Breaking

கண் சிகிச்சையிலும், ஆராய்ச்சிகளிலும் மருத்துவ உலகம்  மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. அதில் கடந்து வந்த பாதையையும், அடுத்து செல்லக்கூடிய இலக்குகளையும் என்னவென்று பார்ப்போம்..!


பழுதடைந்த பார்வையை சீராக்கிட கி.மு.2500–க்கு முன்பே மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக எகிப்தில் லென்ஸ் வைத்த கண்ணாடி  பயன்பாட்டில் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் 13–ம் நூற்றாண்டில்தான் தூரப்பார்வைக்கும், கிட்டப்பார்வைக்கும் தனித்தனி கண்ணாடிகள் பயன்பாட்டுக்கு வந்தன. கண்பார்வை குறைந்தவர்கள் இரண்டு கண்களுக்கும் இரு ஆடிகளை மரத்திலான  சிறு சட்டத்தில்வைத்து பயன்    படுத்தியுள்ளனர். வெனிஸ் நகரில் இத்தொழில் சிறந்து விளங்கியது.

செல்வினோ டி அர்மேட், அல்சான்ட்ரோ டாஸ்பினா ஆகிய இருவரும் இத்தாலியில் உள்ள பிளாரென்ஸ் நகரில்  மூக்குக்கண்ணாடியை கண்டுபிடித்ததாக குறிப்பிடுகிறார்கள். இது 1340–ம் ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் யாத்ரீகர் மார்கோபோலோ தனது பயணக்குறிப்பில், ‘1270– ம் ஆண்டுகளில் வயதான  சீனர்கள் கண்ணாடி அணிந்திருந்ததை பார்த்ததாகவும், அவர்கள் அது அரேபியர்கள் 11–ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தது என  கூறியதாகவும்’ பதிவுகள் இருக்கின்றன.
நாம் இன்று பயன்படுத்தும் நவீன வடிவிலான மூக்குக் கண்ணாடியை 1730–ல் லண்டனைச் சேர்ந்த  எட்வர்டு ஸ்கார்லெட் என்ற கண்ணாடி வணிகர்தான் வடிவமைத்தார்.
பார்வைத்திறனை வரையறை செய்ய ஸ்நெல்லம் சார்ட் உதவுகிறது. சிஞிணிதிலிழிளிறிஜிஞீ ஆகிய ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி ஹெர்மன் ஸ்நெல்லன் என்ற டச்சு நாட்டு  கண் மருத்துவர், அதனை வடிவமைத்தார். அது தான் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.
இரு கண்களுக்கும் இரு பார்வை கண்ணாடி என்ற முறையை மாற்றி, இரு கண்களுக்கும் பொதுவாக ஒரே கண்ணாடியை வடிவமைத்தவர்  பகுத்தறிவாதியும் அறிவியல் விஞ்ஞானியுமான பெஞ்சமின் பிராங்கிளின் ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத்தலைவராகவும் பதவி வகித்தவர். கண்ணாடிகளுக்கு மாற்றாக 1880–ல் டாக்டர் அடால்பிக், எகின்கால்ட் ஆகியோர் இணைந்து காண்டாக்ட் லென்ஸை கண்டுபிடித்தனர். இவை வலி, வீக்கம் போன்ற கூடுதல் கோளாறுகளை ஏற்படுத்திய போதிலும் நிறைய விற்பனையாகின.
பிளாஸ்டிக் காண்டாக்ட் லென்ஸ் 1949–ல் கண்டு      பிடிக்கப்பட்டது. இதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தீட்டி பாலீஸ் செய்ய வேண்டியதிருந்தது.
1971–ல், மிக சிறந்த சாப்ட் லென்ஸ் என்ற காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கப்பட்டது. இன்று பத்து கோடி பேருக்கும் மேலாக இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.
கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ் போன்றவைகளுக்கு மாற்றாக பார்வைத்திறன் குறைபாடுகளை களைய அறுவைச்சிகிச்சை செய்தவர், ஜோஸ் பாராகுவர் என்ற ஸ்பெயின் நாட்டு மருத்துவர். இவர் விழித்   திரையை சீரமைக்க அறுவை சிகிச்சை செய்தார். ரஷ்ய கண் மருத்துவர் ஸ்வையடோஸ்லாவ் என்பவர் கண்    காயத்திற்கு மருத்துவம் செய்த போது பார்வைத்திறன் மேம்படுவதை கண்டறிந்தார். 1973–ல் அவரது மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகம் செய்து அதற்கான காப்புரிமையும் பெற்றார். அடுத்து ஏழு  ஆண்டுகளுக்கு பிறகு தமிழரான ரங்கசாமி சீனிவாசன் என்ற புகழ்பெற்ற இயற்பியலாளர், ‘அல்ட்ரா வயலெட் லேசர் மூலம் பாதிப்பே இல்லாத வகையில்  பார்வைத்திறனை மேம்படுத்தலாம்’ என்று கண்டறிந்தார்.
மேற்கண்ட கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1990–ல் இத்தாலி நாட்டு லூசியா புராட்டோ  மற்றும் கிரேக்க நாட்டு யோயான்னிஸ் பல்லி கார்ஸ் இருவரும் இணைந்து கண் பார்வையை சீராக்கும் லேசிக் அறுவை சிகிச்சை முறையை  உருவாக்கினார்கள்.
பழுதான விழி லென்சை கரைத்து அப்புறப்படுத்த எமைசிபிகேஷன் என்ற முறை  வழக்கத்தில் இருந்தது. லேசர் மூலமும் அதை செய்யலாம்  என்று பாட்ரிகா பாத் எனும் பெண் மருத்துவர் கண்டுபிடித்தார். இதற்கான காப்புரிமையை 1998–ம் ஆண்டு பெற்றார்.
பிறவியிலேயே பார்வை குறைபாடு மற்றும் பார்வை தரும் உறுப்புகளே இல்லாதவர்களுக்கு புதிய செயற்கை கண் பொருத்தும் ஆய்வுகள் தொடர்ந்து  நடைபெற்று கொண்டிருக்கிறது. அது முழுமையடையாத நிலையில், இடைக்கால ஏற்பாடாக பயோநைஸ் கண் பொருத்திடும் பணி நடைபெறுகிறது. இத்தகைய கண்கள் ஆர்கெஸ் 11 என்றழைக்கப்படுகிறது. இவை  2007–ம் ஆண்டில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. இந்த முறையில், மூக்குக்கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் நுண்ணிய கேமிரா உருவத்தையும், அசைவையும் அணிந்திருப்பவரின் மூளைக்கு தெரியப்படுத்தும்.
பார்வை இல்லாதவர்களை படிக்க வைப்பது எப்படி? என்ற கேள்வி வேலண்டின் ஹாய் என்பவரிடம் எழுந்தது. அவர் அதற்காக இத்தாலியில் பள்ளி ஒன்றைத் தொடங்கி மரப் பலகை மூலம் தடவிப்பார்த்து கற்கும் கல்வி முறையை பயிற்றுவித்தார். 1809– ம் ஆண்டு பிறந்து, பத்து வயதில் கண்பார்வையை இழந்த சிறுவன் லூயி பிரெய்லி அந்த    பள்ளியில் படித்தார். பின்பு அவரே பதினைந்தாவது வயதில் பிரெய்லி  எழுத்து முறையை உருவாக்கினார். இவர், பார்வையற்றவர்கள் படிக்கவும், எழுதவும், கற்கவும் அரிய நூல்  ஒன்றை எழுதி 1829–ல் வெளியிட்டு, விழி இழந்தவர்களுக்கு கல்வி வழிகாட்டினார்.
கண்புரையால் பார்வை பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். அறுவை சிகிச்சை இன்றி சொட்டு மருந்தினால் கண்புரையை கரைக்கும் ஆராய்ச்சி  சீனாவின் குவான்சு மாகாணத்தில் உள்ள சன்யட்செட் பல்கலைக் கழகத்தில் நடந்தது. கண்புரை ஆராய்ச்சியாளர் காங்ஜாங், கண்புரை வருவதற்கு ஒருவகை  மரபணுதான் காரணம் எனவும், அந்த மரபணு ஒரு வகை புரோட்டின்களை உருவாக்கி அதனால் கண்புரையை தோற்றுவிக்கிறது என்றும் கண்டறிந்தார்.  இந்த கண்புரை உருவாக்கத்தை தடுக்க லானோஸ் டெரோல் என்ற சுரப்பியால் முடியும் என்றும் கண்டறிந்துள்ளார். அதை அடிப்படையாக வைத்து சொட்டு மருந்தை உருவாக்கி அதை நாய்களுக்கு செலுத்தி கண்புரை மறைவதை உறுதி  செய்தார். மனிதர்களுக்கும்  இந்த சொட்டு மருந்தை செலுத்தி கண்புரை நோய் குறைவதை உறுதி செய்துள்ளார். இந்த சொட்டு மருந்து  இரண்டு ஆண்டு களுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கண் புரையால் ஏற்படும் பார்வை இழப்பை முற்றிலும்  தடுக்கமுடியும்.

No comments:

Powered by Blogger.