கண்ணாடி சில்லில் பல்..ஆர்கன் ஆன் எ சிப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கண்ணாடி சில்லில் பல்!
மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவ ஒரு புதிய முறை தற்போது 'ட்ரெண்டிங்' ஆகி வருகிறது. அது மனித உடல் உறுப்புகளில் இருக்கும் பலவகை திசுக்களை, இரண்டு கண்ணாடித் தகடுகளுக்களுக்கு இடையே வைத்து, உயிருடன் பாதுகாப்பது. இதை வல்லுநர்கள், 'ஆர்கன் ஆன் எ சிப்' என்பர்.இரு தகடுகளுக்குள் இருக்கும் திசுக்களுக்கு மருந்து அல்லது நச்சுப் பொருள்களை செலுத்த, சிறிய துளைகள் இருக்கும். அதன் வழியே மருந்து அல்லது நச்சுக்கள் சென்று திசுக்களின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கண்ணாடி வழியே தெளிவாக பார்க்க முடியும்.
இந்த சோதனைகள் விலங்கு சோதனைகளை தவிர்க்க உதவும்.அண்மையில், அமெரிக்காவிலுள்ள ஓரிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், முதன் முதலாக பல் திசுக்களை கண்ணாடி சில்லுக்குள் பதித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த சில்லுக்குள் நுண் கிருமிகளை செலுத்தி, பல் சொத்தையாவதற்கு, பல்லின் மேலே உள்ள எனாமல் எப்படி, ஏன் வழிவிடுகிறது என்பதை ஆராய முடியும். அதேபோல பல்லின் ஆரோக்கியம் கெடும் பிற வழிகளையும் கண்கூடாக மருத்துவர்களால் சோதித்து அறிய முடியும்.
இன்னும் சில ஆண்டுகளில், ஒரு நோயாளியின் பற்களில் சிறிதளவு மாதிரியை எடுத்து அவரது பல்லுக்கு என்ன மாதிரியான சிகிச்சை தரலாம் என்று தீர்மானிக்க முடியும் என, 'லேப் ஆன் எ சிப்' இதழில் ஓரிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments: