Breaking

இன்று நினைவு நாள்:- நவம்பர்-07. புவியியல் அறிஞரும் உயிரினங்களின் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவருமான- ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் மறைந்த தினம்.



இன்று நினைவு நாள்:- நவம்பர்-07.

புவியியல் அறிஞரும் உயிரினங்களின் இயற்கைத் தேர்வு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டவருமான- ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் 
வாலஸ் 

மறைந்த தினம்.

இங்கிலாந்து நாட்டில் அஸ்க் (Usk) நதி அருகில் உள்ள கென்சிங்டன் காட்டேஜ் என்ற இடத்தில் பிறந்தார் (1823). தந்தை பல வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தாலும் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. படிக்க வசதி இல்லாததால் சிறுவனின் பள்ளிப் படிப்பு 13 வயதிலேயே நின்று விட்டது.

பள்ளிப் படிப்பு நின்றாலும் புத்திசாலி யான சிறுவன் சுயமாக கற்று பல விஷயங்களைத் தெரிந்துகொண்டான். 1937-ல் மூத்த அண்ணனுடன் சேர்ந்து நில அளவை பிசினசில் சுமார் 7 ஆண்டுகள் ஈடுபட்டார்.

1844-ல் லீசெஸ்டர் என்ற பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. அந்தப் பள்ளி நூலகத்தில் இருந்த இயற்கை வரலாறு குறித்த பல அரிய நூல்களைக் கற்றார். ஹென்றி வால்டர் பேட்ஸ் என்பவரை சந்தித்தார். இருவருமே முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள், சுயமாக கற்றவர்கள், வண்டுகளை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.

நண்பர்கள் இருவரும் ஊக்கத்தால் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இருவரும் பிரேசிலுக்குப் புறப்பட்டனர். ஆனால், இடையே ஏதோ காரணத்தால், வாலஸ் மட்டும் பயணத்தைத் தனியாகத் தொடர்ந்தார். போகும் இடங்களில் எல்லாம் ஏராளமான தாவரங்கள், விலங்கினங்களின் மாதிரிகளை சேகரித்தார்.

அந்தந்த இடங்களின் பூர்விக மக்களைப் பற்றிய தகவல்கள், புவியியல் அமைப்பு குறித்து தகவல்களை சேகரித்தார். 1852-ல் இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இவரது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு மூழ்கியது. கப்பலில் இருந்தவர்கள் உயிர் பிழைத்துக்கொண்டாலும், நான்கு ஆண்டுகள் கவனமாக சேகரித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மாதிரிகளும், திரட்டி வைத்திருந்த குறிப்புகளும், கப்பலோடு போய்விட்டது.

நாடு திரும்பிய இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளை தனது அனுபவங்கள் குறித்து கட்டுரைகள் எழுதுவதில் செலவிட்டார். எட்டு வருடங்கள் தொடர்ந்து பறவைகள், பாம்புகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள் என 1,25,000-க்கும் அதிகமான மாதிரிகளை சேகரித்தார்.

உயிரினங்களின் பிறப்பு, புவியியல் வாழ்விடங்கள் ஆகியவை குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் முன்னேற்றத்துக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. ‘ஏ நேரேட்டிவ் ஆஃப் டிராவல்ஸ் ஆன் தி அமேசான் அன்ட் ரியோ செக்ரோ’ மற்றும் ‘பாம் ட்ரீஸ் ஆஃப் தி அமேசான்’ என்ற இரண்டு நூல்களை எழுதினார்.

பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றி ஒரு கட்டுரை எழுதி டார்வினுக்கு அனுப்பி வைத்தார். இயற்கைத் தேர்வின் (natural selection) மூலம் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முழுமையாக விளக்கும் உரையைக் கொண்டிருந்தது இவரது கட்டுரை.

பரிணாம வளர்ச்சி குறித்து 20 வருடங்களாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்த டார்வின் அதுவரை எந்த ஆய்வுக் கட்டுரையையும் வெளியிடவில்லை. வாலசின் கட்டுரையை படித்தபிறகு டார்வினும் தனது கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை வெளியிட்டார். இந்த இருவரது கட்டுரைகளும் 1858-ல் லண்டன் லின்னன் கழகத்தில் வாசிக்கப்பட்டன.

தடுப்பூசி, ஆன்மிகம், தேசியமயமாக்கல், சமூக மாற்றங்கள், மனிதனின் மேம்பாடுகள், ஆகியவை தொடர்பாக ஏறக்குறைய 22 புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘உயிரி புவியியலின் தந்தை’யாக போற்றப்படும் ஆல்ஃபிரெட் வாலஸ் 1913-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 90-வது வயதில் மறைந்தார்.


No comments:

Powered by Blogger.