Breaking

சுவாசிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி

                                                               


மனித உடலில் இதயம், மூளைக்கு அடுத்தப்படியாக நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இதன் மூலம் தான் நாம் சுவாசிக்கிறோம். அப்படி சுவாசிக்கும் போது நுரையீரல் காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை, நுண்ணுயிரிகள், நச்சுக்களையும் சேர்த்து சுவாசிப்பதால், நுரையீரலில் அழுக்குகள் அதிகம் சேர்கிறது. அதோடு இன்று பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். இதனால் ஆரோக்கியமான நுரையீரல் பொசுங்கி கருகிய நிலையில் காணப்படுகிறது.

இப்படியே மாசடைந்த நுரையீரலுடன் ஒருவர் சுற்றினால், அது பல்வேறு நுரையீரல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும். எனவே அவ்வப்போது நுரையீரலை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சுத்தம் செய்யும் உணவுகள் மற்றும் பானங்களை அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.



இஞ்சி

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இஞ்சி இயற்கையாக நுரையீரலை சுத்தம் செய்ய உதவும். அதற்கு இஞ்சியை சமையலில் தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதிகாலையில் குடிக்கும் டீயிலும் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம். வேண்டுமானால், நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து குடிக்கலாம். இது சுவாச பாதையில் உள்ள நச்சுக்களை நீக்கும்.

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது கலோரி குறைவான பழமும் கூட. குறிப்பாக இதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கவும், சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும். ஒருவரது நுரையீரல் ஆரோக்கியமாக செயல்பட்டால், நுரையீரல் நோய்களை எதிர்த்து, அதை வராமல் தடுக்க முடியும். எனவே தான் மருத்துவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.




பூண்டு


பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், அல்லிசின் அளவும் அதிகமாக உள்ளதால், இது தொற்றுக்கள் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவும். அதோடு பூண்டு ஆஸ்துமாவை சரிசெய்ய உதவுவதாக கருதப்படுவதோடு, நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவும். ஆகவே பூண்டு அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள். இதனால் நுரையீரலில் நோய்கள் அண்டாமல் இருக்கும்.




க்ரீன் டீ

இரவு தூங்கும் முன் ஒரு கப் மூலிகை க்ரீன் டீயை குடித்தால், மலச்சிக்கல் மற்றும் இதர வயிற்றுப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் குடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இந்த சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது, நுரையீரலுக்கு கடினமான வேலையைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எனவே தான் இரவு நேரத்தில் க்ரீன் டீயைக் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இப்போது நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் முக்கியமான இரண்டு பானங்களைக் காண்போம்.


ஜூஸ் #1

தேவையான பொருட்கள்:

* கேரட் - 2 (சிறியது)
* ஆப்பிள் - 1
* கேல் கீரை - சிறிது
* லெட்யூஸ் - சிறிது
* வெள்ளரிக்காய் - 2
* மாதுளை ஜூஸ் - 1 கப்
* இஞ்சி - 2 இன்ச்
* தேன் - சுவைக்கேற்ப




செய்முறை:

* முதலில் இஞ்சியின் தோலை நீக்க வேண்டும்.

* பின் மிக்ஸியில் அதைப் போட்டு, அத்துடன் கேரட், ஆப்பிள், கேல், லெட்யூஸ் மற்றும் வெள்ளரிக்காயைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் மாதுளை ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு சுவைக்கேற்ப தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உடனே பருக வேண்டும்.


ஜூஸ் #2

தேவையான பொருட்கள்:


* கேல் - 1 கப்
* லெட்யூஸ் - 1 கப்
* ப்ளூபெர்ரி - 1 கப்
* ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
* நறுக்கிய அன்னாசி - 1 கப்
* ஆப்பிள் - 1
* தேன் - சுவைக்கேற்ப



* மிக்ஸியில் தண்ணீர், கேல், லெட்யூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பெர்ரிப் பழங்கள், அன்னாசி மற்றும் ஆப்பிள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, உடனே பருக வேண்டும்.




குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஜூஸ்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நுரையீரலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி நுரையீரலின் செயல்பாட்டை சிறப்பாக்கும். அதற்கு இந்த ஜூஸ்களை மாதத்திற்கு 2-3 முறை தயாரித்துக் குடிக்கலாம். இதனால் நுரையீரல் அவ்வப்போது சுத்தம் செய்யப்படும்

No comments:

Powered by Blogger.