மதுரையைச் சேர்ந்த முடி திருத்துனருக்கு பிரதமர் மோடி பாராட்டு!
மதுரையில் முடிதிருத்தும் கடை நடத்திவரும் மோகன் என்பவர் தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த தொகையை ஏழை மக்களுக்காக செலவிட்டதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமா் மோடி, 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
பொது முடக்க காலத்தில் மக்களே முயற்சி எடுத்து இல்லாதவர்களுக்கு உணவுப் பொருள்களையும் பிற உதவிகளையும் எய்வது மக்களின் உள்ளார்ந்த சேவை மனப்பான்மை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
மதுரையில் முடிதிருத்தும் கடை நடத்திவரும் மோகன் என்பவர் தனது மகளின் படிப்புக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை பொது முடக்க காலத்தில் ஏழை மக்களுக்கு செலவு செய்தது பாராட்டத்தக்கது.
இதுபோன்று பலர் உதவிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், ஆன்-லைன் வழி வகுப்புகள் என பல விதங்களில் மக்கள் பொறுப்புணர்வுடன், சுறுசுறுப்புடன் இருப்பது பெருமிதம் அடைய வைக்கிறது.
மருத்துவப் பணியில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பு சாதனங்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், ரயில்வே துறையினர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என பல்வேறு பிரிவுகளில் திட்டமிடுதலும் செயல்படுத்துதலும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
கரோனா தொற்று புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள கற்றுக்கொடுத்துள்ளது. பரபட்சமின்றி அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு துறை அதிகாரிகள் என அனைவரும் இக்காலகட்டத்தில் அயராது உழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றார்.
No comments: