Breaking

ஏப்ரல்-01. இரத்த ஓட்டம் (De Motu Cordis)பற்றி கண்டுபிடித்த ஆங்கிலேய மருத்துவ ஆராய்ச்சியாளர்- வில்லியம் ஹார்வி (William Harvey)பிறந்த தினம்.






இன்று பிறந்த நாள்:- ஏப்ரல்-01.

இரத்த ஓட்டம் 
(De Motu Cordis)பற்றி கண்டுபிடித்த ஆங்கிலேய மருத்துவ ஆராய்ச்சியாளர்-
வில்லியம் ஹார்வி
(William Harvey)பிறந்த தினம். 

#பிறப்பு:-

ஏப்ரல்-01,1578 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள 
போல்க்ஸ்டோன் ஊரில் பிறந்தார்.
இவரது தந்தையார் தாமஸ் ஹார்வி ஆவார். சிறுவயதில் தமது சகோதர, சகோதரிகளுடன் விளையாடும் போது சில நேரங்களில் உடலில் காயம் ஏற்படும், காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வழியும். ஏன் இரத்தம் வழிகிறது என்றும், இரத்தம் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்றும்  சிந்திப்பார். தமது ஆரம்பக் கல்வியை காண்டர்பரி நகரில் கிங்ஸ் பள்ளியில் (King’s school) பயின்று முடித்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில், 
1593 ஆம் ஆண்டு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு,1597 ஆம் ஆண்டு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். 
பிறகு, 1602 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, இங்கிலாந்துக்குத் திரும்பினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மற்றொரு மருத்துவப் பட்டமும் பெற்றார்.

#பணிகள்:-

பாதுவா பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராக பணிபுரிந்தார். நாளடைவில் முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.

#கண்டுபிடிப்புகள்:-

1607  ஆம் ஆண்டு, இலண்டனில் உள்ள ராயல் மருத்துவர் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவர் தொழிலைச் செய்துகொண்டே குருதி ஓட்டம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 
பாம்பு, நாய், பன்றி முதலிய விலங்குகளை அறுத்து அவற்றின் இரத்த ஓட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்தார்.  மேலும், மனித உடலில் இரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது என்பதை, இறந்த மனித உடல்களை அறுத்து ஆய்வு செய்தார். 

1616 இல் தான் ஆராய்ச்சி செய்து வந்த குருதி ஓட்டம் பற்றியும் இதயம் தமனிகள் சிரைகள் முதலியவற்றின் செயல்பாடுகள் குறித்து 
விளக்கமாகவும், விரிவாகவும் மருத்துவ மாணவர்களிடமும் கூறியுள்ளார்.
இதயம் என்பது ஒரு இரப்பரை போன்று சுருங்கி விரியும் தன்மை கொண்டது என்றார். இது பம்பு போல வேலை செய்கிறது.
இதயம் நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது.  இதயம் சுருங்கி விரிவதால் இதயத்திலிருந்து இரத்தம் உடலெங்கும் ஓடுகிறது.  இதயத்திலிருந்து தமனி என்ற குழாய் இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிறது.  சிரை என்ற இரத்தக் குழாய்கள் உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வருகின்றன.  இதயத்தின் நான்கு அறைகள் இவ்வேலையைச் செய்கின்றன. 


குருதிக் குழல்களில் உள்ள குருதி பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வால்வுகள் உதவுகின்றன. 
உடலின் இரத்த ஓட்டம் இதயத்தில் தொடங்கி இதயத்திலேயே முடிகிறது என்பதை ஹார்வி தமது ஆராய்ச்சி மூலம் நிரூபித்தார்.
இதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரண்டு அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்படுவதையும், நிமிடத்திற்கு எழுபத்திரண்டு முறை துடிப்பதையும் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு காலன் ரத்தம் அதன் வழியாக செல்கிறது என்று கண்டுபிடித்து கூறினார்.
பல நாடுகளில் உள்ள பூச்சிகள், விலங்குகள், பறவைகள் மற்றும் செடிகள், மரங்கள், மலர்கள், காய்கள், கனிகள் முதலியவற்றை ஆர்வமுடன் கூர்ந்து பார்த்து ஆய்வுகள் செய்தார்.

#நூல்கள்:-

இரத்த ஓட்டம் பற்றி விலங்குகளின் இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் பற்றிய உடற்கூற்று ஆய்வு (An Anatomical Treatise on the movement of the Heart and Blood in Animals) என்னும் ஆய்வு நூலை 1628 ஆம் ஆண்டு லத்தீன் மொழியில் எழுதி வெளியிட்டார். 
1651 ஆம் ஆண்டில் விலங்குகளின் தலைமுறைகள் என்னும் தலைப்பில் மற்றொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் இக்கால 'கரு' ஆராய்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது. 

#மறைவு:-

இதய மருத்துவ மேதையான இவர்,
ஜூன்-03, 1657 ஆம் ஆண்டு, தனது 79 வது வயதில்
ரேகாம்ப்டன், இலண்டன், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

#சிறப்புகள்:-

வில்லியம் ஹார்வியின் பெயரால் ஆண்டுதோறும்  அரசு மருத்தவக் கழகத்தில் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இவரின் மருத்துவ சேவையைப் பாராட்டும் வகையில் சோவியத் யூனியன் 1957-ஆம் ஆண்டு அவரது நினைவாக தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

No comments:

Powered by Blogger.