ஓவியப்போட்டியில் வேலூர் கோட்டையை தத்ரூபமாக வரைந்து அசத்திய பள்ளி மாணவர்
ஓவியப்போட்டியில் வேலூர் கோட்டையை தத்ரூபமாக வரைந்து அசத்திய பள்ளி மாணவர்
வேலூரின் நினைவுச் சின்னங்கள்' என்ற தலைப்பில் நடந்த ஓவியப்போட்டியில் 10ம்வகுப்பு மாணவன் வேலூர் கோட்டையை தத்ரூபமாக வரைந்து முதலிடம் பிடித்து அசத்தினார். பன்னாட்டு அருங்காட்சியக தினத்தினை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 'வேலூரின் நினைவுச் சின்னங்கள்' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஏதேனும் ஒன்றினை ஓவியமாக வரைந்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் பெயர், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் ஓவியம் அனுப்பி வைக்க வரும் 20ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் 256 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
அவர்கள் தங்களின் தனித்திறமைகளை கொண்டு ஒவ்வொருவரும் ஓவியங்களை வரைந்து வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில் காட்பாடி அருகே திருவலத்தை சேர்ந்த நவீன் என்ற 10ம் வகுப்பு மாணவன் வேலூர் கோட்டை அகழியை ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரம் மற்றும் சிப்பாய்புரட்சி நினைவுத்தூணுடன் தத்ரூபமாக வரைந்து அசத்தி உள்ளார். முதல் பரிசை வென்ற அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் அனுப்பும் பணி நடந்து வருவதாக வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார்.
No comments: