Breaking

நவம்பர்-07. இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவரும், கதிர்வீச்சைக் கண்டறிந்தவருமான மேரி க்யூரி பிறந்த தினம்.



இன்று பிறந்தநாள்:- நவம்பர்-07.

இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவரும், கதிர்வீச்சைக் கண்டறிந்தவருமான-
 மேரி க்யூரி (Marie Salomea Sklodowska-Curie) பிறந்த தினம்.

போலந்து தலைநகர் வார்சாவில் நவம்பர் -07, 1867 பிறந்தார். இயற்பெயர் மரியா சலோமியா ஸ்கோடோஸ்கா. பள்ளி ஆசிரியரான தந்தையிடம் கணிதம், இயற்பியல் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கினார்.

இவருக்கும், இவரது அக்காவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை. இவர் வேலை பார்த்து அக்காவைப் படிக்கவைப்பது, பிறகு அவர் வேலைக்குப் போய் இவரைப் படிக்கவைப்பது என்று உடன்படிக்கை செய்துகொண்டனர். அக்கா பாரீஸ் சென்றார். அவருக்கு உதவ ஒரு வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தார் மேரி. 6 ஆண்டுகளாக அக்காவுக்கு பணம் அனுப்பினார்.

அக்காவின் அழைப்பை ஏற்று, பாரீஸ் சென்றார். அங்கு சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம் பயின்றார். பகுதிநேர வேலைகள் பார்த்து சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்தினார்.

பியரி என்ற ஆராய்ச்சியாளரின் அறிமுகம் கிடைத்தது. இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரும் வாழ்விலும் இணைந்தனர். எக்ஸ் கதிர்களை ஆராய்ந்துவந்த விஞ்ஞானி பெக்கரெல், அந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியை மேரியிடம் ஒப்படைத்தார். தம்பதிகள் இணைந்து ஆராய்ச்சிகளில் இறங்கினர்.

யுரேனியம் விலை அதிகம் என்பதால், இவர்களால் வாங்க இயலவில்லை. ஆஸ்திரியாவில் யுரேனியத்தைப் பிரித்தெடுத்த பிறகு, எஞ்சியவற்றை குப்பையில் கொட்டுவதாக கேள்விப்பட்டனர். போக்குவரத்து செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து, அதை கொண்டுவந்தனர். டன் கணக்கில் குப்பை குவிந்தது.

உரிய கருவிகள், உபகரணங்கள் இவர்களிடம் கிடையாது. எளிமையாக மண்ணைக் கரைத்து, கொதிக்க வைத்து பக்குவம் செய்து, சளைக்காமல் ஆய்வு செய்தனர். யுரேனியக் கதிர் போல 300 மடங்கு ஆற்றல் கொண்ட கதிர்களைக் கண்டறிந்தனர்.

அந்த கதிர்கள் பட்டு இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையிலும் மேரி, ‘இது திசுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. எனவே நோய் விளைவிக்கும் திசுக்களையும் இதன்மூலம் அழிக்கலாம்’ என்பது தெரியவருவதாக கூறி மகிழ்ந்தார்.

தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். யுரேனியக் கழிவில் இருந்து பொலோனியம் தனிமத்தைக் கண்டறிந்தார். தொடர் ஆய்வுகளில் கிடைத்த சில படிகங்கள் ஆற்றல் மிக்க கதிர்களை தொடர்ந்து வீசின. இந்த கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக பெக்கரெல் மற்றும் க்யூரி தம்பதிக்கு 1903-ல் நோபல் பரிசு கிடைத்தது.

சாலை விபத்தில் கணவர் பியரி 1906-ல் இறந்தார். சிறிதுகாலம் சோகத்தில் இருந்த மேரி, பின்னர் உறுதியுடன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். கணவர் பார்த்த பேராசிரியர் பணியை பிரான்ஸ் அரசு இவருக்கு வழங்கியது. பாரீஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியை என்ற பெருமையைப் பெற்றார். ரேடியக் கூட்டுப் பொருளின் படிவங்களை பிரித்தெடுத்து, ரேடியம் தனிமத்தை தனியாகப் பிரித்தார். இதற்காக 1911-ல் 2-வது நோபல் பரிசைப் பெற்றார்.

கதிர்வீச்சால் தன் உறுப்புகள் பாதிக்கப்படுவதை அறிந்தார். ஆனாலும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரேடியத்தைக் கண்டறிந்த தன்னலமற்ற விஞ்ஞானி மேரி க்யூரி உடல்நலம் பாதிக்கப்பட்டு 67-வது வயதில், ஜூலை -04 1934 ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Powered by Blogger.