"திரையல்" என்பது என்ன?
"திரையல்" என்பது என்ன?
தமிழ் மக்கள் வாழ்வில் #வெற்றிலைக்குச் சிறப்பான இடமுண்டு.
பூக்கள், வாழைப் பழம், தேங்காய், சந்தனம், கரும்பு, தென்னங்கீற்று, தென்னம்பாளை, இளநீர்க்குலை, மஞ்சள் போன்றவை எவ்வாறு நன்மங்கலப் பொருட்களாகப் பார்க்கப்படுகின்றனவோ அவ்வாறே வெற்றிலையும் மதிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஐரோப்பிவிலிருந்து வருவதற்குக் கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் முதன்முறையாக வந்திறங்கியதும், கடற்கரையில் கண்ட காட்சிகளைத் தம் பயணக் குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார். இம்மண்ணில் வாழும் மக்கள் எந்நேரமும் ஒரு பச்சை இலையை வாயிலிட்டு மென்றபடியே இருப்பதாக எழுதியிருக்கிறார். வாஸ்கோடகாமா கூறிய அந்தப் பச்சை இலை வெற்றிலைதான். வெற்றிலை போடும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டே வழக்கத்தில் இருந்திருக்கிறது.
#வெற்றிலை என்பது #கொடியிலை ஆகும். வெற்றிலைக் கொடியானது நல்ல நீர்வளமுள்ள நிலத்தில் நான்காண்டுகள் வரைக்கும் வளர்ந்து பயன் தரும். அந்தக் கொடியில் பூவோ காயோ பழமோ… எதுவுமே வளராது. வெறும் இலைகளாகவே இருக்கும். வேறெதற்கும் இடம் தராத 'வெற்று இலைகளால் நிறைந்த கொடி' என்பதால் அதற்கு வெற்றிலைக் கொடி என்ற பெயர் வந்தது. அதன் இலையும் வெற்றிலை ஆனது.
வெற்றிலைக்குத் தாம்பூலம், திரையல், அடகு முதலான வேறு பெயர்களும் உள்ளன.
திரையல் என்பது இலையின் மடிந்து சுருளும் தன்மையால் வந்த பெயர். மடிந்து சுருண்டு செல்லும் கடல் அலைகளைத் திரை என்று அழைப்பதும் அவ்வியல்பால்தான். உண்ணத் தகுந்த கீரைகளும் இலைகளும் அடகு எனப்படும். அதனால் வெற்றிலைக்கும் அப்பெயர் வாய்த்தது.
No comments: