ஜூலை-30.இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என பன்முகப் பரிமாணம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy) பிறந்த தினம்..
ஜூலை-30.இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என பன்முகப் பரிமாணம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy) பிறந்த தினம் -
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிறந்தவர் (1886). தந்தை பிரபல வழக்கறிஞர். தாயார், பிரபல பாடகர். பருவமடைந்த பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டினால் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஆனாலும் தந்தையின் உதவியுடன் தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி மாநிலத்தில் முதலிடமும் பெற்றார்.
இவர் கல்லூரியில் சேர புதுக்கோட்டை மன்னர் சிறப்பு ஆணை பிறப்பித்ததோடு உதவித் தொகையும் வழங்கினார். எதையும் தடைக்கற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக ஏற்ற இந்த அசாதாரணப் பெண்மணி, ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி சரித்திரம் படைத்தார்.
சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றினார். இவரது அறிவாற்றலை அறிந்த அரசு, பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேஷப் பயிற்சி பெற உபகாரச் சம்பளம் கொடுத்து, அவரை இங்கிலாந்து அனுப்பியது.
மருத்துவம் தவிர சமூக சேவைகளில், குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி, சுகாதாரம், ஆகியவற்றில் விசேஷ ஈடுபாடு கொண்டிருந்தார்.
நாட்டின் முதல் பெண்கள் அமைப்பான இந்திய மாதர் சங்கத்தைத் தொடங்கி இறுதிவரை அதன் தலைவியாக செயல்பட்டார். மாதர் சங்கம் நடத்திய பெண்களுக்கான ‘ஸ்திரீ தர்மம்’ என்ற மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் இவர்தான்.
மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சட்டமன்றத்தின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார். 1925-ல் சட்டசபைத் துணைத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்கள் தடைச் சட்டம், ஏழைப்பெண்களுக்கு இலவசக் கல்வி ஆகிய புரட்சிகரமான சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றினார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக அடையாறில் அவ்வை இல்லம் தொடங்கினார். புற்றுநோய் கண்ட தன் தங்கை இளம் வயதில் இறந்ததும், ஒரு டாக்டராக இருந்தும் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் போனதும் இவரை மிகவும் பாதித்தது.
இந்தத் துயரம் மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதால், 1925-ல் லண்டன் சென்ற இவர், செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். இந்தியா திரும் பிய இவர், சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் முயன்று 2 லட்சம் ரூபாய் நிதி திரட்டினார்.
தற்போது ஆசியாவிலேயே புற்றுநோய் சிகிச்சைக்கு சிறந்த இடமாக கருதப்படும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது அயராத முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.1936 முதல் முழு நேர மருத்துவராக செயல்படத் தொடங்கிய இவர், மீனவக் குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டார். பல நூல்களை எழுதினார்.
ஈடிணையற்ற சமூக சேவைகளுக்காக பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளும், கவுரவங்களும் பெற்றார். மகத்தான சமூக சேவகியும், தலைசிறந்த மருத்துவரும், பெண்களின் முன்னேற்றத் திற்காக பாடுபட்டவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, 1968-ல் 82-ம் வயதில் மறைந்தார்.
No comments: