயப்பட தேவையில்லை என்று தைரியம் தந்து, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லித் தரலாம்.
குழந்தைகளின் கையை பிடித்து கொண்டோ, அவர்களை தூக்கிக்கொண்டோ இருட்டுக்குள் பெற்றோர்களும் செல்லலாம்.
குழந்தைகளிடம் அன்புடனும், ஆதரவுடனும் பேசி பயத்தை போக்க முயற்சிக்க வேண்டும்.
சத்தம் அல்லது நிழலை கண்டு குழந்தைகள் பயந்தால், அந்த நேரத்தில் அவர்களிடம் சத்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்பதை விளக்கமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
பயத்தை தவிர்க்க குழந்தைகளிடத்தில் மனதைரியத்தை உருவாக்க வேண்டும்.
விளக்கை அணைத்துக்காட்டி இருட்டை கொஞ்சம் பழக்கப்படுத்த வேண்டும். திடீரென்று விளக்கு அணைந்தாலும் பயப்படாமல் இருந்த இடத்திலேயே அமைதியாக இருக்கவேண்டும் என்று சொல்லித் தர வேண்டும்.


No comments: