ஆசிரியர், அலுவலர்களை கல்லூரிக்கு அழைக்கும் நிர்வாகம்..
ஆசிரியர், அலுவலர்களை கல்லூரிக்கு அழைக்கும் நிர்வாகம்..
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையும், அலுவலர்களையும் அரசு உத்தரவை மீறி பணிக்கு வரச்சொல்லுகின்றன கல்வி நிலையங்கள்.
மாணவர் சேர்க்கை தொடங்கி வகுப்புகள் வரையில் எந்தப் பணியுமே நடைபெறாத நேரத்தில், எதற்காக பணிக்கு வரச் சொல்லுகிறார்கள் என்று அதிருப்தியில் இருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
பொதுப்போக்குவரத்து இயங்க ஆரம்பிக்காத சூழலில் எப்படி பணிக்குச் செல்வது என்று அவர்கள் புலம்புகிறார்கள். கல்லூரி முதல்வர்களோ, இது தொழில்நுட்ப கல்வி இயக்குநரின் உத்தரவு என்று கூறி நழுவிக் கொள்கிறார்கள்.
இதுகுறித்து பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் பொன்.இளங்கோவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
'உயர் கல்வித்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஆசிரியர்களை பணிக்கு வரச் சொல்லி நிர்பந்திக்கவில்லை.
ஆனால், அதே நிர்வாகத்தின் கீழ் உள்ள பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களை மட்டும் பணிக்கு வரச் சொல்வது நியாயமற்ற செயல்.
மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அரசாணை எண் 217-ன் பிரிவு 3-ல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், 33 சத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என்ற உத்தரவை போட்டுக் குழப்பி, அதை கல்லூரிக்கும் நடைமுறைப்படுத்தும் முயற்சில் இறங்கியிருக்கிறது தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்.
பேரிடர் காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும்போது ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதவர்களும் கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டியதில்லை என்று 14.12.1993 நாளிட்ட கல்வித்துறை அரசாணை எண் 1144-ல் ஏற்கெனவே ஒரு ஸ்டேண்டிங் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை தவறாது பின்பற்றுமாறு 12.6.17 நாளிட்ட தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஆசிரியர்களைப் பணிக்கு வரச் சொல்வது, கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை கரோனாவின் புகலிடமாக மாற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments: