Breaking

வைரஸ்-நஞ்சு, நுண்ணிய உருவம் கொண்ட உயிரினங்களை நுண்ணுயிரிகள் என்போம் அவற்றை பற்றிய தொகுப்பு..

                                     


வைரஸ் என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. அதற்கு 'நஞ்சு' என்று பெயர். நுண்ணிய உருவம் கொண்ட உயிரினங்களை நுண்ணுயிரிகள் என்போம். வைரஸ்கள் தான் உலகில் மிக மிக நுண்ணிய உடலமைப்பைக் கொண்டவை. அதாவது 20 நானோமீட்டர் முதல் 400 நானோமீட்டர்  வரை. ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒரு பில்லியனில் ஒன்று. ஒரு பில்லியன் என்பது  நூறு கோடி. 

வைரஸ் 1892 ம் ஆண்டு ரஷ்ய அறிவியலாளர் திமித்ரி ஐவனோஸ்கியால் கண்டறியப்பட்டது.

வைரஸ் உயிருள்ளவையா, உயிரற்றவையா என்றும் ஒரு குழப்பம் உண்டு. ஏனெனில் அது உயிருள்ள உடல் செல் ஒன்றில் நுழைந்தால் தான் எண்ணிக்கையில் பெருகும். வெளியே இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு துகள் போலாகிவிடும்.

தும்மல்  இருமல் சிந்துதல் போன்ற செயல் மூலம் காற்றில் பரவுதல், தொடுதல், உணவு மற்றும் நீர், உடல் உறவு, பூச்சிகள் விலங்குகள் ஆகியவற்றால் வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொரு நபருக்கு கடத்தப் படுகிறது. உதாரணமாக நாம் தும்மும் போது 20000 நீர்த் துளிகள் காற்றில் பரவுகின்றன. வைரஸ் இருக்கும் அத் துளிகள் அருகில் இருப்பவர்கள் மீதும், பொருட்களின் மீதும் விழுந்து வைரஸை பரப்பும். 

வைரஸ் ஆர்.என்.ஏ, டி.என்,ஏ என்ற இரண்டு வகையான உயிர்ச்சுருள்களில் ஏதேனும் ஒரு சுருளை தன்னுள்ளே கொண்ட மிக எளிய செல் போன்ற வடிவம் கொண்டவை. இந்த உயிர் சுருளைச் சுற்றி புரதம் மற்றும் கொழுப்பு உறையைக் கொண்டவை.(சோப்பினால் கைகழுவும்போது வைரஸ் உடல் சிதைந்து அழிவது இந்த கொழுப்பு வெளி உறையால் தான். அசைவம் சாப்பிட்ட பிறகு சோப்பால் கைக்கழுவும்போது கை கொழுப்பு இல்லாமல் சுத்தமாவதைப் போல) இந்த  உயிர் சுருள்களின் தன்மையை வைத்தே அவற்றை ஏழு குழுக்களாக வகைபடுத்துகின்றனர். 

அம்மை,தட்டம்மை,பொன்னுக்கு வீங்கி,இன்புளுயென்சா, சாதாரண சளி மற்றும் காய்ச்சல், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, சிலவகை மூளைக்காய்ச்சல், சிலவகை நிமோனியா காய்ச்சல், சிலவகை புற்றுநோய்,  ரேபிஸ்,போலியோ, சார்ஸ், எபோலா, கொரோனா போன்ற கொடிய நோய்கள் எல்லாம் வைரஸால் வருபவையே.



வைரஸ் சிறு துகள் என்றாலும் மிக மிக பலம் வாய்ந்தது. அது ஒரு உயிருள்ள செல்லில் நுழைந்ததும் அச்செல்லை பணியவைத்து தன்னுடைய RNA/ DNA உயிர் சுருள்களைப் போலவே ஆயிரக்கணக்கான உயிர் சுருள்களை நகலெடுக்கச்செய்திடும்.(Transcription and Translation of virus RNA/DNA)

வைரஸை அழிக்க மருந்து என்று இல்லை. வைரஸ் உருவாக்கும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கவே மருந்து உண்டு. உடலில் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலால் வைரஸின் செயல்பாட்டை அடக்கலாம். அல்லது நோயெதிர்ப்பை உருவாக்கும் தடுப்பூசியைப் போடலாம். 

தொற்று நோய்கள் நோய்ச்சங்கிலி முறையில் தான் பரவுகின்றன. 

 நோய்க்கிருமி-கடத்தி அல்லது பரவும் வழிகள் ஆரோக்கியமான மனித உடல் நோய்க்கிருமி

இந்தச் சங்கிலியை நாம் உடைக்கும் போது தொற்று நோய் பரவாமல் தடுக்கப் படும். இதற்கு ஒரே வழி நோய் வந்தவர் தன்னை தனிமைப் படுத்தி மற்றவருக்கு பரவிவிடாமல் உதவி செய்தல். 

ஆரோக்கியமானவர் விழிப்புடன் இருந்து நோய்க்கிருமியை தன் உடலில் ஏற்றிக்கொள்ளாமல் தடுத்துகொள்ளுதல்.

No comments:

Powered by Blogger.