நாளை வருகிறது வளைவடிவ சூரிய கிரகணம்...நாமும் பார்ப்போம்..
வருகிறது வளைவடிவ சூரிய கிரகணம்...
த வி வெங்கடேஸ்வரன்
விக்யான் பிரச்சார், புது டெல்லி
வருகின்ற 2019 டிசம்பர் 26 அன்று காலை சுமார் 9:31க்கு சில நிமிடங்கள் வரை கோவை, ஊட்டி, திருப்பூர் போன்ற இடங்களில் வானில் ஒரு அற்புத காட்சி நிகழும். நெருப்பு வளையம் போல சூரியன் காட்சி தரும். அரிய இந்த வான் நிகழ்வை அனைவரும் பாதுகாப்பாக கண்டு களிக்க விக்யான் பிரசார், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் உட்பட பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் நிறுவனங்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
காலை சுமார் எட்டு மணிக்கு சூரிய கிரகணம் துவங்கும். கிழக்கு வானில் உதயமாகும் சூரியனின் மேற்பகுதியில் அதாவது சூரியனின் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைக்க துவங்கும். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்து பின்னர் சுமார் 11:16 (காலை) வரையில் இவ்வாறு பிறைவடிவில் காட்சி தரும். அதன் பின்னர் கிரகணம் விலகி சூரியன் பின் முன்புபோல் முழுமையாகக் காட்சி தரும். இடையில் தான் சில நிமிடங்கள் வரை தீ வளையம் போல சூரியன் அற்புதமாக காட்சி தரும். சுமார் இரண்டு நிமிடம்வரை நெருப்பு வளையம் போல தென்படும் காட்சி கண்கொள்ளா காட்சி.
தமிழக்கத்தில் கோவை, ஊட்டி, திருச்சி, புதுக்கோட்டை முதலிய இடங்களில் இந்த அற்புத காட்சி புலப்படும். சூரியனின் நடுவில் பெரிய பொட்டு வைத்தது போல் நிலவு கருமை பகுதி சூரியனின் மையத்தை மறைத்துக் கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம்போலக் காட்சி தரும். இதையே வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கன சூரிய கிரகணம் எனவும் கூறுவார்கள்.
முதலில் கிரகணம் என்றால் என்ன?
சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல் மற்றொரு வான் பொருளில் விழுவதை தான் கிரகணம் என்கிறோம். எடுத்துக்காட்டாக சூரியனை மறைத்து நிலவின் நிழல் விழும்போது அது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து அது மறையும்போது சந்திர கிரகணம்.
நிலவை போல சூரியன் சுமார் நானூறு மடங்கு பெரியது. உயரே வெகு தொலைவில் பறக்கும் விமானத்தின் உருவம் தாழ்வாக பறக்கும் கழுகின் அளவாக தென்படுவது போல பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் சந்திரன் உருவம் சற்றேறக்குறைய சமம். இரண்டும் சராசரியாக 0.5 டிகிரி பாகை கோண அளவில் தென்படும். அதாவது சுமார் 1800 ஆர்க் செகண்டு. ஜாடிக்கு ஏற்ற மூடிபோல நிலவு சூரியனை மறைக்கிறது.
பொதுவாக நிலவும் சூரியனும் ஒரே காட்சியளவில் இருக்கும் என்றாலும் சில சமயம் நிலவின் அளவு சூரியனைவிட சற்றே சிறிதாக அமையும். அப்போது சூரியனின் விளிம்பு பகுதி மட்டும் மறைபடாமல் நெருப்பு வளையம் போல தென்படும்.
நிலவு பூமியை சுற்றும் பாதை வட்டம் அல்ல. கோழிமுட்டை வடிவான நீள்வட்டம். அதேபோல பூமியும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது. எனவே நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு கூடி கூடி அதன் பின்னர் குறைந்து குறைந்து போகும். சேய்மை நிலையில் உள்ளபோது தொலைவு கூடியும், அண்மை நிலையில் உள்ளபோது குறைந்தும் போகும்.
பூமியும் சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது. எனவே சூரியனும் ஆக அருகாமை நிலையில் உள்ளபோது பெரிதாகவும், மிக தொலைவில் உள்ளபோது சிறிதாகவும் தென்படும்.
வருகின்ற டிசம்பர் 26 அன்று பூமி சூரியனுக்கு நெருக்கமாக இருக்கம். எனவே சூரியனின் தோற்றம் பெரிதாக இருக்கும். இதன் காரணமாக தோற்றஅளவில் பெரிதாக இருக்கும் சூரியனை தோற்ற அளவில் சிறிதாக இருக்கும் நிலவு மறைக்க முயலும்போது முழுதாக மறைக்க முடியாது. சூரியனின் விளிம்பு நிலவின் வட்டத்தை தாண்டி அமையும். எனவே தான் அன்று வானில் நெருப்பு வளையம் போல தென்பட்டு கண்கொள்ளாகாட்சியாக அமையும்.
