Breaking

செப்டம்பர்-24.நாட்டு நலப்பணித் திட்டம் தினம் நாள் (என்எஸ்எஸ்) (National Service Scheme)


நாட்டு நலப்பணித் திட்டம் தினம் நாள்
(என்எஸ்எஸ்)
(National Service Scheme):-

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். இது 1969ல் தொடங்கப்பட்டது.

வரலாறு:-

இந்திய விடுதலைக்குப் பிறகு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 
தலைமையில் இருந்து வந்த பல்கலைக்கழக மானியக் குழு தன்னார்வ அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. 
இந்த கருத்தின் பல்வேறு அம்சங்களையும், இந்த துறையில் மற்ற நாடுகளின் அனுபவங்களையும் ஆய்ந்த பிறகு, ஜனவரி, 1950 ல் நடந்த மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் மாணவர்கள் தங்களது நேரத்தின் ஒரு பகுதியை செலவிட வேண்டும் என்றும் அதற்கு ஆசிரியர்களும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 
1952 ல் இந்திய அரசின் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் வரைவில், இந்திய மாணவர்களுக்கு சமூக மற்றும் தொழிலாளர் சேவையின் தேவை வலியுறுத்தப்பட்டது. 

1958 இல், முதலமைச்சர்களுக்கு, தனது கடிதத்தில் ஜவகர்லால் நேரு சமூக சேவை பட்டம் பெறுவதற்கு ஒரு முன்நிபந்தனையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.அவர் இதை செயல்படுத்துவதற்கான தக்க திட்டத்தை வரையும்படி மத்திய கல்வித்துறையை வலியுறுத்தினார்.
1959 இல், இந்த திட்டத்தின் ஒரு வரைவு வெளிக்கோடு 
மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் முன் வைக்கப்பட்டது. மேலும் அம்மாநாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை நியமனம் செய்ய பரிந்துரைத்தது. இதன் விளைவாக, ஒரு தேசிய சேவை குழு, தேஷ்முக்கின் நிர்வாக பொறுப்பின் கீழ் ஆகஸ்ட் 1959,28 அன்று நியமிக்கப்பட்டது. அக்குழு ஒன்பது மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அனால் நிதி தாக்கங்கள் மற்றும் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1960 ல் இந்திய அரசு உலகின் பல்வேறு நாடுகளில் மாணவர்களின் தேசிய சேவை எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வுசெய்ய, கே. ஜீ. சையுதீனை நியமித்தது. அவர் இந்திய மாணவர்கள் சமூக சேவை திட்டத்தை சாத்தியமாக்க பல்வேறு பரிந்துரைகளை "இளைஞர் தேசிய சேவை" என்ற தலைப்பின் கீழ் அரசிடம் சமர்ப்பித்தார். பின்னர், டாக்டர் டி.எஸ் கோத்தாரி (1964-66) தலைமையில் அமைக்கப்பட்ட கல்வி ஆணைக்குழு கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் சமூக சேவையுடன் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இந்திய அரசின் கல்வி பற்றிய தேசிய கொள்கை அறிக்கையில், பணி அனுபவம் மற்றும் தேசிய சேவை கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்று அடித்தளம் அமைக்கப்பட்டது.
இறுதியாக திட்ட குழு நான்காவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தேசிய சேவை திட்டத்திற்கு 5 கோடி வழங்கப்பட்டது. இந்த தேசிய சேவை திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு வெள்ளோட்ட திட்டமாக துவங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

  
எனக்காக அல்ல உனக்காக:-


முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மனதில் 1958-ல் எழுந்த எண்ணம் உருப்பெற்று, 24.09.1969-இல் அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.வி.ராவ் மூலம் எனக்காக அல்ல உனக்காக என்ற தாரக மந்திரத்துடன் என்எஸ்எஸ் எனப்படும் நாட்டு நலப்பணித் திட்டம் தொடங்கப்பட்டது. 


மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மிகப் பெரிய அங்கீகரிக்கப்பட்ட இளைஞர் அமைப்பாக என்எஸ்எஸ் விளங்குகிறது. 

முதலில் 37 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 40,000 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட என்எஸ்எஸ், தற்போது சுமார் 600 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 42 லட்சம் மாணவர்களைக் கொண்டு சேவைகளைச் செய்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 22 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 4,20,000 மாணவ, மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைந்து சேவையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.    
  
சமுதாய சேவையின் மூலம் தங்களது ஆளுமைத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்வது என்எஸ்எஸ்-இன் முக்கிய நோக்கம்.

 ஒடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் ஆலயத்தில் உள்ள தேர்ச் சக்கரம், என்எஸ்எஸ் அமைப்பின் குறியீடாகும்; இதன் 8 கட்டங்கள் 24 மணி நேர சேவையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டு நலப்பணித் திட்டத்தில் உள்ள மாணவர்கள் ஆண்டுக்கு 120 மணி நேர சேவையும் ஏழு நாள் சிறப்பு முகாமில் பங்கேற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஏழு நாள் முகாமில் ஒரு கிராமத்தை மாணவர்கள் தத்தெடுத்து அங்கேயே தங்கி அந்தக் கிராமத்தின் சமுதாய, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துதல், மரம் நடுதல், பள்ளிக் கட்டடத்துக்கு வெள்ளை அடித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழிகாட்டி வகுப்புகள் நடத்துதல், மது-புகை-எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராம மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஊர் மகளிருக்கு கோலப் போட்டி நடத்தி பரிசளித்தல் ஆகியவை நடைபெறும். மேலும், கிராம மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மாவட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்று, அவற்றுக்கு  தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளையும் என்எஸ்எஸ் மாணவர்கள் செய்கின்றனர்.

மேலும், சிறப்பு முகாமில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் நிறைய மாற்றங்களை அவர்களிடத்தில் காண முடியும். குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து அவர்களே சமையல் செய்து மற்றவர்களுக்குப் பரிமாறிய பிறகு உண்பது, பாத்திரங்களை தாங்களே சுத்தம் செய்வது, அனைவருடனும் அனுசரித்து எப்படிப் பழக வேண்டும், கிராம கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறை அனுபவம் ஆகியவற்றை இந்தச் சிறப்பு முகாம் மூலம் மாணவர்கள் பெறுகின்றனர். இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக 240 மணி நேர சேவையை மாணவர்கள் செய்ய வேண்டும். 

சிறப்பு முகாம்கள் தவிர தேசிய ஒருங்கிணைப்பு முகாம், சாகச முகாம், குடியரசு தின அணிவகுப்பு முகாம், தேசிய இளைஞர் விழா உள்ளிட்டவையும் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. தேசிய ஒருங்கிணைப்பு முகாமில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 200 மாணவர்கள் ஒரு மாநில பல்கலைக்கழகத்தில் கூடி அவரவர் மாநில கலாசாரங்களை தொடர்ந்து 
7 நாள்கள் வெளிப்படுத்துவர்.

இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசத்தில் நடத்தப்படும் கோடை, குளிர்கால சாகச முகாம்களில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 1,500 மாணவர்கள் பங்கேற்பது வழக்கம். 

சறுக்கு விளையாட்டு, மலையேற்ற பயிற்சி, நடைப் பயிற்சி, ஆற்றைக் கடக்கும் பயிற்சி ஆகியவை மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

1988-ஆம் ஆண்டு முதல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பை என்எஸ்எஸ் மாணவர்கள் பெற்றனர். இதில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 81 மாணவர்கள் பங்கேற்று குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். 

தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் ஆண்டுதோறும் 81 மாணவர்கள் பங்கேற்கும் வாய்ப்பை கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.


ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் விழா நடைபெறும். இதில் அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்துவர்.

சிறப்பாகச் சேவை செய்யும் பல்கலைக்கழகம், கல்லூரி, பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அலுவலர்கள் மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொருத்தவரை படிப்பு மட்டும் அவர்களுக்கு அறிவை அளிக்காது; சமுதாயம் சார்ந்த சேவைகளும் சிறந்த சமூகப் பழக்கங்களும் இருந்தால்தான் அவர்கள் முன்னேற முடியும். 

இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல; அவர்களைக் குறைவாகப் பயன்படுத்துகிறோம். 
கல்லூரியில் 5,000 மாணவர்கள் இருந்தால், அவர்களில் 500 மாணவர்களுக்கு மட்டுமே நாட்டு நலப்பணித் திட்டத்தில் பங்கு பெறக் கூடிய சூழல் உள்ளது. 

எனவே சமுதாய மேம்பாட்டிற்கு 
எல்லா மாணவர்களையும் பங்கு பெறச் வழிவகை  மேற்கொண்டால் சிறந்த சமுதாயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை..

No comments:

Powered by Blogger.