கணித அறிவியல் அறிஞர் முனைவர், ஆர் . ராமானுஜம் அவர்களுக்கு பொதுமக்களிடையே அறிவியல் பரப்பியமைக்கான தேசிய விருது-
கணித அறிவியல் அறிஞர் முனைவர், ஆர் . ராமானுஜம் அவர்களுக்கு பொதுமக்களிடையே அறிவியல் பரப்பியமைக்கான தேசிய விருது..
தமிழில் வெளிவரும் ‘ துளிர் ‘ அறிவியல் மாத இதழோடு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிற அறிவியலாளர் முனைவர் ஆர் . ராமானுஜம் , பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆற்றி வரும் பரப்புரைப் பணிகளுக்காக இந்திராகாந்தி அறிவியல் பரப்புரைப் பணி விருதை 2020 - ஆண்டில் பெற்றிருக்கிறார் . இந்த விருது, 1986 –ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தால் நிறுவப்பட்டது. ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழிகளிலோ அறிவியலைப் பரப்புவதில் ஆகச்சிறப்பாகப் பணியாற்றி வரும் ஓர் அறிவியல் நிபுணருக்கோ அல்லது தொழில்முறை ஊடகப் பணியாளருக்கோ மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படுகிறது முந்தைய ஆண்டுகளில் இந்த விருதினை வென்றவர்களுள், புகழ் பெற்ற மூத்த இயற்பியல் அறிஞரான ஜெயந்த் வி . நார்லிகர், அறிவியலாளரும் எழுத்தாளருமான ஜி. வெங்கடராமன், அறிவியலாளரும், தி இந்து ஆங்கில நாளிதழில் பத்தி எழுத்தாளருமான டி . பால சுப்பிரமணியன் – ஆகியோரும் அடங்குவர் .
சென்னை , தரமணியில் அமைந்துள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் கணினி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் முனைவர் . ஆர் . ராமானுஜம், தமிழ் அறிவியல் மாதப் பத்திரிகையான ‘ துளிர் ‘ இதழுடன் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார் . தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டு வரும் மாத இதழ் இது . தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதைப் பற்றி ராமானுஜம் பின்வருமாறு கூறுகிறார் : “தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்து வந்திருக்கும் பணிகளுக்குக் கிடைத்த ஓர் அங்கீகார மாகவே இதை நான் பார்க்கிறேன். காரணம், விருது அளிக்கப்படப் போவதாகத் தகவல் தெரிவித்து வந்திருக்கும் கடிதம், ‘ ஆங்கிலமல்லாத ஒரு மொழியில் அறிவியல் பிரச்சாரம் மேற்கொண்டு அறிவியலைப் பரப்புவதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக’ க் கூறியிருக் கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், துளிர் இதழ் –ஆகியோருடன் நான் இணைந்து செய்த பணிகள் இதில் மிகப்பெரும்பங்கு வகிக்கின்றன...”
பள்ளி மாணவர்களுக்கு ‘ துளிர் ‘ மூலமாக அறிவியலைக் கொண்டு சேர்த்தது ராமானுஜம் ஆற்றிய பணிகளுள் பிரதான பங்கு வகிக்கிறது . துளிர் ஓர் அறிவியல் மாத இதழ் . புதிய கற்போருக்கான அறிவியல் கலைத்திட்டத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் இவர் “சர்வதேச வானியல் ஆண்டின்போது , சுய உதவிக்குழுக்களுக்காக ஓர் ஆண்டு முழுவதும் நீடித்த பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டோம் “ என இவர் நினைவு கூர்கிறார் .
1990-களில், தமிழ்நாட்டின் தெருக்கள் தோறும் நேரடியாகப் போய் மூலை முடுக் கெல்லாம் மக்களிடையே நழுவுபடக் காட்சிகளை நடத்தியிருக்கிறார் இவர் . வேட்டிகளையே வெள்ளித்திரையாகப் பயன்படுத்தி சிலைடுகளின் மூலம் அறிவியல் விளக்கங்களை உரைக ளாக நிகழ்த்துவதில் ஈடுபட்டிருந்தார . “கார்ல் சாகன் என்ற அறிவியல் அறிஞரின் தாக்கத்தால் உருவான ‘ காஸ்மாஸ் ‘ என அழைக்கப்பட்ட ஒரு தொகுப்பு , ‘ உனது முகவரி ‘ என்ற இன்னொரு நழுவுபடக் காட்சி – இவை இரண்டும் மக்களிடையே மிகவும் பிரபலமானவை “ என்கிறார் ராமானுஜம் . இக்காட்சிகளுக்கான தலைப்புகள் , நல வாழ்வு , சமாதானம் , அணு ஆயுதங்களால் நேரக்கூடிய அழிவு – போன்று பல்வேறு அம்சங்கள் பற்றிய , பரந்து விரிந்த வீச்செல்லையைக் கொண்டிருந்தவை . சுற்றுச்சூழல் , நலவாழ்வுப் பிரச்சினைகள் தொடர்பான வீதி நாடகங்களும் அப்போது நடத்தப்பட்டு வந்திருந்தன . அவை மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தையும் , அறிவியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய நாடகங்கள் . குறிப்பாக , வயிற்றுப் போக்கு நோய்ப்பரவல் பற்றிய ‘ காலரா ‘ ; இரத்த தானம் பற்றிய ‘ ரத்தம் ‘ ; காற்று – தண்ணீர் மாசடைதல் பற்றிய ‘விஷம்‘ –போன்ற நாடகங்கள் மிக முக்கியமானவை . “மாசுபடுதல் பற்றிய ஒரு பறவைப் பார்வையாக , இரண்டு காக்கைகள் தமக்குள் ஒன்றோடொன்று உரையாடிக் கொள்வதுதான் ‘ விஷம் ‘ நாடகம் “ – என ராமானுஜம் விளக்குகிறார் . புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி மக்களுக்கு விளக்குபவையாக இந்த நாடகங்கள் அமைந்திருக்கவில்லை ; மாறாக , மக்களுடைய அன்றாட வாழ்க்கைகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றியவை இவை . இந்த முக்கியமான தீவிரப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிற நாடகங்கள் இவை . தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலிமையே இந்த அம்சம்தான் “ என்கிறார் அவர் .
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பிரதானமான சாதனைகளுள் ஒன்று , தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகளை ஆண்டுதோறும் நடத்தி வருவது. இப்போது அது நாடு தழுவிய மாபெரும் நிகழ்வாகி விட்டது . “ 1992 -93-களில் இதை நாங்கள் நடத்தத் தொடங்கினோம். இதற்கு ஒரு காரணம், இந்திய அறிவியல் மாநாட்டு நிகழ்ச்சிகள் மிகவும் அதிருப்தி அளிப்பவையாக இருக்கின்றன . மற்றொரு காரணம் , குழந்தைகள் (தமது வகுப்பறைப் பயிற்சிகளைத் தாண்டி) பரந்து விரிந்த ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளச் செய்யவேண்டுமென விரும்பினோம் . அறிவியல் என்பது நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றைக் கூர்ந்து நோக்குதல் , கால அளவின் நிர்ணயம் –ஆகியவற்றைப் பற்றியதுதான் என்று அவர்களுக்கு அவை கற்றுத்தரும் . குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் பகுதியாக உயிர்சிதைவடைதல் பிரச்சினை , மூல வளங்களின் வரைபடம் தயாரித்தல் – போன்ற ஆய்வுகள் ஆகியுள்ளன . “
ஒவ்வொரு மாதமும் துளிர் இதழை வெளிக் கொணர்வது ஒரு பெரும் சவாலாக இருக்கிறது . ‘பலபெயர்களில் நாங்களே கட்டுரைகள் எழுதுமாறு நேர்ந்து விடுகிறது ‘ என ராமானுஜம் ஒரு புன்னகையுடன் சொல்கிறார் . தற்பொழுது ‘ விக்யான் பிரச்சார் ‘ நிறுவனத்தில் பணியாற்றி வரும் த . வி . வெங்கடேஸ்வரன் , கேரள சாஸ்த்ரீய சாகித்ய பரிஷத் அமைப்பின் கே.ஷாஜி, சென்னை கணிதவியல் நிறுவனத்தில் பணியாற்றிய டி . ஆர் . கோவிந்தராஜன் –ஆகியோரின் பங்களிப்புகளையும் ராமானுஜம் நினைவு கூர்ந்தார்.
தமிழாக்கம்
முனைவர் சேதுராமன்..


No comments: