Breaking

முக அழகை கெடுக்கும் முகப்பரு எப்படி உருவாகிறது என்பதை பற்றி பார்ப்போம்







நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. 

இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. 

இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. 


இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது.

மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். 

இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேரச்சேரத் தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு (Acne vulgaris). 

அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும்.

பருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணை (Blackhead) போலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும். 

இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும். 

அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர். இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும். 

பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை: கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம்.

No comments:

Powered by Blogger.