Breaking

பல கோடி நட்சத்திரங்கள் இருந்தும் விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது?


பல கோடி நட்சத்திரங்கள் இருந்தும் விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது?



பூமியின் சுழற்சியால், பகலுக்கு அடுத்த நிறுத்தமாக இரவு தினமும் வந்தே தீரும். ஒரு நாளின் முடிவாகவும், மற்றொரு நாளின் தொடக்கமாகவும் இரண்டு பணிகளைச் செய்யும் இரவு, நமக்குக் காண்பதற்கரிய காட்சிகள் பலவற்றைக் காட்டுகிறது. விண்வெளியில் தோன்றும் இரவு நேர நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கவே பல நாள்கள் பலர் ஏழு மாடிகள் வரை ஏறிய கதைகள் எல்லாம் உண்டு. தலையைத் தூக்கி வானை ரசித்து விட்டு நம் பணிக்குத் திரும்பி விடுவோம். ஏதேனும் ஒரு சமயத்தில், என்றாவது ஒரு நாள் இந்தக் கேள்வி நிச்சயம் எட்டிப் பார்த்திருக்கும். இந்த இரவு ஏன் இப்படி இருக்கிறது?
பரந்து விரியும் பேரண்டத்தில் நம் சூரியனைப் போன்ற, சூரியனை விடப் பெரிய நட்சத்திரங்கள் கூட ஏராளம் உண்டு. ஒற்றைச் சூரியனால் நம் பூமியின் ஒரு பகுதியில் பகலாகவும், வானம் பளீர் வெளிச்சத்துடன் நீல நிறமாகவும் தெரிகின்றது. அவ்வளவு கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும் போது, விண்வெளி வெளிச்சமாகத் தானே இருக்க வேண்டும்? நமக்கு இரவு என்ற ஒன்று இருக்கவே கூடாது தானே? இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான விடைகளைத் தருகிறது அறிவியல்.


பகல் எதனால் ஏற்படுகிறது?

முதலில் இரண்டாம் கேள்வியைப் பார்த்து விடுவோம். “இரவு இருக்கவே கூடாது தானே” என்பதை “பகல் ஏன் ஏற்படுகிறது” என்று எடுத்துக் கொள்வோம். சூரியனால் வெளிச்சம் ஏற்படுகிறது என்றாலும், பகலாகத் தெரியும் பூமியின் ஒரு பகுதியில், வானம் நீலம் நிறமாகத் தெரிய முக்கியக் காரணம், நம் வளிமண்டலம். இந்தக் காற்றுவெளி மண்டலத்தின் தன்மைதான் பகலை பூமியின் ஒரு பகுதி மக்களுக்குத் தருகிறது, வானை நீலமாகக் காட்டுகிறது. சூரியனின் ஒளி, பூமியின் மேல் படர்ந்துள்ள காற்றுவெளி மண்டலத்தைச் சந்திக்கும் போது ஒளிவிலகல் ஏற்பட்டு நீல நிறத்தை வானம் முழுவதும் அள்ளித் தெளிக்கிறது. ஒருவேளை நிலா அல்லது மற்ற கோள்களைப் போல நம் பூமிக்கும் வளிமண்டலம் இல்லை என்றால், இந்த ஒளிச்சிதறல் ஏற்படாது. வானமும் நீல நிறம் ஆகாது. சூரியன் இருந்தாலும் அது கறுப்பாகவே தெரியும்.
விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது? 
“கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும் போது, விண்வெளி வெளிச்சமாகத் தானே இருக்க வேண்டும்?” அடுத்த கேள்வியான இதற்குப் பல விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டை நாம் எட்டும் வரை, ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த பொதுவான கருத்து, நம் அண்டம் அளவில்லாதது. முடிவில்லாமல் நீள்கிறது. இது சாத்தியம் என்றால், வானத்தில் நாம் திரும்பும் இடமெல்லாம் நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டும். அப்படி இருக்கும் என்றால் வானம் எவ்வளவு வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்? 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள், நட்சத்திரங்களின் இடையே தூசியினால் ஆன மேகங்கள் உலவுவதால் நட்சத்திரங்களின் வெளிச்சத்தை அவை உள்வாங்கிக் கொள்வதாகக் கருதினர். அதற்குப் பின்னர் வந்தவர்கள், அப்படி அந்த மேகங்கள் நட்சத்திர வெளிச்சத்தைத் தடுத்தால், அந்த நட்சத்திரங்களை விட இந்த மேகங்கள் அதிகம் ஒளிபெறும் என்றும், இதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதற்கு ஒரு சாத்தியமான பதில் என்னவென்றால், நம் அண்டம் விரிவடைந்து கொண்டே இருந்தாலும், அதற்கு எல்லைகள் உண்டு. அதாவது ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் முடிவுற்று வெறும் கரும்போர்வை மட்டுமே இருக்கும் என்று எடுத்துக் கொண்டால், இந்த எல்லைகள் கொண்ட பேரண்டத்தை நிரப்பும் அளவிற்கு நம்மிடம் நட்சத்திரங்கள் இல்லை. இதனால்தான் நாம் பார்க்கும் பல இடங்களில் நட்சத்திரங்கள் இல்லாமல் இருக்கின்றன. எல்லா இடத்திலும் ஒளி பரவாமல் இருட்டாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் ஒரு சாரர் நினைத்திருந்தனர். ஆனால், இந்தக் கோட்பாடு, விடை தெரியாத கேள்விக்கு ஏதோ ஒரு பதில் கூறுவோம் என்பது போல தான், ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.


