ஏப்ரல் 23, 1896 மக்சியூதவ் தொலைநோக்கி வடிவமைத்த, ரஷ்யா ஒளியியல் பொறியாளர் திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் பிறந்த தினம்.
ஏப்ரல் 23, 1896
மக்சியூதவ் தொலைநோக்கி வடிவமைத்த, ரஷ்யா ஒளியியல் பொறியாளர் திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் பிறந்த தினம்.
திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் (Dmitry Dmitrievich Maksutov) ஏப்ரல் 23, 1896ல் ரஷ்யப் பேரரசில் ஒதேசா (நிகோல) துறைமுகத்தில் பிறந்தார். இவரது தந்தையார் கருங்கடல் படையணியில் பணிபுரிந்த நாவாயியல் அலுவலர். இவர் நெடிய நாவாயியல் பட்டறிவுடைய குடும்பக் கால்வழியினர். இவரது கொள்ளுப் பாட்டனார் பீட்டர் இவனோவிச் மக்சியூதவ் தன் போர்களில் காட்டிய வல்லமைக்காக இளவரசர் பட்டம் பெற்றவர். இவரது பாட்டனார் திமித்ரி பெத்ரோவிச் மக்சியூதவ் உருசிய-அமெரிக்கப் பகுதியாகவிருந்த அலாசுக்காவின் ஆளுநராக, அப்பகுதியை அமெரிக்கா 1867ல் விலைக்கு வாங்குவதற்கு முன்பு திகழ்ந்தவர். மக்சூத்தொவ் இளம்பருவத்தில் இருந்தே வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தன் பன்னிரண்டாம் அகவையிலேயே 7.2 அங்குல (180மி.மீ) நீள ஒளித்தெறிப்புவகைத் தொலைநோக்கியைச் செய்துள்ளார்.
மக்சூத்தொவ் பெயர்பெற்ற ரஷ்ய ஒலியியலாளரான அலெக்சாந்தர் ஆந்திரியேவிச் சிக்கினின் நூல்களைப் படித்துள்ளார். அவரைத் தன் ஆசிரியராக வரித்துக் கொண்டார். சீரிய 10 அங்குலத் தெறிப்பு வகைத் தொலைநோக்கியை உருவாக்கி ஆழமான வானியல் நோக்கீடுகளில் ஈடுபட்டுள்ளார். இவர் தன் 15 ஆம் அகவையிலேயே ரஷ்ய வானியல் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று அண்டுகளுக்குப் பிறகு புனித பீட்டர்சுபர்கில் இருந்த நிகோலயேவ்பொறியியல் நிறுவனத்தில் (படைத்துறைப் பொறியியல்-தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) பட்டம் பெற்றார். 1921 முதல்1930 வரை ஒதேசா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தில் வானியல்சார் ஒளியியல் துறையில் பணிபுரிந்துள்ளார்.
மக்சூத்தொவ் 1930ல் வானியல்சார் ஒளியியல் ஆய்வகத்தினை இலெனின்கிராதில் அமைந்த வாவிலோவ் அரசு ஒளியியல் நிறுவனத்தில் நிறுவி, 1952 வரை வழிநட்த்தினார். இந்த ஆய்வகம் சோவியத் ஒன்றியத்தில் பலசிறந்த வானியலாளர்களின் புகலிடமாக விளங்கியது. இவர் 1932ல் வெளியிட்ட பிறழ்வற்ற தெறிப்புப் பரப்புகளும் அமைப்புகளும் அவற்றை ஓர்வுசெய்யும் புதிய முறைகளும் எனும் ஆய்வில், தளமற்ற இரட்டை ஆடி அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்து தான் 1924 இலேயே முன்வைத்த ஈடுசெய்யும் முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறை ஆடியைக் கட்டுப்படுத்தும் முறையாக நீழல் முறைக்கு இணையாக விளங்கியது. இந்த ஆய்வு இவரை 1944ல் பேராசிரியராக்கியது. 1946 முதல் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் கலவிக்கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் ஆனார். 1952ல் இருந்து இலெனின்கிராதில் இருந்த புல்கோவோ வான்காணகத்தில் பணிபுரிந்தார்.
மக்சூத்தொவ் பெயர்பெற்ற மக்சியூதவ் தொலைநோக்கியை 1941 புதிதாகப் செய்தார். சுகிமிட் தொலைநோக்கியைப் போல மக்சியுதவ் கோளப் பிறழ்வை முதன்மை வில்லைக்கு முன்பாக ஒரு திருத்த வில்லையை வைத்துத் திருத்தினார். ஆனால் முன்னவர் ஒரு கோளமற்ற திருத்தியைக் கருவிழி முன்வைத்துப் பயன்படுத்த, இவரோ ஆழ்வளைமையுள்ள முழுவிட்ட எதிர்வில்லையைப் அதாவது வில்லைத் திருத்தக் கூடொன்றைப் பயன்படுத்துகிறார். இவர் இந்த வடிவமைப்பை 1944ல் புதிய எதிருரு வில்லை அமைப்புகள் எனும் ஆய்வுக் கட்டுரையில் வெளியிட்டார். இது அவரது ஆய்வகத்திலும் சோவியத் ஒன்றிய வான்காணகங்களில் மட்டுமன்றி உலகமெல்லாம் பயன்படுத்தப்படுகிறது. பல வணிகத் தொலைநோக்கி நிறுவனங்கள் மக்சியூதவ்களை உருவாக்குகின்றன. இவற்றில் செலெசுடிரான், மியாடே, குவெசுடார் ஆகியவை அடங்கும்.
மக்சூத்தொவ் பொருள் வில்லைகளையும், ஆடிகளையும், பட்டகங்களையும் பல்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு உருவளவுகளில் செய்தவர். இவர் அயிற்ரு ஒளிப்படவியல் கருவியையும், ஊசி நுண்ணோக்கியையும், காற்றியக்கக் குழல்களுக்கான நீழல் கருவிகளையும், தொலைநோக்கிக் காட்சிவில்லைகளையும், மேலும் பல பிற கருவிகளையும் வடிவமைத்துச் செய்துள்ளார். மக்சியூதவ் தொலைநோக்கி வடிவமைத்த திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் ஆகஸ்ட் 12, 1964ல், தனது 68வது அகவையில் புனித பீட்டர்சுபர்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments: