Breaking

ஏப்ரல் 20, 1898 புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.







ஏப்ரல் 20, 1898
புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம்.


ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் ஏப்ரல் 20, 1898ல் மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர். மேடம் மேரி கியூரி ஒரு இயற்பியல், வேதியியல் விஞ்ஞானி. உலகத்தின் முதல் பெண் அறிவியலாளர். கதிர்வீச்சு என்ற அறிவியல் கோட்பாட்டில் முக்கிய விளைவுகளை அறிமுகப்படுத்தியவர். அவர் கண்டுபிடித்த ரேடியம் (Radium) புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

நோபல் பரிசு வரலாற்றில் அந்த பரிசை பெற்ற முதல் பெண் மேரி கியூரி தான். அதே போல முதன் முறையாக நோபல் பரிசை இரண்டு முறை அதுவும் வெவ்வேறு துறைகளில் வென்றவரும் அவர் தான். மேரி கியூரி நவம்பர் 7, 1867ல் போலந்து நாட்டில் வார்ஸா என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை வ்லேடிஸ்லாவ் ஸ்க்லோடோவ்ஸ்கி உயர்நிலைப்பள்ளியில் இயற்பியல், கணக்குப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார். அதனாலேயே மேரி கியூரிக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இவரது தாய் பிரோநிஸ்லவா புகழ் பெற்ற பியானோ ஆசிரியையாக இருந்தார். மேரிகியூரிக்கு இவரது பெற்றோர் வைத்த பெயர் மரியா சலோமியா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marie Salomea Sklodowska). உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் இருந்த மேரி கியூரியின் குடும்பத்தில் வறுமையை தவிர வேறு எதுவுமே அதிகமாக இல்லை. போதா குறைக்கு மேரி கியூரிக்கு தனது 12 வயதில் தந்தையை இழக்கும் கொடுமையும் நிகழ்ந்தது.  



மேரி கியூரி சிறு வயது முதலே பெண்களை அடக்கி வைக்கும் அப்போதைய கலாசாரத்திற்கு எதிராக யோசிப்பவராக இருந்தார். உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றார். உயர் கல்வியில் அறிவியல் படிக்க வேண்டும் என ஆசைப்பட்ட மேரி கியூரிக்கு படிக்க முடியாமல் தடங்கல் ஏற்பட முக்கிய காரணம் அவர் பெண்ணாக பிறந்தது தான். சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார். அவர் அக்கா படிப்பு செலவுகளை பார்த்து கொண்டார் என்றாலும் ஏழ்மை மட்டும் இவர்களில் இன்னும் விடவில்லை. அதனால் பகுதி நேர வேலைகள் பார்த்து சொற்ப சம்பளத்தில் எளிமையாக வாழ்க்கை நடத்தினார். பல நேரங்களில் உணவுக்கே கஷ்டப்பட்டார். ஆனாலும் மேரி கியூரி நன்கு படித்துக் கல்லூரியில் 1893 ஆம் ஆண்டு முதல் மாணவியாக இயற்பியலில் பட்டம் பெற்றார். அதே போல அடுத்த ஆண்டே கணிதத்தில் பட்டம் பெற்றார்.

அதன் பின் லிப்மன் ஆய்வுக் கூடத்தில் வேலையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். அப்போது தான், அங்கு ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருந்த பியரி கியூரியைச் சந்தித்தார். பியரி கியூரியும் ஒரு இயற்பியல் விஞ்ஞானி தான். இருவருக்கும் காதல் ஏற்படவே 1895 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர். பியேர் கியூரி (Pierre Curie) மே 15, 1859 ல்1859 பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி ஆவார். இவருடைய தந்தை ஒரு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது. தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. 16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார். ஆனால் பண வசதி இல்லாத காரணத்தால் அப்பட்டத்திற்குரிய தகுதியான பணிகளைச் செய்ய இயலவில்லை. தாழ்ந்த ஊதியம் பெற்ற ஆய்வக உதவியாளராக மட்டுமே இவரால் பணியில் அமர முடிந்தது. 



ஜேக்குவிஸ் என்ற இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் இவர் ஈடுபட்டார். அப்போது பியேரின் வயது 21. அண்ணனின் வயது 24. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் (Piezo Electric Effecr) கண்டுபிடித்தனர். அதாவது சில படிகங்களில் அழுத்தத்தைச் செலுத்தும் போது அவை மின்னழுத்தத்தை வெளிப்படுத்தின. மாறாக அவற்றை மின் புலத்தில் வைத்தால் அப்படிகங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்த இரு செயல்களுக்கும் உள்ள ஒரே தன்மையுள்ள அடிப்படைப் பண்புகள் இயற்பியல் விதிகளை மேம்படுத்த உதவின.

அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உருவாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது. பிறகு மைக்ரோபோன், குவார்ட்சு கடிகாரஙக்ள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது. முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் முறுக்குத் தராசு (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார். காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று 'கியூரி விதி' என்று அழைக்கப்படுகிறது.




1895 ஆம் ஆண்டு ராண்ட்ஜன் (Roentgen) X – கதிர்களைக் கண்டுபிடித்த போது அது எப்படி உருவாகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. X – கதிரின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து பிரெஞ்சு அறிவியலறிஞர் ஹென்றி பெக்கொரல் (Henry Becquerel) யுரேனியம் கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதை கண்டுபிடித்தார். அவரிடம் மேரி கியூரி உதவியாளராகச் சேர்ந்து அதே துறையில் மேரி கியூரியும் அவர் கணவரும் ஆய்வு செய்து வந்தனர்.இன்னும் சில உலோகங்களிலும் இந்த கதிர்வீச்சு ஏற்படலாம் என எண்ணி ஆய்வுகள் நடத்தினர். முனைவர் பட்டம் பெற விரும்பிய மேரி கியூரி அதற்காக யுரேனியத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.

யுரேனியம் தவிர தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இருவரும் கதிரியக்கத் தாதுக்களுள் ஒன்றான பிட்ச்பிளெண்ட் (Pitchblende) என்ற பொருள் மீது ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். இதில் பிரச்னை என்னவென்றால், அந்நாளில் பிட்ச்பிளெண்ட் மிகவும் மதிப்பு வாய்ந்த, எளிதில் கிடைக்காத தாதுப்பொருளாக விளங்கியது. எப்படியோ பல முயற்சிகளுக்கு பின் பொஹீமியா சுரங்கத்தில் யுரேனியம் எடுக்கப்  பட்டு எஞ்சிய பிட்ச்பிளெண்ட் கழிவுச் சாம்பல் ஒரு டன், அவர்களுக்கு கிடைத்தது. அதை  செய்ய அவர்களிடம் சரியான ஆய்வுக்கூடம் கூட இல்லை. உரிய கருவிகள், உபகரணங்கள் இவர்களிடம் கிடையாது. ஒரு இடிந்து போன ஒரு மரப் பட்டறையில், எளிமையாக மண்ணைக் கரைத்து, கொதிக்க வைத்து பக்குவம் செய்து, சளைக்காமல் ஆய்வு செய்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக ஒரு புதிய தனிமத்தை கண்டறிந்தனர். அது யுரேனியத்தைப் போல 400 மடங்கு ஆற்றல் கொண்டு இருந்தது. அந்த தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்து நாட்டின் நினைவாக “பொலோனியம்” என்று பெயர் வைத்தார் மேரி கியூரி.

இரண்டாவதாக புற்றுநோய்க்கு சிகிச்சைக்குப் பயன்படும் ரேடியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தனர். இது யுரேனியத்தை விடப் பல லட்சம் மடங்கு கதிர்வீச்சு உடையது. ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதே சமயம் ரேடியத்தைப் பயன்படுத்திப் புண்களைக் குணமாக்கவும் முடியும் எனக் கண்டறிந்தனர். இதற்குக் கதிரியக்க சிகிச்சை அல்லது ரேடியம் சிகிச்சை என்று பெயர். மேலும் ரேடியம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. பாக்டீரியா மற்றும் நுண்ணிய கிருமிகளை அழிக்கக்கூடியது, விதைகள் முளை விடுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது, சில தோல் நோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது.     

ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக, மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்ரி பெக்குவரல் மூவருக்கும் 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது. ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்றாலும் சுயநலமே இல்லாத இவர்கள் காப்புரிமை கூட பெறவில்லை. இருவரும் தூய ரேடியத்தை பிரித்தெடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பியரி கியூரி ஏப்ரல் 19, 1906ல் பாரிசில், புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போது ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இவர் கடக்கும் போது பெரிய சரக்கு வண்டி ஒன்று இவரை மோதிக் கீழே தள்ளியதால் இவர் மரணம் அடைந்தார். கணவர் இறந்த பின்னும் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார் மேரி. ரேடியம், பொலோனியம் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக 1911-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை மேரி பெற்றார்.

ஆராய்ச்சிக்காகத் தொடர்ந்து கதிர்வீச்சுக்கு உள்ளானதால் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேரி கியூரி ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1934 ஜூலை 4 அன்று உயிரிழந்தார். கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. ஆனால், கதிரியக்கம் சார்ந்த அவரது கண்டுபிடிப்புகள்தாம் இன்று புற்றுநோய் சிகிச்சைக்குப் பெரிதும் உதவுகின்றன. ரேடியம், மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற நோக்கில் அதற்குக் காப்புரிமை பெற மறுத்துவிட்டார். வேதியியல் நோபல் பரிசுத் தொகையை ஏழை மாணவர்களுக்கான ஆய்வகம் கட்டுவதற்காகக் கொடுத்துவிட்டார். இறுதிவரை எளிமையாக வாழ்ந்தார். கிடைத்த பணப் பரிசுகள் அனைத்தையும் ஆராய்ச்சிக்கும் மக்கள் பயன்பாட்டுக்குமே கொடுத்தார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

No comments:

Powered by Blogger.