Breaking

டிசம்பர் - 10. உலக மனித உரிமை தினம் பற்றிய சிறப்பு கட்டுரை


டிசம்பர் - 10.

உலக மனித உரிமை தினம்.

நோக்கம்..

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே, மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். இது அடிப்படை உரிமை. உலக மனித உரிமை தினம் இன்று. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், அவனால் விட்டுக்கொடுக்க முடியாத, உரிமைகளை மனித உரிமை என்று சொல்கிறோம். மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் பத்தாம் தேதி, உலக மனித உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி ஐநா சபையின் மனித உரிமைக:ள் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில் 53 நாடுகள் அங்கம் பெற்றன. முதல் பணியாக, சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தக் குழு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது. இந்தப் பிரகடனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் 58 நாடுகள், 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அங்கீகாரம் வழங்கின. இந்த நாள்தான் 1950 ஆம் ஆண்டு முதல் உலக சர்வதேச மனித உரிமை நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே, மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் சமமானவர்களே. எல்லாருக்கும் சம உரிமை உண்டு. மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை அவர்களுக்கும் நாம் தர வேண்டும். யாரையும் யாரும் அடிமைப்படுத்தக் கூடாது. மனிதனின் கவுரவத்தையும் அவனின் பிரிக்க முடியாத உரிமைகளை அரிந்து ஏற்றுக்கொள்வதே அவனுக்கு அளிக்கும் சுதந்திரம், நீதி, சமாதானத்தின் அடித்தளம் என்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உரிமை என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டதும் அல்ல. ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனுடம் பிறந்ததுதான் மனித உரிமை. அதனால், ஒருவரின் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

இன்னும் சொல்லப் போனால், ஒரு குடிமகனின் மனித உரிமையைப் பறிக்க அந்த நாட்டின் அரசுக்குக்கூட அதிகாரம் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான உரிமைகளும் அடிப்படை சுதந்திரமும் உள்ளது. இவற்றை உலகுக்கு உறக்கச் சொல்லும் நாள்தான் உலக மனித உரிமை நாள்.வாழ்வுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை அனைவரும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும். உயிர் வாழ்வதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம், மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை அம்சங்கள் ஒருவன் மனிதனாக வாழ்வதற்கு உரிய அடிப்படை உரிமைகள். இவற்றையே மனித உரிமை என்று சொல்கிறோம்.நாடு, சமூகம், பொருளாதாரம், அரசியல், நீதி ஆகியவற்றில் மனிதன் மனிதனாக வாழ்வுதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். நாடு, மொழி, ஜாதி, இனம் பொருளாதாரம் போன்ற எந்தக் காரணத்தைக் காட்டியும் ஒருவனுடைய இந்த உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துவதே உலக மனித உரிமை நாள்.

No comments:

Powered by Blogger.