Breaking

பிளாஸ்டிக் பைகள் பற்றிய ஒரு பார்வை..





தவிர்ப்போம்!

பிளாஸ்டிக் பைகள் பற்றிய ஒரு பார்வை..


ஆரம்ப காலத்தில் கடைகளுக்கு பொருள்களை வாங்க மஞ்சள் துணிப் பைகளையும், சிற்றுண்டிகளை வாங்கச் செல்லும்போது, சாம்பார், சட்டினி வாங்க சில்வர் பாத்திரங்களையும் எடுத்துச் சென்றனர். 

 இன்றோ, பல உணவகங்களில் சாப்பாட்டுக்கு இலைகளுக்கு, பதிலாக நெகிழியால் (பிளாஸ்டிக்) மெருகூட்டப்பட்ட இலைகளில் சாப்பிட்டும், உணவுப் பொட்டலம் வாங்க வருவோரும்  நெகிழிப் பைகளில்  வாங்கிச் செல்கிறோம்.

தீமைகள்:-

 நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்கள் கட்டப்பட்டால், அது  வேதி வினைபுரிந்து புற்று நோயை உருவாக்குகிறது. 

தமிழகத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையை தொடர்ந்து ஓரிடத்தில் சேகரித்து வைக்கும்போது  மீத்தேன் வாயு உருவாகி
எளிதில் தீப்பற்றி  எரிகிறது. 

குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டால், அது தொடர்ந்து எரிந்து அந்தப் பகுதியையே புகை மண்டலமாக மாற்றுகிறது. இதனால் கண் எரிச்சல், சுவாச கோளாறு, புற்றுநோய் உண்டாகிறது.

உலகம்:-

உலகம் முழுவதும் கடலில் ஓர் ஆண்டில் 8 மில்லியன் டன் அளவுக்கு நெகிழிக் குப்பைகள் கொட்டப்படுகிறது.  இதே நிலை நீடித்தால் வரும் 2030-ஆம் ஆண்டில் இந்த குப்பையின் அளவு இரு மடங்காகவும், 2050-ஆம் ஆண்டில் நான்கு மடங்காகவும் உயரும். இதனால் உயிரிகளுக்கு விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

இந்தியா:-

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15,342 டன்னுக்கும் அதிகமான நெகிழிக் குப்பை உருவாவதாகவும், இதில் 9,205 டன் குப்பை மறுசுழற்சி செய்யப்படுவதாகவும், 6137 டன் குப்பை அப்படியே விடப்படுவதாகவும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறைக்கான இணை அமைச்சர் அனில் தவே கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நெகிழிப் பொருள்கள் தயாரிக்கப்படும்போதும், அவை மறு சுழற்சி செய்யப்படும்போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை உடையவை என்பதால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.


அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் விளைவு:-

கால்வாய்களில் நெகிழிப் பைகள் அடைத்துக்கொள்வதால் நீர் வழிகள் அடைக்கப்பட்டு, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.

நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருள்களான சாக்லேட், பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இது சிறுவர்களுக்கு புற்று நோயை ஏற்படுத்துவதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர்.

நமது கடமைகள்:-

எனவே, ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். 

ஒருமுறை பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்படும் நெகிழிப்பைகள் தீமையையே தருகின்றன.

இதற்கு மாற்றாக இலை, சணல், காகிதப் பை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.

தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கும் மேற்பட்ட தடித்த நெகிழிப் பைகளை பயன்படுத்த வேண்டும். இவை மறுசுழற்சி செய்ய பயன்படக்கூடியவை. இதனால் 40 மைக்ரானுக்கும் குறைவான புதிய நெகிழிப் பைகளின் உருவாக்கம் குறையும்.

தேநீர்க் கடைகளில் செம்பு, பித்தளை, அலுமினிய குவளைகளையும், பாக்குமட்டையால் செய்யப்பட்ட பொருள்களையும் பயன்படுத்தியும், 
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி
மக்கக் கூடிய பொருள்கள் அதிக அளவில் உருவாக்கி வருங்கால தலைமுறைகளை பாதுகாப்போம்.

No comments:

Powered by Blogger.