Breaking

பிப்ரவரி-25. அமெரிக்க அறிவியலாளர், ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர், 'சுறாப்பெண்' என்று அழைக்கப்படுபவர்- யுஜினி கிளார்க் (Eugenie Clark) மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:பிப்ரவரி-25.

அமெரிக்க அறிவியலாளர், ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர், 
'சுறாப்பெண்' என்று அழைக்கப்படுபவர்-
யுஜினி கிளார்க் (Eugenie Clark) மறைந்த தினம்.

பிறப்பு:-

அமெரிக்காவின்
நியூயார்க் நகரத்தில் 
மே-04, 1922 ஆம் ஆண்டு
ஜப்பானிய அம்மாவுக்கும் அமெரிக்க அப்பாவுக்கும் பிறந்தார். இரண்டு வயதுக்கு முன்னரே நீந்தக் கற்றுக் கொடுத்தார் அம்மா.
வீட்டிலேயே பெரிய தொட்டியை அமைத்து மீன்கள், தவளைகள், சிறிய முதலை, தண்ணீர் பாம்பு போன்றவற்றை வளர்க்க ஆரம்பிக்க தொடங்கினார்.
13 வயதில் அவரிடம் நூற்றுக்கும் அதிகமான மீன் இனங்கள் இருந்தன. கடலியல் ஆராய்ச்சியாளராக வேண்டும் என்ற கனவாக அது உருக்கொண்டது.
இளங்கலை விலங்கியலில் பட்டம் பெற்றவர், நியூயார்க் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு முது முனைவர் படிப்புக்காக கொலம்பியாப் பல்கலைக்கழகம் சென்று பயின்றார்.


பணிகள்:-

கடலியல் ஆய்வாளரிடம் உதவியாளராக வேலை செய்தார். 1968 இல் பேராசிரியராக பணிபுரிந்தார்.

ஆய்வுகள்:-

10 மாதங்கள் செங்கடலில் ஆராய்ச்சி செய்தார். 300 மீன்களின் மாதிரிகளைச் சேகரித்தார். அதில் 3 மீன்கள் புதிதாகக் கண்டறியப்பட்டவை
ஆகும்.
மிகவும் ஆபத்தான மீன்கள் என்று கருதப்பட்ட சுறா மீன்களின் மீது அவரது கவனம் திரும்பியது. 
ஸ்கூபா டைவிங் மூலம் கடலின் ஆழத்துக்குச் சென்று சுறாக்களை ஆராய்ந்தார். அதுவரை சுறாக்களுக்கு 5 செவுள்கள் இருப்பதாகத்தான் நம்பப்பட்டு வந்தது. 6 செவுள்கள் உள்ள சுறாக்களை யுஜினி கண்டறிந்தார்.

சுறாக்கள் நீந்தும்போது வேகமாகக் காற்றை உள்ளிழுத்து வெளியே விடுவதில்லை. இயக்கத்தைக் குறைத்துக் கொண்டு சுவாசிக்கின்றன என்ற விஷயத்தையும் கண்டறிந்தார். ‘மோசஸ் சோல்’ என்ற மீன் ஒருவிதமான பாலைச் சுரக்கிறது. அதிக விஷம் கொண்ட பாலின் வாசனையை வைத்து சுறாக்கள் அருகில் சென்றால், சுறாக்களுக்குத்தான் ஆபத்து. அதனால் சுறாக்கள் மோசஸ் சோல் மீன்களை நெருங்குவதில்லை என்ற உண்மையையும் கண்டறிந்தார். 
3 ஆயிரத்து 200 அடி ஆழத்தில் வசிக்கும் திமிங்கிலச் சுறாதான் மீன்களிலேயே மிகப்பெரியது என்பதையும் கண்டறிந்தார்.



சுறாக்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கக் கூடியவை என்று நினைத்துக்கொண்டிருந்த காலத்தில், ஒரு திமிங்கிலச் சுறாவின் வயிற்றில் 300 குட்டிகள் இருந்ததைக் கண்டறிந்து சொன்னார்.
350 வகை சுறாக்களில் 10 சுறாக்களே ஆபத்தானவை. மற்றவை சாதுவானவை என்றார்.

இவரது  கண்டுபிடிப்பைப் பாராட்டி, ‘ஃபிஷ் லேடி’ என்று தலைப்பிட்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.


ஆய்வுக்கூடம் நிறுவல்:-

மதிப்பு மிக்க கடல்வாழ் உயிரினங்களுக்கான ஆய்வுக் கூடமாக மதிக்கப்படும் மேட் (MOT) என்ற கடலியல் ஆய்வகத்தை ப்ரோரிடாவில் நிறுவி, ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.  இன்றைக்கு 24 பன்முக ஆராய்சித் திட்டங்களுடன் முழுநேர ஆய்வு மையமாகவும்,கல்விப்புலம்,பொது மக்களுக்கான மோட் மீன் காட்சியகத்துடன் இயங்கிவருகிறது. 


நூல்கள்:-

1969 இல் எழுதிய 'தி லேடி அண்ட் தி ஷார்க்ஸ்' புத்தகத்தில் சுறாவின் பழக்கவழக்கங்களையும், கடல் வாழ்கையையும் விவரித்து எழுதினார்.
1975ல், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜாஸ்’ படத்தைப் பார்த்தவர் பலருக்கும், ‘சுறாக்கள் என்றாலே பயங்கரமானவை, ஆட்கொல்லிகள்’ என்ற மூட நம்பிக்கை பரவியது. அது எவ்வளவு முட்டாள் தனமானது என்பதையும், சுறாக்கள் எப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டன என்பதையும் பற்றி 'சுறாக்கள் சிறப்புகளும், தவறான புரிதல்களும்' என்ற கட்டுரையை நேசனல் ஜியாகரபிக் இதழில் எழுதினார்.
3 புத்தகங்கள், 80 ஆய்வுக் கட்டுரைகள், நாளிதழ்களில் 70 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 
60 அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும், 19 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் உரையாற்றி யிருக்கிறார். 50 தொலைக்காட்சி ஆவணப் படங்களில் தோன்றியிருக்கிறார்.


விருதுகள்:-


நேசனல் ஜியாகிரப் சொசைட்டி, எக்ஸ்புலோரர்ஸ் கிளப்,
அமெரிக்க கடலடி சங்கம்,
அமெரிக்க லிட்டோரல் சொசைட்டி,
பெண் புவியியலாளர் சங்கம் ஆகியவை தங்களின் தங்கப்பதக்க விருதுகளை வழங்கின.


மறைவு:-

ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த ஒரு துறையில் துணிச்சலோடு 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த இவர்,
பிப்ரவரி-25, 2015 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.



சிறப்புகள்:-

82 வயதில் நுரையீரலில் புற்றுநோய் தாக்கியது. ஆனாலும், மனதிடத்துடன்  87ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியவுடன், 900 அடி ஆழத்துக்குள் கடலுக்குச் சென்றும்,88 வயதிலும் கடல் பயணத்தை மேற்கொண்டார்.
தன் வாழ்நாளில் ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய யுஜினியைக் 
கௌரவிக்கும் வகையில், 4 கடல்வாழ் உயிரினங்களுக்கு அவர் பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.