Breaking

ஏப்ரல்-19சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) அவர்களைப் பற்றிய சிறப்புக் கட்டுரை...







சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) 
அவர்களைப் பற்றிய சிறப்புக் கட்டுரை...

(பிப்ரவரி 12, 1809 – ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை.

உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை , “இது தவறு !” என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது. சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்ற போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்து கொண்டிருந்தார்.

side_illus-leftதட்டான்பூச்சி, மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என்று இவற்றை சேகரித்து ஆய்வு செய்கிற ஆர்வம் சிறுவனாகவே அவரிடம் இருந்தது. அப்பா நொந்தே போனார் “உனக்கு படிக்கவே வரலை ; நாய் பின்னாடி ஓடுறது . எலி பிடிக்கிறது இதுதானா உனக்கு தெரிஞ்சது .குடும்ப மானமே உன்னால போகுது !”எனத்தன் மகனைப்பார்த்து சொன்னார் அந்த அப்பா .



அடிப்படையில் மருத்துவம் படிக்கப்போன டார்வின் அங்கே சிறுவன் ஒருவன் கதற கதற அறுவை சிகிச்சை செய்யப்படுவதை பார்த்து வெறுத்துப்போனார். (அன்றைய காலத்தில் மயக்க மருந்து பயன்படுத்தப்படுகிற பழக்கமில்லை).  கூடவே அங்கேயும் போய் எலிக்கு நான்கு மீசை இருக்கிறது, தவளைக்கு கால்கள் சவ்வு போல உள்ளன என்றெல்லாம் குறிப்புகள் எடுத்தார். அப்பாவின் ஆலோசனைப்படி இயற்கையியல் வல்லுநர் ஆனார்.

தென் அமெரிக்காவின் கனிம வளங்களை காணச்சென்ற HMS பீகிள் எனும் கப்பலில் ஐந்தாண்டுகள் உலகை சுற்றி வந்த பொழுது பல்வேறு அற்புதங்களை கண்டார்; பல விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார். அவை குறிப்பிட்ட வேறு சில உயிரினங்களின் எலும்புகளோடு ஒத்துப்போவதை பார்த்தார் .சில அழிந்திருந்தன; அவையே, மாற்றம் அடைந்து தற்போதுள்ள நிலைக்கு வந்திருக்கும் என உணர்ந்தார். என்றாலும் இவற்றை இணைத்து அவரால் உடனே பார்க்க முடியவில்லை.

அப்பொழுது ஒரு பறவையின் மூக்கு அவருக்கு அறிவின் சாளரங்களை திறந்து விட்டது. காலபாக்கஸ் தீவுகளில் பின்ச் பறவைகளை கண்டார். ஒரு தீவில் கடலையை கொத்த பட்டையான மூக்கோடும், எலியை தின்ன கூர்மையான மூக்கு கொண்ட பின்ச் பறவைகள் இன்னொரு தீவிலும், புழுவை வளைந்து நெளிந்து சாப்பிட வளைந்த மூக்கைக்கொண்ட பின்ச் பறவைகள் இன்னொரு தீவிலும் இருப்பதை கண்டார். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என்று சொன்னார்.



பதினேழாயிரம் விலங்கு, பறவை, படிமங்கள், பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளோடு மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதில் தொடங்கி எண்ணற்ற முடிவுகளை அவர் பெற்றிருந்தாலும் வாயைத்திறக்கவே இல்ல டார்வின். பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார். எக்கச்சக்க எதிர்ப்புகள் வரும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. வாலஸ் என்கிற அறிஞரும் இதே போல இயற்கைத்தேர்வை பற்றி எழுதியிருந்தார். அவரின் தாள்கள் தொலைந்து போயிருந்தன. இருந்தாலும் டார்வின் அவர் பெயரையும் இணைத்தே வெளியிட்டார். மனிதனை கடவுள் படைத்தார் என்பதில் இருந்து மாறுபட்டு மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்கிற பரிணாமக்கொள்கை அதில் தான் இருந்தது.

அவர் கண்டுணர்ந்த உண்மைகளின் அடிப்படையில் டார்வின்மூன்று முக்கிய
கூறுகளை அவர் விளக்கினார்

1. மாறுபாடு (உயிரினங்கள் இடையே நிலவுவது )

2. மரபு வழி (உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி )

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலின் மாறுதலுக்கு ஏற்ப இனப்பெருக்க மாற்றங்கள் மற்றும் உடலமைப்பில்,பல்வேறு குணங்களில் உண்டாகும் மாறுபாடுகள் )

இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் இயல்பினைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை ‘நவீன டார்வினியம்’ என்கிறார்கள். உயிர் வாழ்தலுக்கான போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து, இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது இன்றைய நவீன டார்வினியமாகும்.

பரிணாம கொள்கையை கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர்; இவரை குரங்கு என சித்தரித்தார்கள் பல மதவாதிகள் ; பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளை பேய் தினம் என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.

மதத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சொன்ன அவர், கடவுளை பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை. அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். “உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்”என சொன்னவர் டார்வின்.



அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார் ‘நீ என்னைக் கவனித்துக் கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய் வாய்ப்பட்டுக்கிடக்கத் தயார்’ என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. ஒன்றரை நூற்றாண்டு கழித்து அவரின் கோட்பாட்டை சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது.

தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங் களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு உருவானது அதன் காரணமாக 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம்  (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற உலகை புரட்டி போட்ட நூல். அதேபோல் “மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர்வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும் .

மொத்தம் பதினெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த புதிய சிந்தனை இவரால் பிறந்தது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

உலகின் பல்வேறு அறிவியல் அமைப்புகள் இவருக்குப் பரிசுகள், பட்டங்கள், விருதுகளை வழங்கின. உயிரினங்கள் தொடர்பாக அதுவரை நிலவிய சிந்தனைகளைப் புதிய கோணத்தில் மாற்றியமைத்த சார்லஸ் டார்வின் 1882ல் தனது 73-ஆம் வயதில் காலமானார்.



No comments:

Powered by Blogger.