இது ஒளி நிகழ்த்தும் மாயாஜாலம்!

நவீன ஆராய்ச்சியின் படி இதற்கு ஓர் எளிமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு காலை நேரத்தில் ஒரு கல்லூரி அரங்கில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சூரிய வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆசிரியர் திடீரென உங்களை எழுப்பி ஒரு கேள்வி கேட்கிறார். அவர் உங்களை நோக்கி கை நீட்டுகிறார் என்று உங்களுக்குத் தெரிந்தால்தானே நீங்கள் எழுந்து நிற்க வேண்டும் எனப் புரியும்? நீங்கள் அவர் திசையில் பார்த்தாலும், அவரின் செயலை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஒளி தானே? அந்த ஒளியை உங்கள் ஆசிரியர் உள்வாங்கிப் பிரதிபலித்து, அந்தப் பிரதிபலித்த ஒளி உங்களை அடைந்தால் மட்டுமே அங்கே அவர் நின்று கொண்டிருப்பதே உங்களுக்குத் தெரியும்.
என்ன தான் ஒளி மிகவும் வேகமானது என்றாலும், அந்தப் பிரதிபலித்த ஒளி, ஆசிரியர் கையைத் தூக்கிய பிறகு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகுதான் உங்களை வந்தடையும். அந்தக் கால இடைவெளி ஒரு நொடியை, மில்லியன் கூறுகளாக வெட்டியபிறகு அதிலிருக்கும் ஒரு கூறு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் ஆசிரியருக்கும் தூரம் அதிகமாக அதிகமாக, இந்தக் கால இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து புறப்பட்ட ஒளி நம்மை அடைய எவ்வளவு நேரம் ஆகும்? இதன்படி, நாம் இன்று பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளி எப்போதே அதிலிருந்து கிளம்பிய ஒளியாக இருக்கும். நாம் பார்க்கும் நட்சத்திரம் இல்லா வானில் கூட நட்சத்திரங்கள் இருக்கலாம், அதன் ஒளி நம்மை இன்னமும் வந்து அடையவில்லை என்பதே உண்மை.
இது மட்டுமன்றி, நம் பேரண்டம் உருவாகி 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. ஒரு சில நட்சத்திரங்கள் தங்கள் ஆயுட்காலம் முடிந்து ஒளியிழந்து போயிருக்கலாம். இதனால் கூட நமக்குப் பல நட்சத்திரங்கள் தெரியாமல் போகலாம். சற்று குழப்பம் ஏற்படுத்துகிறது என்று நினைத்தால், இதோ சில முக்கியக் குறிப்புகள்.

நம் பேரண்டத்தில் அவ்வளவு கோடி நட்சத்திரங்கள் இருந்தும் வானம் ஏன் இருட்டாக இருக்கின்றது?

பகுதி 1: இருக்கும் நட்சத்திரத்தை விட நம் அண்டம் பெரியது. பிரபஞ்சத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் அளவிற்கு இங்கே நட்சத்திரங்கள் இல்லை.

பகுதி 2: தொலை தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளியிட்ட ஒளி நம்மை அடைந்தால் மட்டுமே அப்படி ஒரு நட்சத்திரம் இருப்பதே நமக்குத் தெரிய வரும். அந்த ஒளி நம்மை வந்தடையும் கால அவகாசத்தைத் தீர்மானிப்பது நமக்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இருக்கும் இடைவெளி தான்.

பகுதி 3: பல நட்சத்திரங்கள் தன் ஒளியை இழந்ததால், அது நம் கண்ணிற்கு தற்போது தெரியாமல் இருக்கலாம்.

இந்த அறிவியல் விவாதத்தைத் தத்துவ ரீதியாக முடிக்க வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். இருள் இருந்தால்தானே, நாம் ஒளியை ரசிக்க முடியும்? பேரண்டத்தின் இருட்டுதான் நம்மை நட்சத்திரங்களின் அழகை ரசிக்க வைக்கிறது. இருட்டிற்கு நன்றி!

No comments:

Powered by Blogger.