Breaking

தோலின் தண்ணீர் புகாத தன்மையும் சில நன்மைகளும்!




தோலின் தண்ணீர் புகாத தன்மையும் சில நன்மைகளும்!
www.tamilsciencenews.in
நமக்கு
கவசமாக விளங்கும் தோலின் ஆச்சரியமான பண்புகளுள் மிக மிக முக்கியமானது அதன் `வாட்டர் புரூப்’ தன்மைதான். நாம் தண்ணீரில் மூழ்கினால் கூட, உடலின் துவாரங்களை மூடிக்கொண்டு இருக்கும் வரை தண்ணீரால் நம் உடலுக்குள் நுழையவே முடியாது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
உலகில் முதல் முறையாக, தோல் உயிரணுக்களுக்கு இடையில் இருக்கும் கொழுப்பு படலத்தின் வித்தியாசமான வடிவமைப்புதான் தோலின் வாட்டர் புரூப் தன்மைக்குக் காரணம் என்பதை கண்டறிந்திருக்கிறார் ஆய்வாளர் லார்ஸ் நார்லென். சுவீடன் நாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற கரோலின்ஸ்கா ஆய்வு மையத்தில் பணிபுரியும் லார்ஸ், தோலின் மிக நுண்ணிய பகுதிகளை ஆய்வு செய்து இந்த அறிவியல் உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த ஆய்வுக்காக, ஐந்து தன்னார்வலர்களின் முழங்கை தோல் ஷேவ் செய்யப்பட்டது. பிறகு, ஷேவ் செய்யப்பட்ட தோல் திசு ஹை ப்ரஷ்ஷர் பிரீசருக்குள் 140 சென்டிகிரேடு அளவு வெப்ப நிலையில் உறைய வைக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் தோல் திசுவில் உள்ள ஒவ்வொரு அணுவும் அவை இருந்த இடத்தில் அப்படியே நிறுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு, உறைய வைத்த ஒரு வைரக் கத்தியைக் கொண்டு, தோல் திசு 25 முதல் 50 நானோ மீட்டர் தடிமன் உள்ள லேயர்களாக அறுக்கப்பட்டது. பின்னர் இந்த திசு லேயர்கள் 180 சென்டிகிரேடு வெப்ப நிலையில் வைக்கப்பட்ட எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கொண்டு ஆய்வு செய்யப்பட்டன.
நானோ மீட்டர் அளவுள்ள ஒரு திசு லேயரை அறுத்து எடுப்பதற்கே பல மாதங்கள் பிடிக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால், இதனை வெற்றிகரமாக செய்து விட்டால், தோலின் நுண்ணிய பகுதிகளை மிக துல் லியமாகப் பார்த்து விடலாம் என்கிறார் ஆய்வாளர் லார்ஸ்.
இந்த நானோ அளவுள்ள தோல் திசுவை ஆய்வு செய்த ஆய்வாளர் லார்ஸுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. தோல் உயிரணுக்களுக்கு இடையில் நிறைந்திருக்கும் கொழுப்பின் வித்தியாசமான வடிவமைப்புதான் அது.
பொதுவாக, ஒரு கொழுப்பு மூலக்கூறில் தண்ணீர் மூலக்கூறுகளை கவர்ந்து இழுக்கக்கூடிய ஒரு தலைப்பாகமும், தண்ணீருடன் ஒட்டாத தன்மையுடைய இரண்டு வால் பகுதியும் இருக்கும். இந்த இரு வால் பகுதியும் ஒரே பக்கமாய் இருப்பதால் கொழுப்பு மூலக்கூறு ஹேர்பின் போல காட்சியளிக்கும். இதனை, தலைப்பாகம் உடையாத வண்ணம் இரண்டாக பிளக்கப்பட்ட ஒரு தீக்குச்சியை போல பாவித்துக்கொள்ளலாம்.
இத்தகைய பல கொழுப்பு மூலக்கூறுகள் அவற்றின் வால் பகுதிகள் கீழ் நோக்கி இருக்கும் வண்ணம், இரண்டு லேயர்களை உடைய ஒரு ஷீட் போல இருப்பது வழக்கம். ஆனால், தோலில் உள்ள `ஸ்ட்ரேட்டம் கார்னியம்’ என்னும் பகுதியில் இருக்கும் உயிரணுக்களுக்கு இடையில் நிறைந்திருக்கும் கொழுப்புப் படலத்தில் உள்ள மூலக்கூறுகளின் வால் பகுதிகள் இரண்டும் எதிரெதிர் திசையில் இருந்தது கண்டறியப்பட்டது.

அதாவது, இரண்டாக பிளக்கப்பட்ட ஒரு தீக்குச்சியின் தலைப்பாகம் நடுவிலும், வால் பகுதிகள் எதிரெதிர் திசையிலும் இருப்பது போல! இத்தகைய ஒரு விசேஷ வடிவமைப்பின் மூலம், தண்ணீருடன் ஒட்டாத தன்மையுடைய வால் பாகங்கள் இரண்டும் மேலேயும் கீழேயும் இருக்க, தண்ணீரை கவர்ந்து இழுக்கும் தலைப் பாகம் நடுவில் வைக்கப்படு கிறது. இதனால் தண்ணீர் உள்ளே செல்வது முற்றிலும் தடைபடுகிறது. ஆக மொத்தத்தில் தோல் பகுதி வாட்டர் புரூப்பாக மாறிவிடுகிறது!
அதெல்லாம் சரி, இந்த கண்டுபிடிப்பின் மூலம் நமக்கு என்ன பயன்?
தோலின் இந்த விசேஷ வடிவமைப்பை அடிப்படையாக வைத்து ஒரு கம்ப்யூட்டர் தோல் மாதிரியை உருவாக்க இருக்கிறார்கள். இதன்மூலம், தோல் வழியாக உடலுக்குள் மருந்துகளை செலுத்துவது குறித்த ஆய்வுகளை செய்து, தற்போதுள்ள பல மருந்துகளை தோல் வழியாக, நேரடியாக ரத்த ஓட்டத்துக்குள் செலுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதன்மூலம், வாய்வழியாக உட்கொள்ளப்படும் மருந்துகள் கல்லீரல் மற்றும் குடலிலுள்ள என்சைம்களால் அழிக்கப்படுவது தவிர்க்கப்படும். இதனால் ஏற்படும் பல பின்விளைவுகளும் தடுக்கப்படும். மேலும், உடலின் பல பாகங்களில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய, சுலபமாக தோல் வழியாக மருந்துகளை செலுத்திவிடலாம்!
முக்கியமாக, தற்போதுள்ள செயற்கை தோலின் தரத்தினை மேம்படுத்தி, இயற்கையான தோலுக்கு இணையான பண்புகளுடன் அதை உருவாக்க, இந்த கண்டுபிடிப்பு பல வகையில் உதவியாக இருக்கும் என்கிறார் ஆய்வாளர் லார்ஸ்!

No comments:

Powered by Blogger.