சமையல் காஸ் சிலிண்டர் பதிவில் திடீர் கட்டுப்பாடு..
சமையல் காஸ் சிலிண்டர் பதிவில் திடீர் கட்டுப்பாடு..
வீட்டு வாடிக்கையாளர்கள், ஒரு சமையல் காஸ் சிலிண்டர் வாங்கிய தேதியில் இருந்து, 15 நாட்களுக்கு பின் தான், அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும்' என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளன.
பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 2.38 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிறுவனங்கள், 1,600 காஸ் ஏஜென்சிகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 2.65 லட்சம் சிலிண்டர்களை, 'டெலிவரி' செய்கின்றன.
ஒரு சிலிண்டர் பெற்ற, மறுநாளே அடுத்த சிலிண்டருக்கும், எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக, முன்பதிவு செய்யலாம்; இரு தினங்களில், சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
தமிழகம் உட்பட, நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல், வரும், 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், காஸ் சிலிண்டர் தடையின்றி, சப்ளை செய்யப்படும் என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.அதேசமயம், வீடுகளில், முழு அளவில் காஸ் சிலிண்டர் வைத்துள்ள பலரும், தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக, அதிகளவில், சிலிண்டர்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதனால், சிலிண்டர்களை டெலிவரி செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 'ஒரு சிலிண்டர் வாங்கிய தேதியில் இருந்து, 15 நாட்களுக்கு பின் தான், அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளன.


No comments: