சிவப்பு அரிசியில் அவ்வளவு சத்துக்களா இருக்குதுனு கேள்வி கேட்கிறீங்களா...?
நம்ம பாட்டி காலத்து சிவப்பு அரிசியில் அதிக இயற்கை சத்துக்கள் நிறைந்திருந்தது. ஆனால் இன்று நாம் உண்ணும் வெள்ளை அரிசியில் நிச்சயம் அப்படி கிடையாது.
இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம்.
நெல்லின் மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது.
எத்தனையோ நெல் ரகங்களை விளைவித்திருக்கிறார்கள் நம் முன்னோர். அவற்றில் முக்கியமானது சிவப்பு அரிசி.
இதை, தீட்டப்படாத அரிசி, `முழு அரிசி' என்றும் சொல்வார்கள்.
கிட்டத்தட்ட 40,000 அரிசி வகைகள் இருந்தது என ஆராய்ச்சிகள் கூறுகிறது.
ஆனால் இன்றோ அதில் பல வகை எங்கே சென்றது என்பதுகூட தெரியவில்லை.
அந்த காலத்தில் மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர்.
மாறாக இன்று மிக குறுகிய காலத்திலேயே இறந்து விடுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம்.
குறிப்பாக, அதிகம் நாம் சாப்பிடும் அரிசியின் வகையில்தான் பிரச்சினை உள்ளது. ஏனெனில் இன்று நாம் உண்ணும் "வெள்ளை அரிசி" உமி, தவிடுகளை முற்றிலுமாக நீக்கி செயற்கை முறையில் தயாரிக்க படுகிறது.
ஆனால் அன்றோ, நம் முன்னோர்கள் "கைக்குத்தல் சிவப்பு அரிசியையே" உண்டு மகிழ்ந்தனர்.
சீனா, தாய்லாந்து, வியட்நாம் இந்த மூன்றும்தான் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள்.
இன்றைக்கும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரிசி அதிகமாக விளைவிக்கப்பட்டாலும், இவற்றில் அதிகம் நாம் பெறுவது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைத்தான்.
சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே.
நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.
முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும் எல்.டி.எல் (Low Density Lipoprotein) என்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் நடந்த ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இதில் இருந்து தயாரான எண்ணெயை (Rice Bran Oil) சிலரைப் பயன்படுத்தச் சொல்லி சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
இறுதியில் எல்.டி.எல் அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக (Functional Food) இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
காரணம், இதில் இதய ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான்.
மாதவிடாய் முடிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு சில பிரச்னைகள் தோன்றுவது வழக்கம். அதிகக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் எல்லாம் வரும் வாய்ப்பு உண்டு. வாரத்துக்கு 6 முறை சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக, இந்த அபாயங்களை வெகுவாகக் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.
இதில் இருக்கும் மக்னீசியம், நம் உடலில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட நொதிகளுடன் (Enzymes) செயலாற்றுகிறது. குறிப்பாக, குளூக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில்! இதன் காரணமாக, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் மக்னீசியம் உதவுகிறது; நோயைத் தடுக்கிறது. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம்.

No comments: