நவம்பர்-04. தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளர், இந்தியத் தாவரவியல் வல்லுநர்-ஜானகி அம்மாள் (Janaki Ammal Edavalath Kakkat) பிறந்த தினம்.
இன்று பிறந்தநாள்:- நவம்பர்-04.
தாவரவியல் நிபுணரும், மரபினக் கலப்பு ஆராய்ச்சியாளர்,
இந்தியத் தாவரவியல் வல்லுநர்-ஜானகி அம்மாள்
(Janaki Ammal Edavalath Kakkat) பிறந்த தினம்.
பிறப்பு:-
கேரள மாநிலம் தலச்சேரியில் நவம்பர்-04,1897 ஆம் ஆண்டு பிறந்தார். முழு பெயர் ஜானகி அம்மாள் எடவலத்து காக்காட். தந்தை திவான் பகதூர் இ.கே.கிருஷ்ணன், சென்னை மாகாண துணை நீதிபதியாகப் பணியாற்றியவர். இயற்கை அறிவியல், தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்.
19 குழந்தைகளைக் கொண்ட பெரிய குடும்பம் இவருடையது. பெண்கள் கற்பதே அரிதாக இருந்த அந்த காலத்தில், இவரது குடும்பத்தில் பெண்கள் உயர்கல்வியும் கற்க பெற்றோர் ஊக்கமளித்தனர். தந்தைபோல, தாவரவியலில் சிறு வயதில் இருந்தே அதிக நாட்டம் கொண்டிருந்தார் ஜானகி.
தலச்சேரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் தாவரவியலில் இளங்கலைப் பட்டம், சென்னை மாநிலக் கல்லூரியில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். உயிரி மரபியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டினார். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அமெரிக்கா சென்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1925-ல் முதுநிலைப் பட்டம் பெற்றார். நாடு திரும்பியதும், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்விப் பணியைத் தொடர்ந்தார். மீண்டும் மிச்சிகன் பல்கலைக்கழகத்துக்கு சென்று, கிழக்கத்திய நாடுகளின் முதல் ஃபெல்லோவாக சேர்ந்து, 1931-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பணிகள்:-
திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். கோவை கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.
கண்டுபிடிப்புகள்:-
உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டனுடன் இணைந்து தாவர குரோமோசோம் அட்லஸ் என்ற வரைபடத் தொகுப்பை 1945-ல் வெளியிட்டார். லண்டனில் உள்ள ஜான் இன்னஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் இணை மரபியலாளராகப் பணிபுரிந்தார்.
இந்திய தாவரவியல் சர்வே அமைப்பை சீரமைத்து, ஒருங்கிணைப்பதற்காக ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1951-ல் நாடு திரும்பினார். அதன் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார். கரும்பு சம்பந்தமாக இவர் மேற்கொண்ட உயிர் கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக் கலப்பு வகை கரும்புகளையும் அதைச் சார்ந்த புல்லினங்களையும், புல்பேரினங்களையும் இணைத்து உருவாக்க வழிவகுத்தன.
அலகாபாத் மத்திய தாவர ஆய்வகத் தலைவர், ஜம்மு மண்டல ஆராய்ச்சி ஆய்வக சிறப்பு அலுவலர் உள்ளிட்ட இந்திய அரசுப் பணிகளிலும், சிறிது காலம் டிராம்பே அணு ஆராய்ச்சி ஆய்வகத்திலும் பணிபுரிந்தார்.
சென்னைக்கு 1970-ல் வந்தார். சென்னை பல்கலைக்கழக தாவரவியல் உயர் ஆய்வு மையத்தில் இணைந்து, மதுரவாயல் கள ஆய்வகத்தில் இறுதிவரை பணியாற்றினார். வெண்கோஷ்டம் போன்ற மூலிகைச் செடிகளின் பயன்பாடு குறித்து ஆராய்ந்தார்.
விருதுகள்:-
மிச்சிகன் பல்கலைக்கழகம் இவருக்கு எல்எல்டி பட்டம் வழங்கியது.
1977 ஆம் ஆண்டு பத்ம விருது பெற்றார்.
மறைவு:-
இந்தியப் பாரம்பரிய தாவரவியல் அறிவை மீட்டெடுப்பது, திரட்டும் பணியில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட இவர், பிப்ரவரி-07, 1984 ஆம் ஆண்டு, 87-வது வயதில் மெட்ராஸ் தமிழ்நாட்டில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இந்திய அரசி சுற்றுச்சூழல், கானியல் அமைச்சகம் 2000ல் இவரது பெயரால் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருதை நிறுவியது.
உயிரியல் வகைப்பாட்டியலில் சிறந்த பணிகளுக்கான வளர்ச்சியைத் தூண்டவும், அவற்றில் இளம்மாணவரையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்தவும் 1999 இல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது. இரு விருதுகளில் ஒன்று தாவரவியல் துறையில் வகைப்பாட்டியலில் சிறந்த பஙளித்தவர்களுக்கும், விலங்கியல் வகைப்பட்டியல் அல்லது நுண்ணுயிரியலில் சிறந்த பங்களிப்பு நல்கியவர்களூக்கும் வழங்கப்படும். இவ்விரண்டும் முறையே ஈ.கே. ஜனகி அம்மாள் தாவரவியல் வகைப்பாட்டியல் தேசிய விருது என்றும் ஈ.கே. ஜனகி அம்மாள் விலங்கியல் வகைப்பாட்டியல் தேசிய விருது என்றும் வழங்கப்படுகின்றன.


No comments: