அக்டோபர் 24 உலக போலியோ தினம்(POLIO DAY). Poliomyelitis, இளம்பிள்ளை வாதம்..
இன்று சிறப்பு நாள்:-அக்டோபர் 24
உலக போலியோ தினம்(POLIO DAY).
Poliomyelitis, இளம்பிள்ளை வாதம்..
இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் (Polio virus)என்று அழைக்கிறோம்.
அவை போலியோ வைரஸ் ரகம் 1 ,2 , 3 என்று மூன்று ரகங்கள் உள்ளன.
இந்த வைரஸ் வகைகள் குறிப்பாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை மிக்கவை. முதுகுத் தண்டு நரம்புகளையும் ( spinal cord ) தலை நரம்புகளையும் அதிகமாக தாக்குகின்றன. இதனால் தசைகளை இயங்கச் செய்யும் செயல் நரம்புகள் ( motor neurones ) செயல் இழந்து போகின்றன. குறிப்பாக கை, கால்கள் பாதிக்கப்பட்டால் அவை சூம்பிப்போகின்றன. அதனால் அவர்களால் நடக்க முடியாமல் போய்விடுகிறது.
உலக முழுதும் போலியோ வியாதி காணப்பட்டாலும், அது தோன்றும் அளவு ( incidence ) தற்போது குறைந்துள்ளது இதற்குக் காரணம் மக்களிடையே உண்டான சுகாதார விழிப்புணர்வு, முறையான கழிவறைகள், பரவலான தடுப்பு மருந்துகள் பயன்படுத்துவது போன்றவை எனலாம்.
பரவும் முறை:-
இந்த வைரஸ் மலம் – வாய் வழியாக ( faecal – oral route ) பரவுகிறது. மலத்தில் இந்த வைரஸ் வெளியேறும். அதனால் அந்த மலம் கலந்த நீரைக் குடிப்பதால் வைரஸ் தொற்று உண்டாகிறது. இதனால்தான் பாதுகாப்பான குடிநீர் வலியுறுத்தப்படுகின்றது .
அதோடு உணவகங்களில் பணிபுரிவோரின் கைகள் எப்போது சுத்தமாக இருக்க வேண்டும்.
இளம்பிள்ளை வாத நோயின் அறிகுறிகள்
வைரஸ் தொற்று உண்டான பின் நோயின் அறிகுறி தோன்ற 7 முதல் 14 நாட்கள் ஆகும் . இதை உறங்கும் காலம் (incubation period) என்பர்.
அறிகூறிகள்:-
வெளியில் தோன்றாத தொற்று வகை – inapparent infection
வைரஸ் தொற்று உண்டான 95
சதவிகிதத்தினருக்கு இந்த வகை இருக்கும். இதில் அறிகுறிகள் ஏதும் இருக்காது.
வெளியில் தோன்றும் தொற்று வகை (abortive poliomyelitis)
இந்த வகை 4 முதல் 5 சத விகிதத்தினருக்கு உண்டாகலாம். இதில் காய்ச்சல், தொண்டை வலி, தசைகள் வலி போன்றவை தோன்றி சில நாட்களில் தானாக குணமாகும்.
முடக்குவாதம் இல்லாத இளம்பிள்ளை வாதம் (non – paralytic poliomyelitis)
இதில் வெளியில் தோன்றும் வகைக்கான அறிகுறிகள் தோன்றுவதோடு மூளைச் சவ்வு தொடர்புடைய தொந்தரவுகள் (meningeal irritation) உண்டாகும். ஆனால் நோய் தானாக முற்றிலும் குணமாகிவிடும்.
முடக்குவாத இளம்பிள்ளை வாதம் ( paralytic poliomyelitis )
இந்த வகைதான் ஆபத்தானது .
போலியோ வைரஸ் கிருமியால் தாக்கப்படும் பிள்ளைகளில் 0.1
சதவிகிதத்தினர் இந்த கொடிய வகையால் பாதிக்கப்படுகின்றனர்.
வாதம் உண்டாவதை துரிதப்படுத்துபவை வருமாறு:
ஆண் பிள்ளைகள்
காயம், அறுவை சிகிச்சை, ஊசி போட்டுக் கொள்ளுதல்
சமீபத்திய தொண்டை சதை அறுவை சிகிச்சை.
இந்த வகையில் காய்ச்சல், தொண்டை வலி, தசை வலி உண்டாகி 4 முதல் 5 நாட்களில் சரியாகும். ஆனால் அதன்பின் நோய் மீண்டும் கடுமையாகத் தோன்றும். மூளை சவ்வு பிரச்னை அதிகமாகும். அதோடு கழுத்து, இடுப்புப் பகுதி தசைகள் கடுமையாக வலிக்கும். இவை ஒருசில நாட்கள் தொடர்ந்தபின் வாதம் உண்டாகும். பாதிக்கப்பட்ட காலில் தசைகள் செயலிழந்து போய்விடும். ஆனால் தொடு உணர்ச்சி குன்றாமல் நிலைத்திருக்கும்.
5 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு கால்கள் மட்டும் வாதத்தால் பாதிக்கப்படுவர். அதைவிட பெரிய பிள்ளைகளுக்கு கைகளில் வாதம் உண்டாகும்.
பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் இரண்டு கால்களும் ( paraplegia ) அல்லது கால்களுடன் இரண்டு கைகளும்கூட ஒரே நேரத்தில் (quadriplegia) செயல் இழக்கலாம்.
