அலெக்சாண்டர் கிரகாம் பெல் இறந்தாலும் இவரின் கண்டுபிடிப்புகளுக்கு என்றுமே இழப்பு இல்லை..
அலெக்சாண்டர் கிரகாம் பெல் இறந்தாலும் இவரின் கண்டுபிடிப்புகளுக்கு என்றுமே இழப்பு இல்லை..
கிரகாம் பெல் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.
இவர் கண்டுபிடித்தவைகளில் 18 வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமையை பெற்றார். இதர 12 வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
இவர் 1882ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். தொலைபேசியைக் கண்டுபிடித்த பிறகு கிரகாம் பெல் ஏறக்குறைய 45 ஆண்டுகள் தனது அறிவியல் வாழ்க்கையை ஓய்வின்றி மேற்கொண்டார். அவரது அறிவு பசியும், புதுமை காணும் வேட்கையும் சிறிதும் குறையவில்லை.
காற்றிலுள்ள நீரின் ஆவியைக் கொண்டு தூய நீரைப் பெறும் வழியைக் கண்டுபிடித்தார்.
இது படகில் பயணம் செய்யும் கடல் பயணிகளின் நீர் வேட்கையைத் தணிக்க உதவியது.
கிரகாம் பெல் அவர்களுக்கு விமானம் ஓட்டுவதிலும் ஆர்வமுண்டு. காற்றாடியைப் பயன்படுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டு, மனிதனை உயரே தூக்கக்கூடிய எந்திரத்தை வடிவமைத்தார்.
அலெக்சாண்டர் கிரகாம் பெல் சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல. மிகச் சிறந்த நிர்வாகியும் ஆவார். 1907ல் வான் பயண ஆய்வுக்கழகம் ஒன்றை நிறுவத் துணை நின்றார்.
அறிவியல் என்ற பெயரில் ஓர் இதழ் உருவாவதற்கு கிரகாம் பெல்லின் முயற்சி மிகப் பெரிதாகும். அமெரிக்காவில், தேசியப் புவியியல் நிறுவனம் என்னும் அமைப்பைத் தோற்றுவிக்கத் துணை புரிந்தார்.
''குறைகளை நீக்கி முழுமையடையலாம். ஆனால் முழுமையில் குறை என்பதே கிடையாது" - இதுவே கிரகாம் பெல் அவர்களின் குறிக்கோள். அளவற்ற புகழும், செல்வமும் இளமையிலேயே அடைந்தபோதும் மனிதத் தன்மையிலிருந்து அவர் விலகியதே இல்லை.
கிரகாம் பெல்லின் மறைவு :
1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் கிரகாம் பெல்லை கௌரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் தேதி தனது 75வது வயதில் கிரகாம் பெல் கனடாவில் காலமானார்.
கிரகாம் பெல் முழு நிம்மதியுடனும், மனநிறைவுடனும் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.


No comments: