Breaking

ஏப்ரல் 25, 1874.. நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்த, நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி பிறந்த தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.






ஏப்ரல் 25, 1874..
நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்த, நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை குலீல்மோ மார்க்கோனி  பிறந்த தினம்.

“ஆகாசவானி செய்திகள் வாசிப்பது” 80,90களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்க்கோனி ஆவார். குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) ஏப்ரல் 25, 1874ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன் அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ, புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது. இளமைப் பருவத்தில் இவர்க்குப் படிப்பில் ஆர்வம் மிகிதி. 

வீட்டிலேயே இருந்த நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர்.



மார்க்கோனி காலத்தில் மின்காந்த அலைகள் பற்றிய கருத்தை ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் வெளியிட்டிருந்தார். அவற்றைப் பற்றி மேலும் ஆராய்ந்து ஹென்ரிச் ருடால்ப் ஹெர்ட்சு என்ற அறிஞர் ஆய்வுகளின் மூலம் அவற்றை உறுதிப் படுத்தினார். மின்காந்த அலைகளின் கொள்கைகளானது ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மூலம் முன்பே பெறப்பட்டிருந்தன. மின்காந்த அலைகளை அலைபரப்ப முடியும். மேலும் அவை வெளி முழுவதும் நேர்க்கோடுகளில் பயணிக்கின்றன என்பதையும், அவற்றை சோதனைக் கருவிகள் மூலமாக பெற முடியும் என்பதையும் ஹெர்ட்ஸ் செயல்முறை விளக்கமளித்தார். சோதனைகள் ஹெர்ட்ஸ் அவர்களால் பின்தொடரப்படவில்லை.

இங்கிலாந்தில் ஆலிவர் லாட்ஜ் என்பவரும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் இதற்கான காப்புரிமையையும் பெற்றிருந்தார். ஆனால் அவ்வுரிமையை மார்க்கோனிக்கு விற்று விட்டார். 1894ல் இந்திய இயற்பியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் கொல்கத்தாவில் மின்காந்த அலைகளைக் கொண்டு வானொலி பரப்பும் முறையைச் செய்து காட்டினார். ஜகதீஷ் சந்திர போஸ் இந்தக் காலகட்டத்தில் முந்தைய கம்பியற்ற தகவல் கண்டறியும் சாதனத்தை உருவாக்கினார். மேலும் அவர் மில்லிமீட்டர் நீளமுள்ள மின்காந்த அலைகளைப் பற்றிய அறிவை அதிகரிக்க உதவினார். ஆனால் அதற்கான காப்புரிமையைப் பெறாததோடு அந்த ஆய்வை அவர் தொடரவில்லை. இந்த செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் 'டெய்லி குரோனிகல்' என்ற ஆங்கில நாளிதழில் 1896ல் செய்தியாக வெளியிட்டது.



1891-93ல் நிக்கோலா டெஸ்லா என்ற அறிவியல் அறிஞர் வானொலி பற்றிய தன்னுடைய கண்டுபிடிப்பை உறுதி செய்து காப்புரிமை பெற்றார். தெஸ்லாவின் கம்பிச் சுருளை வைத்துதான் மார்க்கோனி ஆய்வுகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அவர் என்னுடைய 17 காப்புரிமைக் கருவிகளைப் பயன்படுத்திதான் தன்னுடைய ஆய்வுகளைச் செய்தார் என்று டெஸ்லாவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முதன்முதல் வானொலியைக் கண்டுபிடித்தவர் தெஸ்லா என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் மார்க்கோனி அதற்கு மேல் முறையீடு செய்து பல ஆண்டுகள் கழித்தே மார்க்கோனிக்கு ஏற்புடையதான தீர்ப்பு வழங்கப்பட்டது. 1894ல் ஹெர்ட்சின் மறைவுக்குப் பிறகு போலக்னோ பல்கலைக் கழக இயற்பியல் பேராசிரியர் அகஸ்டோ ரைட் என்பவர் ஹெர்ட்சினுடைய ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு மேலும் ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போது அவருடன் சேர்ந்து அவருக்குத் துணையாக மார்க்கோனியும் அதில் ஈடுபட்டார். பிந்தைய கண்டுபிடிப்பாளர்களால் கம்பியற்ற தகவல்தொடர்பு மற்றும் தொலைநிலை கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் செயலாக்கப்பட்டன.

மார்க்கோனி தன் இல்லத்திலும் தனியே ஆய்வுகளைச் செய்து வந்தார். 'எப்பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும்' என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினார். 1894ல் மின் அலைகள் மூலமாக சைகைகளை அனுப்பிக் காட்டினார். வானொலி அலைகளைக் கொண்டு 'கம்பியில்லாத் தந்தி முறை'யை உருவாக்குவதில் ஈடுபட்டார். இந்த முறையை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்து வந்தாலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி அதற்கான 1895ஆம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய 'திசைதிரும்பும் மின்கம்பம்' (Directional Antenna) என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். இந்த அரிய முயற்சியில் இத்தாலி அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.



எனவே, லண்டன் சென்ற மார்க்கோனி அங்கு தன்னுடைய ஆய்வினைப் பற்றிய செய்திகளை விளக்கினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளர் 'வில்லியம் ஃப்ரீஸ்' என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1897ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பியை (Transmitter) உருவாக்கினார். மே 13, 1897ல் நீரின் வழியாக 'நீங்கள் தயாரா?' என்ற செய்தியை சுமார் 14 கி.மீ தூரத்திற்கு செலுத்துகின்ற ஒலிபரப்பியை உருவாக்கினார். இவருடைய இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்களிடையே கம்பியில்லாத் தந்தி முறை(Telegraph without wire) என்ற தலைப்பில் டிசம்பர் 11, 1896ல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். பிறகு அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897ல் 'மார்க்கோனி நிறுவனம்' இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1897ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899ல் ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.

இவற்றைக் கவனித்த இத்தாலி அரசாங்கம், பிறகுதான் மார்க்கோனி மீது கவனத்தைச் செலுத்தியது. அதன் விளைவாக இவர் பிறந்த மண்ணில் 1897ல் ஜூலை மாதம் லாஸ்பீசியா(La Spezia) என்ற இடத்தில் தன்னுடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். அங்கு அரசு தனக்களித்த உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அவர் அங்கிருந்து செய்தி சுமார் 20.கி.மீ. அப்பால் இருந்த போர்க்கப்பல்களுக்கு எட்டியது. 1898ல் கிழக்குக் காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொலிக்கருவி ஒன்றை அமைத்திருந்தார். சில காலத்திற்குப் பிறகு அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியது. அதனால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார். அதை அறிந்த கலங்கரை விளக்கப் பகுதியில் இருந்த உயிர் மீட்புப் படகுகள் அவர்களைக் காப்பாற்றினர். 1905ல் வர்த்தகக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியற்ற தகவல் தொடர்பு கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து இங்கிலாந்து மற்றும் இத்தாலி கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.



1899-ல் அமெரிக்க நாட்டு நியூயார்க் நகரில் பெரியதொரு படகுப் போட்டி நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற மார்க்கோனி கப்பலில் தன் கருவிகளைப்பொருத்தி போட்டியின் முடிவுகளை செய்தியாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்தார். இதன் மூலம் அமெரிக்கா வானொலியின் அவசியத்தை உணர்ந்தது. வானொலி பரப்புவதைக் கணிதக் கலை வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளவிலை. உலகம் உருண்டை வடிவமானது என்பதால் வானொலி பரப்பும் செய்தியும் நேராக நூறுமைல் வரைதான் செல்லும். உலக உருண்டையின் வளைவு காரணமாக அதற்கு மேல் பரவாது என்று கூறி மார்க்கோனியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முற்பட்டனர். ஆனால் மார்க்கோனி அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தன் பணியைத் தொடர்ந்தார்.

1900ல் நெடுந்தூர செய்தி அனுப்பும் வானொலி நிலையத்தை உருவாக்கினார். 200 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் வான்கம்பியை இணைத்தார். இயற்கை காரணமாக சூறாவளி வீசி கம்பத்தைச் சாய்தது. மார்க்கோனி உயரத்தைச் சற்று குறைத்து மற்றொரு கம்பத்தை நட்டு அட்லாண்டிக் பரப்பை தன் வானொலியால் இணைத்துக் காட்டினார். 12-12-1901ல் 2100 மைல்களுக்கு அட்லாண்டிக்கின் குறுக்கே கடந்து செய்தியை அனுப்பிப்பெற்றார். இச்செய்தியை உலகெங்கும் அறிவித்தார். இவர் பெருமை உலகெங்கும் பரவியது. 1907ல் அவை இன்னும் சீர்ப்படுத்தப் பட்டு அட்லாண்டிக் தொலைத்தொடர்பு வழி எல்லோரது பொதுப் புழக்கத்திற்கும் பயன்பட்டது. மேலும் பல ஆய்வுகள் செய்த மார்க்கோனி தொடர் அலைகள் உற்பத்திச் செய்யும் கருவியைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தினார். அதன் பயனாகப் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்ப இயலும் என்பதை மெய்ப்பித்தார்.

மார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, 1909ல் கம்பியில்லாத் தந்திமுறையில் ஏற்கனவே பல ஆய்வுகள் செய்திருந்த 'கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்' என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1912ல் ஒரு மோட்டார் விபத்தில் இவர் தன் வலது கண்ணை இழந்தார். எனினும் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தினார். 1914ல் முதல் உலகப் போர் தோன்றியபோது இத்தாலி நாட்டின் தரை, கப்பற்படைகளில் வானொலியைப் பயன்படுத்திப் பணி புரிந்தார். அமெரிக்காவின் போர்க்குழு உறுப்பினராகத் தொண்டாற்றினார். முசோலினியை இவர் ஆதரித்து இத்தாலிய பாசிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1919ல் போர் ஓலங்கள் குறைந்து அமைதி உருவானபோது, இவரின் பிறந்த நாட்டிற்காகப் பல உடன்படிக்கைகளில் கையெழுத்துப் போடும் பெருமை இவருக்கு அளிக்கப்பட்டது. 1920ல் முசோலினி இவருக்கு மார்க்விஸ் (Marquis) என்ற வழிவழியாக வரக்கூடிய பட்டத்தை அளித்தார்.

1930ல் இத்தாலிய ராயல் அகாதமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் பிரிட்ஸ் (Britz) என்ற பதக்கம் அளித்து பெருமைப் படுத்தியது. இங்கிலாந்து விக்டோரியா பெருஞ்சிலுவையை வழங்கும் பெருமையை அடைந்தது. வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி ஜூலை 20,1937ல் தனது 63வது அகவையில் இத்தாலிய ரோம் நகரில் காலமானார் இவ்வுலகை விட்டு பிரிந்தார். வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின. சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இந்த பண்புகளை பின்பற்றும் எவருக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Powered by Blogger.