நவம்பர்:- 05. சர்வதேச வானியல் அறிஞரும் பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட் மறைந்த தினம்.
இன்று நினைவு நாள்:- நவம்பர்:- 05.
சர்வதேச வானியல் அறிஞரும் பால்வெளி குறித்த புரிதலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஹென்ரிக் ஊர்ட் மறைந்த தினம்.
பிறப்பு:-
நெதர்லாந்தின் ஃபிநேகர் என்ற கிராமத்தில் ஏப்ரல் -28, 1900 ஆம் ஆண்டு பிறந்தார். அப்பா ஒரு மருத்துவர். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது, குடும்பம் லைடன் அருகே வேறொரு சிற்றூரில் குடியேறியது. தந்தை ஒரு மனநல மருத்துவமனைக்குப் பொறுப்பேற்று நடத்தினார். ஜான் அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். அறிவியலிலும் வானியலிலும் நாட்டம் கொண்டார். 17-வது வயதில் கிரானிங்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார்.
உயர்-திசை வேகம் (high-velocity) கொண்ட நட்சத்திரங்களின் பண்புகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரை எழுதி 1926-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
பால்வெளி ஒரு அசுரச் சக்கரம் போல சுழல்கிறது… அண்டவெளியில் நட்சத்திரக்கூட்டங்கள் தனித்தனியாக பயணிக்கின்றன.அண்டவெளி மையத்துக்கு நெருக்கமாக உள்ளவை, தொலைவில் உள்ளவற்றைவிட வேகமாக சுழல்கின்றன என்பதையெல்லாம் கண்டறிந்தார்.
இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். ஹார்வர்ட், கொலம்பியா ஆகிய பல்கலைக்கழகங்களில் பணியாற்ற இவருக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், இவர் லைடன் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பையே ஏற்றார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இவரும் இவரது சகாக்களும் இணைந்து மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கினார்கள். இது ஹைட்ரஜனில் காணப்படும் ரேடியோ அலைகள் மற்றும் வான்வெளியில் வெகு தொலைவில் காணப்படும் விஷயங்களைக் கண்டறியவும் விண்மீன்கள் அமைப்பு, அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆராயவும் உருவாக்கப்பட்டது.
பால்வெளியின் புற வட்டத்தைக் கண்டறிந்தார். இதில் அணிதிரண்டுள்ள நட்சத்திரங்கள் ஒரு குழுவாகப் பால்வழியை முதன்மை வட்டத்தின் வெளியே சுற்றி வருகின்றன என்றார். பூமியிலிருந்து பால் வெளியின் மையம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைத் துல்லியமாக கூறினார்.
சூரியக் குடும்பத்தின் வட்டத்திலிருந்து வால்நட்சத்திரங்கள் வருவதை 1950-ல் கண்டறிந்து கூறினார். இப்பகுதி தற்போது ஊர்த் முகில் எனக் குறிப்பிடப்படுகிறது. பால்வெளியின் அண்ட ஒளிவட்டத்தை (Galactic halo) அடையாளம் கண்டார்.
விருதுகள்:-
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புகழ் வாய்ந்த வெட்லசன் பரிசு (1966),
கியோட்டோ பரிசு (1987),
பசிபிக் வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம், டச்சு அரசின் வானியல் கழகத்தின் தங்கப்பதக்கம் வென்றார்.
பிரெஞ்சு அறிவியல் கழகத்தின் ஜான்சன் பதக்கம், அமெரிக்க வானியல் கழகத்தின் கவுரவ விருது, வானியற்பியலுக்கான பால்சன் பரிசு, உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் கவுரவங்களையும் பெற்றார்.
மறைவு:-
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளராக கருதப்படுபவரும் தனது அரிய கண்டுபிடிப்புகளால் வானியலில் புரட்சியை ஏற்படுத்திய இவர், 1992-ம் ஆண்டு நவம்பர்-05 ஆம் நாள் 92-வது வயதில் மறைந்தார்.
சிறப்புகள்:-
சர்வதேச அளவில் பல வானியல் ஆராய்ச்சி அமைப்புகளுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஊர்த் சிறுகோள், ஊர்த் முகில், பால்வெளிக் கட்டமைப்பின் ஊர்த் மாறிலிகள் என பல வானியல் கண்டுபிடிப்புகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது.
No comments: