Pay tm, G Pay உபயோகிப்பவர்களின் கவனத்திற்காக
பண பரிவர்த்தனையை எளிதாக்கும் விதத்தில் பல செயலிகள் தற்பொழுது இணைய உலகில் கொட்டி கிடக்கின்றன. அப்படி பட்ட செயலிகளை உபயோகிக்கும் போது வேலை எவ்வளவு எளிதாகி விடுகிறதோ, அதே போல உஷாராக இல்லை என்றால் ஒட்டுமொத்த பணத்தையும் இழக்கும் அபாயமும் உள்ளது.
இப்படிப்பட்ட செயலிகளை உபயோகப்படுத்துபவர்களை குறிவைத்து திருடும் புதிய கும்பல் ஒன்றும் தற்பொழுது கிளம்பி இருக்கிறது. வளர்ந்து விட்ட டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப திருடர்களும் புதிய புதிய யுக்திகளை கண்டறிந்து ஏமாந்தவர்களிடம் பணத்தை கறந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பண பரிவர்த்தனை செயலிகளை உபயோகிக்கும் போது, பரிவர்த்தனைகளை எந்த வித ஒளிவு மறைவு இன்றி நடத்த, ஆதார் கார்ட், பேன் கார்ட் போன்ற தகவல்களை இந்த செயலிகளில் உள்ளிட்ட வேண்டி இருக்கும்.
இதனை கேவொய்சி வெரிஃபிகேஷன் என அழைக்கிறது இந்த செயலிகள்.
இந்த நடைமுறையை பயன்படுத்தி தற்பொழுது, குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து போன் செய்வதாகவும், கேவொய்சி வெரிஃபிகேஷனுக்காக உங்களது தகவல்கள் தேவை எனக்கூறி வங்கி கணக்கின் தகவல்களை பெற்று, அப்பாவி மக்களின் பணத்தை திருட துவங்கி இருக்கின்றனர் ஆன்லைன் திருடர்கள்.
இது குறித்து பேடிஎம் நிறுவனம், 'இப்படிப்பட்ட தகவல்களை தாங்கள் ஒருபோதும் கேட்கமாட்டோம், எனவே இப்படி போன்கால்கள் வந்தால் உஷாராக இருங்கள்' என தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் காவல்துறையின் இணைய குற்ற தடுப்பு பிரிவான சைபர் கிரைம் போலீசாரும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும் போது, 'ஓடிபி உள்ளிட்ட தகவல்களை பிறருடன் பகிர வேண்டாம்' என மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


No comments: