Breaking

ஏப்ரல் 26.. கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.






ஏப்ரல் 26..
கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும், சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ம் தேதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) 2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2001ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 26ம் தேதி இத்தினத்தின் நிகழ்வுகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தன்று கருத்தரங்குகள், கூட்டங்கள், விசேட நிகழ்ச்சித் திட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் எனும்போது மனிதனின் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தை வழங்கி அக்கண்டுபிடிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கத்தை வழங்கும் அதேநேரத்தில் கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளும் இத்தினத்தன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.


அதேபோல கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விசேடமாக இத்தினத்தன்று மின்விளக்கைக் கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன், கணனி மென்பொருளைக் கண்டுபிடித்த புலோரியென் மியுலர் மற்றும் பிரச்சினைகளுக்குரிய விடயங்களை நீதிமன்றத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஹியுலெடி சுப்பர்மேன் ஜெரிமி பிரிப்ஸ் ஆகியோர் இத்தினத்தன்று விசேடமாக நினைவுகூரப்படுவர். ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் ஒவ்வொரு கருப்பொருட்களின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

அறிவுசார் சொத்துரிமையை பதிவு செய்தவர்கள் தங்கள் அனுமதியில்லாமல் குறிப்பிட்ட காலத்துக்கு பிறரை அந்தப் படைப்பை உபயோகிக்கவோ, பதிப்பிக்கவோ, உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விற்கவோ தடுக்க முடியும். இந்த ஏகபோக உரிமை, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த அறிவுசார் சொத்துரிமை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் பிரிட்டிஷார் வகுத்த சட்டம் மாற்றப்பட்டு, நமக்குச் சாதகமான சட்டம் இயற்றப்பட்டது. உதாரணமாக, 2005 வரை மருந்துகளுக்கு பேடன்ட் அளிக்கப்படவில்லை. அதனால் மருந்துகளின் விலைகள் குறைவாக இருந்தது. அதேநேரம், உலக நாடுகள் பெரும்பாலும் புதிய முயற்சிகள் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்து, மதிப்பளித்து உரிமைகள் அளிப்பதின் மூலமே வளர்ந்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் அதற்கு நல்ல உதாரணம். 1980கள் வரை எந்த அறிவுசார் சொத்துரிமை சட்டமும் இல்லாத கம்யூனிச நாடான சீனாதான், இன்று உலகிலேயே அதிக பேடன்ட் அளிக்கிறது. 



அறிவுசார் சொத்துரிமையை Necessary evil எனப் பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உரிமைகள் மூலம் படைப்பாளிகளும் யாரும் காப்பியடித்து விடுவார்கள் என்கிற பயமுமின்றி, புதிய புதிய படைப்புகளை உலகுக்குக் கொண்டு வரலாம். தனி மனிதர்கள், நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த உரிமைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு பிள்ளைகளும் ஏதோ ஒரு விசேட திறமை உடைய வர்களாகவே இருக்கிறார்கள். விளையாட்டு, கலை, கலாசாரம் போன்ற பல துறைகளில் விசேட திறமைப் பெற்றவர்கள். அவர்களுடைய திறமைகளை சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுடைய பாதையில் செல்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்தினால் தலை சிறந்த மனிதர்களாக, எதிர்கால தலைவர்களாக ஆக்க முடியும். திறமையான சாதனையாளர்களை வெளி உலகிற்கு கொண்டுவருவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Powered by Blogger.