Breaking

நவீன வயர்லெஸ் சார்ஜர் பற்றி அறிவோம்..




நவீன வயர்லெஸ் சார்ஜர்
பற்றி அறிவோம்..
www.tamilsciencenews.in

இன்றைய
சொகுசு கார்கள் மற்றும் இதர வாகனங்கள் என அனைத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகிய மூன்று எரிசக்தி பொருட்களில்தான் ஓடுகின்றன. ஆனால், அசுர வேகத்தில் வளரும் மக்கள் தொகையின் காரணமாக பெருகிக்கொண்டிருக்கும் வாகனங்களை இயக்க இவை மூன்று மட்டும் போதாது.
இந்த பிரச்சினையிலிருந்து நம்மை காக்க ஆபத்பாந்தவனாய் வந்து நிற்பது மின்சக்தியில் இயங்கும் அதி நவீன கார்களும், இதர வாகனங்களும்தான். இக்கட்டில் உதவும் மின்சார கார்களிலும் சில பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் `நிசான் லீப்’ எனும் மின்சார காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் அது வெறும் 100 மைல்கள் வரைதான் ஓடும். அதுமட்டுமில்லாமல், இந்த காரை சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் ஆகும்.
இந்த மின்சார காரை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் ஓரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனும்போது சார்ஜ் செய்வது பெரும் சிக்கலாகி விடுகிறது. மின்சார கார்களுக்கு இருக்கும் இந்த நடைமுறை சிக்கலை தீர்க்க ஒரு அட்டகாசமான தொழில்நுட்ப வசதியை கண்டுபிடித்துவிட்டார் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் ஷான்ஹுயி பேன்.

நெடுஞ்சாலையில் ஓடும் கார்களையும், லாரிகளையும் அவை ஓடிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் செய்யும் அதி நவீன வயர்லெஸ் மின்சார சார்ஜரை உருவாக்குவதில் தொடக்கநிலை வெற்றி கண்டிருக்கிறது ஷான்ஹுயி ஆய்வுக்குழு.
நெடுஞ்சாலைகளில் பொருத்தப்படக் கூடிய உலோக காயில்கள் கொண்ட இந்த வயர்லெஸ் சார்ஜரை நெடுஞ்சாலைகளில் பொருத்திவிட்டால், மின்சார சார்ஜிங் பூத்துகளை தேடி நாம் அலைய வேண்டியதில்லை! நெடுஞ்சாலைகளை அடைந்துவிட்டாலே போதும், நம் கார்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதே சார்ஜ் ஆகிவிடும்.
இதில் விசேஷம் என்னவென்றால், இடையில் சார்ஜ் தீர்ந்துபோகும் பிரச்சினையெல்லாம் கிடையாது. வாகனங்களை நாம் தொடர்ந்து ஓட்டிக்கொண்டே இருக்கலாம். நம் பயணம் முடியும்போது, நம் பாட்டரியில் நாம் தொடங்கியபோது இருந்ததைவிட அதிகமான சார்ஜ் இருக்கும்!
இந்த வயர்லெஸ் சார்ஜரில், பல அடிகள் இடைவெளி விட்டு பொருத்தப்படக்கூடிய இரு காப்பர் காயில்கள் உண்டு. இந்த காயில்களில் ஒன்று நெடுஞ்சாலையிலும், மற்றொன்று ஓடும் காரின் அடியிலும் பொருத்தப்பட்டிருக்கும். நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் காயிலுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படும்.
இந்த மின்சார காயிலை, நெடுஞ்சாலை கார்கள் அதிவேகத்தில் கடந்து செல்லும்போது, இரு காயில்களும் ஒரே அலைவரிசையில் அதிரும் வண்ணம் முதலில் தூண்டிவிடப்படும். பின்னர், நெடுஞ்சாலை காயிலின் மின்சாரத்தால் உருவாகும் காந்த அலைகள் காரில் உள்ள மற்றொரு காயிலை அதிரச் செய்யும்.
இந்த அதிர்வுக்கு `மேக்னடிக் ரெசொனன்ஸ்’ என்று பெயர். இந்த அதிர்வினால், நெடுஞ்சாலை காயிலிலிருந்து வெளியாகும் மின்சார சக்தியானது காற்று மூலமாக, சில அடிகள் இடைவெளியில் சென்று கொண்டிருக்கும் காரில் உள்ள காயிலுக்கு செல்கிறது. காரில் உள்ள காயிலுக்குச் செல்லும் மின்சாரம் காரின் பாட்டரியை சார்ஜ் செய்துவிடும். இந்த மின்காந்த தொழில்நுட்பத்துக்கு `மேக்னடிக் ரெசொனன்ஸ் கப்லிங்’ என்று பெயர்.


கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவின் MIT தொழில்நுட்ப நிறுவனத்தில், மேக்னடிக் ரெசொனன்ஸை பயன்படுத்தி 6 அடிகள் இடைவெளியுள்ள இரு காயில்கள் மூலம் ஒரு 60 watt பல்பை எரியச் செய்தனர். முக்கியமாக, இதில் உருவாகும் மின்காந்த அலைகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் வெற்றிதான் `மேக்னடிக் ரெசொனன்ஸ் கப்ளிங்’ தொழில்நுட்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. இந்த MIT ஆய்வாளர்கள் குழு உருவாக்கியிருக்கும் ஒரு நிறுவனம், இதே தொழில்நுட்பத்தைக் கொண்டு கேரேஜில் அல்லது தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு வாகனத்துக்கு 3 kilo watts மின்சாரத்தை வயர்லெஸ் முறையில் செலுத்த முடியுமா என்று முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஆய்வாளர் ஷான்ஹுயி பேன் குழுவினர், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 6.5 அடிகள் இடைவெளியில், நெடுஞ்சாலையில் ஓடும் கார்களுக்கு 10 kilo watts மின் சாரத்தை வயர்லெஸ் முறையில் செலுத்த முடியுமா என்று முயற்சித்தனர். இந்த ஆய்வின் முதற்கட்டமாக, நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் ஓடும் கார்களுக்கு மின்சாரம் செலுத்தும் வயர்லெஸ் சார்ஜரை பிரதிபலிக்கும் வகையில் ஒரு கம்ப்யூட்டர் மாடல் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த தொழில்நுட்ப செயல்முறை மூலம் 10 kilo watts மின்சாரத்தை சுமார் 97 சதவீதம் அளவிற்கு வெற்றிகரமாக வயர்லெஸ் முறையில் செலுத்த முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. இந்த ஆய்வின் அடுத்த கட்டம், இந்த செயல்முறையை நெடுஞ்சாலைகளில் செயல்படுத்தி பார்ப்பதுதான். இந்த சோதனையிலும் வெற்றிகண்டுவிட்டால் நெடுஞ்சாலை வயர்லெஸ் கார் சார்ஜர் ரெடி!

No comments:

Powered by Blogger.