Breaking

உடலைத் துளைத்துச் செய்யும் பிரேதப் பரிசோதனைக்கு குட் பை - வருகிறது புதிய தொழில்நுட்பம்!










இந்தியாவில் விரைவில் ஸ்கேனிங் மற்றும் இமேஜிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், இஸ்ரேல் எனப் பல்வேறு நாடுகள் இந்த முறைக்கு மாறிவிட்டன. ஆசியக் கண்டத்தைப் பொறுத்தவரை மேற்கு ஆசிய நாடுகளும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன.


பொதுவாக உயிரிழந்தவரின் உடலை அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்தி துளையிட்டும் கீறியும் பிரேத பரிசோதனை செய்வார்கள்.


பரிசோதனை முடிந்தவுடன் உடலைத் தையல்போட்டு மூடி உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள்.
ஆனால், ஸ்கேனிங் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் `வெர்ச்சுவல்' (Virtual) பிரேதப் பரிசோதனையில் உடலின் உள்ளேயிருக்கும் உறுப்புகள், எலும்புகள், திசுக்கள் அனைத்தையும் வெளியிலிருந்தே ஆராய்ச்சி செய்ய முடியும். உடலை சாதாரண ஸ்கேன் செய்வது போன்று பிரேதப் பரிசோதனையும் செய்துவிட முடியும். இதனால் உடலுக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாது. பழைய முறையில் இரண்டரை மணி நேரம் எடுக்கும் பிரேதப் பரிசோதனை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அரை மணி நேரத்தில் முடிந்துவிடும்.


இந்தப் புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பிரேதப் பரிசோதனை செய்வதற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ``ஐ.சி.எம்.ஆர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகிய இரண்டும் வெர்ச்சுவல் பிரேதப் பரிசோதனைக்கு உலக அளவில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று கற்றறிந்துள்ளன. இறந்த உடலைக் கண்ணியமாகக் கையாள்வது என்ற அடிப்படையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இயற்கையான மரணம் ஏற்படாமல் ஒருவர் மரணிக்கும்போது அந்தக் குடும்பத்தினர் மிகவும் வேதனைக்குள்ளாகியிருப்பார்கள். அந்தத் துயரச் சமயத்தில் தங்களின் அன்புக்குரியவர்களின் உடலில் பிரேதப் பரிசோதனைக்காக தையல் போட்ட நிலையிலும், கீறல் போடப்பட்ட தடயங்களையும் கண்டு மிகவும் அசௌகர்யமாக உணர்வார்கள். அதைத் தவிர்க்க இந்தப் புதிய தொழில்நுட்பம் மிகவும் உதவும். மேலும் பரிசோதனையின் முடிவுகளையும் டிஜிட்டல் முறையில் சேமிக்கும்போது மறுபரிசீலனை செய்வதற்கும் உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.