ஆகஸ்ட்-0 2,1922.. தொலைபேசியைக் கண்டுபிடித்த, பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம்..
ஆகஸ்ட்-0 2,1922..
தொலைபேசியைக் கண்டுபிடித்த, பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம்..
நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.
அலெக்சாண்டர் பெல் மார்ச் 3, 1847ல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் பிறந்தார். அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.
எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது. இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார். கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார். அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பல்கலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது.
பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார் . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875ல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது. 1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் "வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்"(Watson, come here, I want to see you) என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார்.
பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் மார்ச் 7,1876ல் தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். ‘ஹலோ' என்ற வார்த்தையை முதலில் தாமஸ் எடிசன் தொலைபேசியில் பதிலளித்தார். பின்னர் அது அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கான தரமாக மாறியது. 1877ல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.
பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார். விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார். ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார். கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார்.
ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் தொழிற் புரட்சி மலர்ந்த போது, தகவல் தொடர்பு (Communication) வளர்ச்சி அடைய முப்பெரும் ஆக்க மேதைகள் மின்சாரம், மின்காந்த அலைகள் (Radio Waves) ஆகியவற்றைப் பயன்படுத்தி மெய்வருந்தி உழைத்தார்கள். கம்பியின் மூலம் தகவல் தந்தி (Telegraph) அனுப்பும் முறையைச் செம்மைப் படுத்திப் பிறகு பெல் தயாரித்த தொலைபேசி அனுப்பியைச் சீர்ப்படுத்திய அமெரிக்க மேதை, தாமஸ் ஆல்வா எடிசன், கம்பி வழியாக வாய்ப் பேச்சை அனுப்பி, பதிலையும் கேட்கும் தகுதியுள்ள தொலைபேசியை (Telephone) முதலில் படைத்த அடுத்த அமெரிக்க மேதை, அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், மூன்றாவது கம்பியில்லா தொடர்பைப் (Wireless Communication) படைத்த இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி. இருபதாம் நூற்றாண்டில் தொலைபேசித் தொடர்பும், கம்பியில்லாத் தொடர்பும், தொலைகாட்சித் தொடர்பும் பன்மடங்கு விருத்தியாகி, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாவிதத் தொடர்புகளும் கம்பியில்லா தொடர்புகளாய் மாறிக் கொண்டு வருகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடவுள் படைத்த உன்னத ஆக்கவினை இயந்திர நிபுணர்களாய்க் கருதப் படுபவர்கள்: எடிசன், பெல், மார்க்கோனி, ரைட் சகோதர்கள். அவர்கள் அனைவரும் வடஅமெரிக்க மண்ணில் ஆய்வுகள் நடத்தி, இயந்திர யுகத்தை உலகத்தில் ஆலமர விழுதுகளாய்ப் பெருக்கியவர் என்று போற்றப்படுவர்கள். தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ஆகஸ்ட் 2,1922ல் தனது 75வது அகவையில் அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது, வோல்டா பரிசு,ஆல்பெர்ட் பதக்கம்(1902), உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம், எடிசன் பதக்கம்(1914) போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
No comments: