புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி!
புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி!
புகைப்பழக்கம் இருக்கிறதே அதுவும் ஒரு வகையில் கழுதை மாதிரிதான்! புகைபிடித்து போதை ஏறும்போது `அட நல்லா யிருக்கே’ என்று தொடர்ந்தால் புற்றுநோயில் கொண்டு சேர்த்துவிடும். `ஐயய்யோ, புகைபிடித்தால் புற்றுநோய் வருமா?’ என்று புகைபழக்கத்தை விட்டாலும் சில பின் விளைவுகள் வந்து சேரும். ஆக மொத்தத்தில், முன் னாடியும் போக முடியாது பின்னாடியும் வர முடியாது.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முயன்ற ஆய்வாளர்கள் இதுவரை பல்வேறு சிகிச்சை முறைகளை உருவாக்கினார்கள். ஆனால் இந்த முறைகள் மூலமாக உடலுக்குள் செல்லும் நிக்கோடின் ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகம் என்பதால் மிக சமீபத்தில் நிக்கோடின் வாக்சின் (தடுப்பூசி) கண்டுபிடிக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக, நிக்கோடின் தடுப்பூசியும் பெரிதாக பலனளிக்கவில்லை. ஆக, நிக்கோடின் விஷயத்தில் இந்த இரண்டுமே சாத்தியப்படவில்லை. சரி, நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தினால் பலன் இருக்கிறதா பார்ப்போம் என்றும் பரிசோதித்தார்கள். இப்படி செலுத்தப் படும் ஆன்டிபாடிகள் நீண்ட நேரம் திடமாக இல்லாமல் போகவே, இந்த சிகிச்சை முறை மிகவும் காஸ்ட்லியாக மாறி பலனளிக்காமல் போனது.
இப்படியெல்லாம் தட்டுத்தடுமாறிய புகைப்பழக்க பாதிப்புகளுக்கான மருத்துவ முயற்சிகளை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வந்துவிட்டது ஜீன் தெரபி.
நிக்கோடின் ஆன்டிபாடிகள் உடலுக்குள் நீண்ட நேரம் இருந்து தொடர்ச்சியாக நிக்கோடினை அழித்துக்கொண்டிருக்க வேண்டுமானால், உடலுக்குள் ஆன்டிபாடி உற்பத்தியும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும். இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, உடலுக்குள் நிக்கோடின் ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும் ஒரு மரபணுவை பொருத்துவது சிறந்த வழி என்று முடிவு செய்தார் நியூயார்க்கில் உள்ள வெய்ல் கார்னெல் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர் ரொனால்டு கிரிஸ்டல்.
இதற்காக நிக்கோடினுக்கு எதிரான மிகவும் வலிமையான ஒரு ஆன்டிபாடியையும், அதனை உற்பத்தி செய்யும் மரபணுவையும் ஒரு எலியில் இருந்து கண்டெடுத்தனர். பின்னர் அந்த மரபணுவை ஜீன் தெரபிக்கு பயன்படும் கேரியர் எனும் அடினோ அசோசியேட்டட் வைரஸுக்குள் பொருத்தினர். அதன் பிறகு அந்த வைரஸ், நிக்கோடின் போதைக்கு அடிமையான ஒரு எலியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்ட வைரஸ் அதன் கல்லீரலுக்குள் பொருந்திய பின்னர் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடி கல்லீரலில் உற்பத்தி ஆனது. பின்னர் இந்த ஆன்டிபாடிகள் ரத்த ஓட்டத்துக்குள் கலந்தன. இந்நிலையில் இரண்டு சிகரெட்டுக்குள் இருக்கும் அளவு நிக்கோடின், வைரஸ் புகுத்தப்பட்ட எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. எலியின் உடலுக்குள் உற்பத்தியான நிக் கோடின் ஆன்டிபாடிகள் சுமார் 83 சதவீதம் நிக்கோடினை அழித்தது தெரியவந்தது. முக்கியமாக, இந்த நிக்கோடின் மூளைக்குச் செல்வதற்கு முன்பு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நிக்கோடின் போதைக்கு அடிமையான எலிகள் மந்தமாக இருக்கும். ஆனால் ஜீன் தெரபி செய்யப்பட்ட பின் நிக்கோடின் கொடுக்கப்பட்ட எலிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. மேலும், இந்த எலிகளின் இதய துடிப்பும் மிகவும் சீராக இருந்தது. ஜீன் தெரபிக்கு பிந்தைய சுமார் 18 வாரங்கள் கழித்த பிறகும், எலிகளின் கல்லீரல்கள் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, நிகோடின் போதைக்கு எதிரான ஜீன் தெரபி செய்துகொண்டால், நிக்கோடினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நீண்ட காலத்துக்கு உடலுக்குள் நீடிக்கும் என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதெல்லாம் சரி, இந்த ஜீன் தெரபி மூலம் மனித குலத்துக்கு உடனடி பலன் எதுவும் இருக்கிறதா?
தற்போது எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதர்களைக் கொண்டு நடத்தப்படும் முன்னர், குரங்குகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். மேலும், ஜீன் தெரபியில் பயன்படுத்தப்படும் அடினோ அசோசியேட்டட் வைரஸ்கள் எய்ட்ஸ் மற்றும் இறுதி நிலை புற்று நோய் ஆகிய நோய்களுக்கான ஜீன் தெரபியில் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஆபத்துகளுடன் ஒப்பிடும்போது அதிகமான பலன்கள் கிடைத்துள்ளன என்றாலும் நிக்கோடின் போதைக் கான இந்த ஜீன் தெரபியை மனிதர் கள் மீது பரிசோதிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்.
அதனால் ஆபத்தான ஜீன் தெரபியை கொண்டு நிக்கோடின் போதை அல்லது புகைப்பழக்கத்துக்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, புகைப்பழக்கத்தை துறக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது என்கிறார் பேய்லர் மருத்துவக் கல்லூரியின் மூத்த ஆய்வாளரான தாமஸ் கோஸ்டன்.
No comments: