Breaking

பிப்ரவரி-23. கணிதத்தில் எண்கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் போன்றவற்றில் சாதனை படைத்த ஜெர்மன் கணித வல்லுநர், வானியலாளர்- ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்த தினம்




இன்று நினைவு நாள்:- பிப்ரவரி-23.


கணிதத்தில் எண்கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் போன்றவற்றில் சாதனை படைத்த ஜெர்மன் கணித வல்லுநர், வானியலாளர்- ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்த தினம்.

 பிறப்பு:-

ஜெர்மனியில் பிரன்ஸ்விக் நகரில்,ஏப்ரல்-30,
 1777 ஆம் ஆண்டு  பிறந்தார். தன் தந்தை கெப்பார்ட் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரும்போது, கணக்கில் தவறு 
செய்ததை 3 வயதிலே கண்டுபிடித்தார்.
இவருக்கு 7 வயது இருக்கும்போது, வகுப்பில் மாணவர்களை அமைதிப்படுத்த கடினமான கணக்கு ஒன்றைக் கொடுத்து போடச் சொன்னார் ஆசிரியர். கண்மூடி திறப்பதற்குள்,
1 முதல் 100 வரையில் உள்ள எண்களில் 50 ஜோடிகள் இருக்கின்றன, அதாவது, 
{1, 100}, {2, 99}, {3, 98}, ஆகும். ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை 101. ஆக 50 ஜோடிகளின் கூட்டுத்தொகை 5050 என்று
முடித்து ஆசிரியரை அசரவைத்தார்.

கணித நூல்களில் உள்ள பிழைகளைக் கண்டறியும் அளவுக்கு 12 வயதிலேயே திறன் பெற்றிருந்தார். இவரது கணித ஆற்றல் பற்றி கேள்விப்பட்ட ஃபெர்டினான்ட் பிரபு இவருக்கு உதவித்தொகை வழங்கி மேற்கொண்டு படிக்க உதவினார்.பிரபலமான கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிறகு தனது PH. D பட்டத்திற்காக ஆய்வுக் கட்டுரை எழுதத் தொடங்கி எடுத்துக்கொண்ட பொருள் இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றமாகும்.
'சிக்கலெண் கெழுக்களுடன் n-கிரமமுள்ள ஒவ்வொரு பல்லுறுப்புச் சமன்பாட்டிற்கும் 
சிக்கலெண் தளத்தில் n தீர்வுகள் இருக்கும்'என்றார்.
1799இல் இவ்வாய்வுக்கு ஹெம்ஸ்டெட் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டமளித்தது. 

ஆராய்ச்சிகள்:-

பகா எண்களை ஆராய்ந்து அதில் ஏராளமான சமன்பாடுகளைக் கண்டறிந்து சோதித்தார். 
சிக்கலெண்களின் பெயரிலேயே அனாவசியமாகப் புனையப்பட்டிருக்கும் 'சிக்கல்' என்ற கருத்தை விடுவித்த முதல் கணித இயலர் ஆவார்.

இருபடிய நேர் எதிர்மை:- 

p-1/2,q-1/2, இரட்டைப்படை எண்ணாகுமேயானால், p மாடுலோ qக்கு ஒரு இருபடிய எச்சமாக இருந்தால், இருந்தால்தான், q மாடுலோ p க்கு ஒரு இருபடிய எச்சமாக இருக்கும். p-1/2.q-1/2
ஒற்றைப்படை எண்ணாகுமேயானால், 
p மாடுலோ q க்கு ஒரு இருபடிய எச்சமல்லாததாக இருந்தால், இருந்தால்தான், 
 qமாடுலோ p க்கு இருபடிய எச்சமாக இருக்கும்.
இந்த விதிக்குப்பெயர் 
இருபடிய நேர் எதிர்மை (Law of Quadratic Reciprocity) என்று பெயரிட்டு அழைத்தார்.

17 பக்க ஒழுங்குப் பலகோணம் வரைமுறை:-

ஒற்றைப்படை எண்ணிக்கை n உள்ள பக்கங்களைக் கொண்ட ஒழுங்குப் பலகோணம் மட்டக்கோல், கவராயம் இரண்டைக் கொண்டு வரையப்படவேண்டுமென்றால், n ஒரு ஃபெர்மா பகா எண்ணாகவோஅல்லது அவைகளின் பெருக்குத்தொகையாகவோ இருந்தாக வேண்டும் என்று கண்டுபிடித்தார். 

யூக்ளீடற்ற வடிவியல்:-

யூக்ளீட் காலத்திலிருந்து 
இணை முற்கோள் கணித உலகத்திற்குப்பெரிய தலைவலியாகவே இருந்து வந்தது. 
அதற்கு நிறுவலொன்று
19 வது நூற்றாண்டில் லொபசெவிஸ்கி, போல்யாய் இருவருக்கும் முன்பே இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார்.
1817 இல் ஹனோவர் மாகாணத்திற்கு புவிப்பரப்பு அளவைகள் எடுக்க
புதிய 'ஹெலியொட்ரோப்' என்ற  பயனுள்ள சாதனம் ஒன்றை உண்டாக்கினார். 

கோட்பாட்டு வானியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 
சிறுகிரகங்கள் இருக்கும் இடத்தைக் கணக்கிட்டுக் கூறினார். பூமியின் காந்தவியல் பண்புகள் குறித்தும் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின்போது காந்தமானியைக் கண்டறிந்தார். 

இது மட்டுமல்லாது வானியல், புவியியல், மின்காந்தவியல், இயக்கவியல், ஒளியியல் தொடர்பான பல்வேறு கருவிகள், அறிவியல் உபகரணங்களையும் கண்டறிந்தார்.

நூல்கள்:-

‘டிஸ்கொசிஷனஸ் அரித்மேடிசி’ என்ற நூலை 1801ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த நூல் இதுவரை எழுதப்பட்ட கணித நூல்களிலேயே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. 
எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியலில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல நூல்களை எழுதினார். 300-க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பணிகள்:-

1807 ஆம் ஆண்டு, கோட்டிங்கன் வானியல் கண்காணிப்பு மையத்தின் இயக்குநராகவும், அந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். 

விருதுகள்:-

லலாண்ட் பரிசு -(1809),
கோப்ளி மெடல்- (1838) போன்ற விருதுகளை பெற்றார்.


மறைவு:-

கணிதம், இயற்பியல், வானியல், புவியியல் உள்ளிட்ட களங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கிய இவர், பிப்ரவரி-23, 1855 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

சர்வதேச கணித ஒன்றியம், ஜெர்மன் கணித சங்கம் ஆகியவை 2006 ஆம் ஆண்டு முதல், இவரது பெயரில் விருதை ஆண்டுதோறும் கணித சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

No comments:

Powered by Blogger.