தொகுப்பாய் கூறினால் டிசம்பர் 26, 2019 அன்று சூரியனின் தோற்ற கோண அளவு 1951 ஆர்க் செகண்ட்; நிலவின் அளவு 1893 ஆர்க் செகண்ட் தான். தோற்ற அளவில் பெரிய சூரியன் சிறிய நிலவு, எனவே தான் நிலவால் சூரியனை முழுமையாக மறைக்கமுடியாமல் போகிறது. மறைப்பிலிருந்து தப்பிய விளிம்பு பகுதி நெருப்பு வளையமாக காட்சி தருகிறது.
எதோ கிரகணத்தின் போது மர்மக் கதிர்கள் வருகின்றன; எனவேதான் சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் பார்க்க கூடாது என பலரும் தவறாக கருதுகின்றனர். இல்லை, கிரகணம் எனபது நிழல் தான். மரத்தின் நிழலில் இருப்பதும், நிலவின் நிழலில் இருப்பதும் ஒன்று தான். கிரகணத்தின் போது சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை. எனவே எந்தவித மர்ம கதிர்களும் வருவது இல்லை.
அப்படி என்றால் ஏன் சூரிய கிரகணத்தைப் பார்க்கும்போது பாதுகாப்புக் கண் காவலர்களை அணிய அறிவுறுத்தப்படுகிறது? சூரியனில் இருந்து வரும் நேரடி கதிர்கள் மிகவும் பிரகாசமாகவும் வெப்பமாகவும் இருப்பதை அறிவோம்.. நமது கண்கள் மிகவும் சிக்கலானவை. மேலும் உணர் உறுப்பான விழித்திரையில் உள்ள கூம்பு மற்றும் குச்சி செல்கள் குறைந்த வெளிச்சத்தில் பார்க்கவும், மின் சமிக்ஞைகளை மூளைக்கு கடத்தவும் அதன் மூலம் உருவங்களை பார்க்கவும் உதவுகின்றன. ஆகவே மிகவும் பிரகாசமான நேரடி சூரிய ஒளிக் கதிர்களைப் பார்ப்பதால் அவை நம்மை நிரந்தரமாக குருடர்களாக்கும். கிரகணம் இல்லாத நாட்களுக்கும் இது பொருந்தும். சாதாரண நாட்களில் நாம் பொதுவாகவே சூரியனை பார்ப்பது இல்லை,
சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்பது கிரகண தினத்துக்கு மட்டும் பொருந்தும் எச்சரிக்கை இல்லை. எல்லா நாட்களிலும் சூரியனை வெகு நேரம் பார்க்கக்கூடாது. எடுத்துக்காட்டாக பிரகாசமான வெளிப்புற நடைப்பயணத்திலிருந்து திடீரென ஒரு இருண்ட அறைக்குள் நுழையும்போது தற்காலிக குருட்டுத்தன்மையை நாம் அனுபவிக்க முடியும், சாதாரண நாளில் சூரியனை வெகுநேரம் பார்த்தபடி இருக்க நமக்கு எந்த முகாந்திரமும் இல்லை. கிரகணம் அன்று அதன் அற்புத காட்சியை காண ஆவல் மிகும். அவ்வளவே. எனவே தான் குறிப்பாக கிரகணத்தன்று எச்சரிக்கை செய்யப்படுகிறது.
ஆனால் இதே போன்று சந்திர கிரகணங்கள் ஏற்படும்போது ஏன் எச்சரிக்கை செய்வது இல்லை எனபதையும் உற்று நோக்க வேண்டும். சந்திர கிரகணங்கள் போது நாம் நிலவில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளியை தான் காண்கிறோம். அதன் பிரகாசம் கூடுதல் அல்ல. எனவே தான் சந்திர கிரகணத்தின் போது எந்த எச்சரிக்கையும் செய்யப்படுவது இல்லை.
கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி? நுண்துளை கேமரா (பின் ஹோல் கேமரா) கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரியனின் பிம்பத்தை திரையில் பட செய்து காண்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை. மேலும் சூரிய ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் சூரிய கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.
தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, புதுகோட்டை திருச்சி போன்ற சில இடங்களில் இந்த அற்புத காட்சியை காணலாம். பல்வேறு அறிவியல் நிறுவனங்கள், மன்றங்கள், தன்னார்வ நிறுவனங்கள் கிரகணத்தை பாதுகாப்பாக காண பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நாமும் இந்த அரிய வானவியல் நிகழ்வை கண்டு மகிழலாம்.


No comments: