Breaking

மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க. அரசுப்பள்ளி ஆசிரியரின் வித்தியாசமான முயற்சி .



அரசுப்பள்ளி ஆசிரியரின் வித்தியாசமான முயற்சி... மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க..

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் தினமும் வேனில் வீடுகளுக்கே சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறார். அவரது இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வெ. குட்டப்பாளையம் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 15 ஆண்டுகளுக்கு முன் சராசரியாக ஆண்டுக்கு 100 குழந்தைகள் 1 முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயின்று வந்த நிலையில், படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

போதிய பேருந்து வசதி இல்லாத இந்த பகுதியில், தனியார் பள்ளி வாகனங்கள் வீடுகளுக்கே சென்று மாணவர்களை அழைத்து சென்றதால், அரசு பள்ளி மீது பெற்றோர் நாட்டம் குறைந்தது.

நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்தும் ஆசிரியர்கள் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
அப்போது தான் தனியார் பள்ளிகளை போல வீடுகளுக்கே சென்று மாணவர்களை அழைத்து வரும் திட்டம் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மனதில் உதித்தது. தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியரும் இணைந்து இதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
இதனால் கடந்த ஆண்டு 13 பேராக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 25 ஆக உயர்ந்துள்ளது. தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் 6 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கிராமங்களுக்கு சென்று மாணவர்களை கட்டணமின்றி இலவசமாக அழைத்து வருவதும், அவர்களை கொண்டு சேர்ப்பதும் உதவி ஆசிரியர் ராமசாமியின் பணி. இதற்கான செலவை மாதந்தோறும் இரண்டு ஆசிரியர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். இது பெற்றோர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளியை மாற்றும் ஆசிரியர்களின் முயற்சியை பெற்றோர்கள் பாராட்டுகின்றனர். வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களின் முயற்சியால், வரும் கல்வி ஆண்டில் இன்னும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க இப்போதே பல பெற்றோர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அரசுப் பணியை சேவையாகவும் கருதும் இத்தகைய ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்களே.

No comments:

Powered by Blogger.