Breaking

மார்ச்-03. உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய கணிதவியல் மேதையான கியார்க் கேன்ட்டர் (Georg Cantor) பிறந்த தினம்




 
உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய கணிதவியல் மேதையான கியார்க் கேன்ட்டர் (Georg Cantor) பிறந்த தினம் - மார்ச் 3:

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசதியான யூதக் குடும்பத்தில் (1845) பிறந்தார். தந்தை வியாபாரி. சிட்டி பிரைமரி பள்ளியில் பயின்றார். வீட்டுக்கு வந்தும் ஆசிரியர்கள் கற்பித்தனர்.
இவரது 11 வயதில் குடும்பம் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் குடியேறியது.
சிறந்த மாணவராகத் திகழ்ந்தவர், சிறுவயதில் வயலின் வாசிக்க கற்றுக்கொண்டு, இசையிலும் பிரகாசித்தார். 1860-ல் பட்டம் பெற்றார். இவர் பொறியாளராக வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இவரோ கணிதத்தில், குறிப்பாக, திரிகோணமிதியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

இவரது கணிதத் திறன், ஆசிரியர்களை வியக்கவைத்தது. அவர்களது ஆலோசனையுடன், ஜூரிச் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். தந்தையின் மரணத்தால், படிப்பு நின்றது. சிறிதுகாலம் கழித்து பெர்லின், கோட்டிங்கன் பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்பியல் பயின்றார்.

பல மேதைகளின் கணித விரிவுரை நிகழ்ச்சிகளில் ஆர்வத்தோடு பங்கேற்றார். எண்கணித கோட்பாட்டில் ஆய்வுக்கட்டுரை எழுதி கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஸ்கெல்பாக் செமினார் என்ற அமைப்பின் உறுப்பினரானார். சிறிதுகாலம் பெர்லின் மகளிர் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஹாலே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். எண்கணிதம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டார். 1869 முதல் 1873 வரை, பல்வேறு இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார். திரிகோணமிதி ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார்.

நீண்டகால சிக்கலாக இருந்த திரிகோணமிதி தொடர்களுக்கான தீர்வைக் கண்டறிந்து, மூத்த கணிதவியலாளர்களைப் பிரமிக்க வைத்தார். கணங்களுக்கு இடையிலான தொடர்புக் கொள்கையை நிறுவினார். முடிவிலி, சீரடுக்கு கணங்களை வரையறுத்தார். மெய் எண்கள், எண்ண இயலாத முடிவிலிகள் (Uncountably Infinite) என்பதை நிறுவினார். இது ‘கேன்ட்டர்ஸ் டயக்னல் ஆர்க்யுமென்ட்’ என குறிப்பிடப்பட்டது.


பேராசிரியராக 34-வது வயதில் நியமனம் பெற்றார். ஏராளமான கோட்பாடுகளை உருவாக்கினார். நுண்ணளவு (Infinitesimal), முடிவிலி (Infinite), தொடர்ச்சி (Continuity) ஆகிய மூன்றும் கணித வல்லுநர்களுக்கு பெரும் சிக்கலாக இருந்தன. பல நிபுணர்கள் வழங்கிய விளக்கங்கள், தீர்வுகளும் முழுமையானதாக இல்லை. அதுசம்பந்தமான சந்தேகங்களைப் போக்கி, முழுமையான தீர்வு வழங்கியவர் இவர்தான்.

கணக் கோட்பாட்டை (Set Theory) கண்டறிந்தார். இதில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுவந்தார். இவரது கோட்பாடுகள் கணிதவியலுக்கு அடிப்படைக் கோட்பாடாக மாறின. மெய் எண்கள், இயல் எண்கள், எண் கணிதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார். வரைமீறு எண்கள் (Transfinite Numbers) என்ற கோட்பாட்டைக் கண்டறிந்தார்.

ஜெர்மன் கணித இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். இவரது சில கோட்பாடுகளை சில கணிதவியலாளர்கள் எதிர்த்தனர். இதனால் மனமுடைந்து காணப்பட்டவர், இலக்கியமும் தத்துவமும் பயின்றார். தத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். லண்டன் ராயல் சொசைட்டி இவருக்கு சில்வெஸ்டர் பதக்கம் வழங்கியது.

ஜெர்மன் கணித நிறுவனத்தை 1890-ல் நிறுவினார். இது பன்னாட்டு கணித விவாத அரங்கு, கணித மேம்பாட்டு கருத்தரங்குகள் நடக்கும் மையமாக செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியல் நிபுணரான கியார்க் கேன்ட்டர் 73-வது வயதில் (1918) மறைந்தார்.


No comments:

Powered by Blogger.