செவ்வாய் கிரகத்திற்கு மேலே சுற்றி வந்த-ஓடிசி விண்கலன்கள் அனுப்பிய தகவல்களை வைத்து, தண்ணீர் வரைபடத்தை நாசா உருவாக்கியுள்ளது.
சிவப்பு கிரகமான செவ்வாயில், பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை, நம், 'இஸ்ரோ' முதல், அமெரிக்காவின், 'நாசா' வரை, விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.அடுத்த கட்டமாக, செவ்வாய் கிரகத்திற்கு மேலே சுற்றி வந்த, 'ஓடிசி' உள்ளிட்ட சில விண்கலன்கள் அனுப்பிய ஏராளமான தகவல்களை வைத்து, ஒரு வரைபடத்தை நாசா உருவாக்கியுள்ளது.இந்த வரைபடம், செவ்வாயின் மேற்பரப்பிற்கு அருகே எங்கு நீர் இருக்கிறது என்பதை காட்டுகிறது. விண்கலன் தகவல்களின்படி, செவ்வாயில் சில இடங்களில், 2.5 செ.மீ. ஆழத்திலேயே பனிக்கட்டி வடிவில் நீர் உள்ளது.செவ்வாயின் வெப்ப உமிழ்வு வரைபடம், காமா கதிர் வரைபடம் ஆகியவற்றை வைத்து நாசா விஞ்ஞானிகள், தண்ணீர் இருக்கும் இடங்களை குறித்துள்ளனர்.அடுத்து வரும், 10 ஆண்டுகளில், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப, நாசா உள்ளிட்ட சில விண்வெளி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.இந்நிலையில், செவ்வாயில் மனிதர்கள் எங்கே தரை இறங்குவது என்ற கேள்விக்கு, இந்த தண்ணீர் வரைபடம் பதில் தந்துள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments: