Breaking

மார்ச்-20. உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD).






இன்று:- மார்ச்-20.

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD).

ஆண்டுதோறும் மார்ச்- 20, இன்று உலகெங்கும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

சிட்டுக்குருவிகளின் 
எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூருவதன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான 
உயிரிய பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.

2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" (We will save our House Sparrows) என்பதாகும்.

வாழ்க்கை முறை:-

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும்.
சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.

 இந்தியாவில் இவை வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. 

காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியவையாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். இவை 8 முதல் 24 செ.மீ. நீளமுள்ளவை. பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். கூம்பு வடிவ அலகுகளைப் பெற்ற இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. 

ஆண் பறவையில் இருந்து பெண் பறவை வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை.

சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். இவை குளிர் காலத்தில் கூட்டமாக ஒரு புதரில் ஒன்று சேர்ந்து இரவைக் கழிக்கின்றன.



சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். 

சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும். சிட்டுக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. 
மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே முட்டைகளையும், இளம் உயிரிகளையும் பாதுகாத்து வளர்க்கின்றன.

குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச் சூழல் மாற்றங்கள்,  மரங்கள்   அழித்தல்,   இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணத்தால் இவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு,
தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. மேலும் கிராமப்புறங்களில் இதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து, அழிந்து வரக்கூடிய பறவை இனமாக கருதப்படுகிறது.

மேலும், சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது. 

இதனால் மக்களிடையே, இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ளன.
இந்தியாவில்  டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளது.

சிட்டுக்குருவியை பாதுகாக்க மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமையாகும்.


No comments:

Powered by Blogger.