முருள வாதம் (bulbar paralysis)
இதில் தலை நரம்புகள் ( cranial nerves ) மற்றும் சுவாச தசைகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டு (respiatory muscle paralysis) செயல் இழந்து போகலாம்.
இதுபோல் உதடு, நாக்கு, தொண்டை ஆகிய பகுதிகளிலும் வாதம் உண்டாகும். இந்த பாதிப்பால் இயல்பான காப்பு நரம்பியக்கங்களை நோயாளி இழந்துவிடுகிறார். அதனால் மூச்சடைப்பு, சுவாசச் சீதசன்னி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இளம்பிள்ளை வாத நோய்க்கான சிகிச்சை முறைகள்
நோய் வந்தபின் இதற்கு அதிகமான சிகிச்சைகள் இல்லை.
துவக்கக் காலத்தில் நல்ல ஓய்வு தேவை.
அதிலிருந்து விடுபட்டு வாதம் உண்டானால் உடற்பயிற்சி மருத்துவம் (physiotherapy) , தொழில் முறை மருத்துவம் (occupational therapy) போன்றவை தரப்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் பலம் சேர்க்கலாம்.
கால் நடக்க முடியாதவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு கிடுக்கிமானி
(calipers) உதவியுடன் நடக்கலாம்.
இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ள தடுப்பு மருந்து பயன்படுத்தியதால் இன்று உலகளாவிய நிலையில் இந்நோய் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சொட்டு மருந்து பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மாதங்களில் வாய் வழியாக தந்தாலே போதுமானது.
எப்போதுமே பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரையே பருக வேண்டும் என்பதும் மிக முக்கியமானது.
வரலாறு:-
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒரு முக்கிய சுகாதார பிரச்சினையாக இருந்து வந்தது.
1952-ம் ஆண்டில் 58 ஆயிரம் பேர் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.
போலியோ என்னும் இளம்பிள்ளை வாதநோய்க்கு முதன்முதலாக தடுப்பு ஊசி கண்டுபிடித்தவர் டாக்டர் யொனாசு சால்க் என்பவர் ஆவார்.
இவர் 28.11.1914-ல் நியூயார்க்கில் பிறந்தார். 1947-ம் ஆண்டில் சால்க் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948-ல் போலியோ நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டார். இப்பணிக்காக தொடர்ந்து 7 ஆண்டுகள் அவர் செலவழித்தார். 18 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி சிறுவர்களை சோதித்து தடுப்பூசியை கண்டுபிடித்தார். 12.4.1955-ல் போலியோவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது வெற்றிகரமாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் டாக்டர் யொனாசு சால்க் ஒரு அதிசய மனிதர் என போற்றப்பட்டார்.
அவரை தொடர்ந்து டாக்டர் ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் என்பவர் வாய்வழியாக சொட்டுமருந்து கொடுக்கும் முறையை கண்டுபிடித்தார்.
இன்று இதுதான் நடைமுறையில் உள்ளது. பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டுமுறை இரண்டு சொட்டு மருந்து போடவேண்டும் என்பது தற்போது நடைமுறையாக உள்ளது.
முதன்முதலாக டாக்டர் யொனாசு சால்க்கினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாலும், போலியோ தடுப்பூசி போடுவதனால் கடுமையான காய்ச்சல் வருவதாலும் அதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக ஆராய்ச்சி செய்து ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் வாய்வழியாக சொட்டுமருந்து போடப்படும் முறையை கண்டுபிடித்தார்.
இதனால் போலியோ சொட்டுமருந்து போடும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை.
ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின்:-
26.8.1906-ம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவர் போலந்தில் பிறந்து அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க நாட்டில் மருத்துவ படிப்பை படித்து போலியோ நோயை ஒழிப்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து இறுதியாக வாய்மூலம் போலியோ சொட்டுமருந்து இரண்டு சொட்டுகள் மட்டும் போடப்படும் முறையை கண்டுபிடித்தார்.
இளம்பிள்ளை வாதநோயை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேட்டால்தான் உருவாகிறது. சுகாதாரமற்ற உணவு, குடிநீர் மூலம் வாய்வழியாக உடலுக்குள் செல்லும் போலியோ வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது.
இந்த நோய் வராமல் இரண்டு சொட்டு தடுப்பு மருந்து குழந்தைகளைக் காப்பாற்றும்.
போலியோ நோய்க்கு சொட்டு மருந்தை டாக்டர் ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் கண்டுபிடித்த போதிலும் ஆண்டுக்கு 3,50,000 குழந்தைகளை முடக்கிப்போட்ட இக்கொடிய நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றி போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க சர்வதேச ரோட்டரி 1985-ல் முடிவெடுத்தது.
சர்வதேச ரோட்டரி முயற்சியால் 124 நாடுகளில் தற்போது போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது.
2012-ல் இந்தியாவை போலியோ முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
உலக வரலாற்றில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் என்ற கடுமையான நோய்க்கு டாக்டர் யொனாசு சால்க், டாக்டர் ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் ஆகிய இருவரும் மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இன்றைக்கு உலகம் முழுவதும் இளம்பிள்ளை வாதத்தினால் கோடிக்கணக்கானோர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.
உலகளவில் போலியோ நோய் முழுவதுமாக இதுவரை ஒழிக்கப்பட்டதற்கு முழு முதற்காரணம் சர்வதேச ரோட்டரி அமைப்பு முக்கிய காரணமாகும்.
விழிப்புடன் இருப்போம்! வருங்காலம் போலியோ இல்லாத உலகைப் படைப்போம்..


No comments: