Breaking

ஆகஸ்ட்-01. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த முன்னோடி அறிவியலாளர்களுள் ஒருவரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜார்ஜ் டி ஹெவெசி (George de Hevesy) பிறந்த தினம்.



இன்று பிறந்தநாள்:- ஆகஸ்ட்-01.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த முன்னோடி அறிவியலாளர்களுள் ஒருவரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜார்ஜ் டி ஹெவெசி (George de Hevesy) பிறந்த தினம்.

பிறப்பு:-

புடாபெஸ்ட் நகரில், ஆகஸ்ட் -01, 1885 ஆம் ஆண்டு பிறந்தார்.மெட்ரிகுலேஷன் கல்வி முடித்து, புடாபெஸ்ட் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்றார். பின்னர் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

1908-ல் ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். 

பணிகள்:-

2 ஆண்டுகள் தனது பேராசிரியரிடம் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். உருகிய உப்புகள் மற்றும் அமோனியா தொகுப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.

1910-ல் இங்கிலாந்து சென்றார். மான்செஸ்டரில் விஞ்ஞானி ரூதர்ஃபோர்ட் தலைமையிலான ஆய்வுக் குழுவில் பணியாற்றினார். 

ஆராய்ச்சிகள்:-

புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தில் கதிரியக்க - ட்ரேசர் மற்றும் கதிரியக்க அளவீடுகள் குறித்த ஆய்வுகளை சக விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்டார். அப்போது டென்மார்க்கிலிருந்து ஆய்வு மாணவராக நீல்ஸ்போர் அங்கு வந்து சேர்ந்தார்.

இருவரும் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டனர். 1911-ல் ஆய்வு மாணவராக இருந்த இவருக்கு இயற்கைக் கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்து எடுக்கும் பணி கொடுக்கப்பட்டது. அப்போது போதிய வருமானம் இல்லாததால், குடியிருந்த வீட்டு உரிமையாளரான பெண்மணியிடம் பணம் கொடுத்து அவரது வீட்டில் உணவு உண்டார்.

அவரோ, பல நேரங்களில் பழைய உணவையே மறுநாளும் பரிமாறுவதாக இவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் பரிமாறப்பட்டதில் மீதமிருந்த உணவில் சிறிது கதிர் ஐசோடோப்களைக் கலந்துவிட்டார். அடுத்தடுத்த நாளில் பரிமாறப்பட்ட உணவை சிறிது எடுத்துவைத்து தன்னிடமிருந்து எளிய கருவிகளைக் கொண்டு ஆராய்ந்ததில், முன்பு பரிமாறப்பட்ட அதே பழைய உணவு என்பது தெரிய வந்தது.

இதுவே கதிரியக்க ஐசோடோப்பை பயன்படுத்தி இவர் மேற்கொண்ட முதல் சோதனை. 1915-ல் ஆஸ்திரியன் - ஹங்கேரி ராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக 6 மாதங்கள் பணியாற்றினார். அதையடுத்து, கோபன்ஹேகனில் நீல்ஸ்போர் நிறுவனத்தில் இணைந்தார்.

பின்னர், ஃப்ரீபர்க் திரும்பிய இவர், பேராசிரியராகவும் ஆராய்ச்சி யாளராகவும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். இவரது ஆய்வுகள், பெரும்பாலும் ரேடியம் மற்றும் முக்கிய ஐசோடோப்களின் பயன்பாடு குறித்தவையாக அமைந்திருந்தன.

கதிரியக்க ட்ரேசர்களின் பயன்பாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்தவரும் இவரே. கனிம மற்றும் வாழ்க்கை அறிவியலுக்காக ஐசோடோப்பிக் இன்டிகேட்டர்களைப் பயன்படுத்துவதையும் இவர்தான் தொடங்கிவைத்தார்.

முதன்முதலாக ஐசோடோப்களை மருத்துவத்துக்காகப் பயன்படுத்தி யதும் இவர்தான். கதிரியக்க ஐசோடோப்புகளை உயிரியலில் குறியி அணுக்களாகப் பயன்படுத்தியதற்காக இவருக்கு 1943-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் ஸ்டாக்ஹோம், கரிம வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அசோசியேட்டாக நியமிக்கப்பட்டார்.

விருதுகள்:-

வேதியியல் நோபல் பரிசு (1943) ,
கோபால்ட் பதக்கம் (1949), 
ஃபாரேவ் லெசெரிப்சஸ் பரிசு (1950) ,சமாதான விருதுக்கான அணுக்கள் (1958) ,
1959-ல் அமைதிக்கான பதக்கம்,  உள்ளிட்ட பல பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றார். உபாஸலா கோபன்ஹேகன், லண்டன் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. 

மறைவு:-

கதிரியக்க வேதியியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இவர், ஜூலை-05, 1966, ஃப்ரீபர்க் இம் பிரீசுகோ,  ஜெர்மனியில், தமது 81-வது வயதில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.